காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் ரத்ன அங்கி சேவை...


ஸ்ரீ தாத தேசிகன் சாற்று முறை உற்சவத்தை முன்னிட்டு காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் ரத்ன அங்கி சேவை உற்சவம். நவரத்ன அங்கி அணிந்து ஸ்ரீதேவி,பூதேவி, பெருந்தேவி தாயாருடன், பக்தர்களுக்கு காட்சி அளித்த வரதராஜ பெருமாள்.

108 வைணவ திவ்ய தேசங்களில் ஒன்றான உலகப் பிரசித்தி பெற்ற அத்தி வரதர் கோவில் என அழைக்கப்படும் காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் ஸ்ரீ தாத தேசிகன் சாற்று முறை உற்சவம் வெகு விமர்சையாக நடைபெற்றது.

விஜயநகர பேரரசின் ராஜ குருவாக விளங்கியவரும், காஞ்சி வரதராஜ பெருமாள் கோவிலின் ஆதிகால தர்மகத்தாவாக இருந்த ஸ்ரீதாத தேசிகனின் சேவையை போற்றும் வகையில் அவரது பிறந்த நட்சத்திரத்தில் வரதராஜ பெருமாள் ரத்ன அங்கி அணிந்து  ஸ்ரீதாத தேசிகன் சன்னதிக்கு எழுந்தருளி அருள்பாலிப்பது வழக்கம்.

அதன்படி ஸ்ரீ தாத தேசிகன் பிறந்த நட்சத்திரமான கார்த்திகை மாதம் அனுஷ நட்சத்திரத்தை ஓட்டி காஞ்சி வரதராஜ பெருமாள் இன்று நவரத்தினங்களால் ஆன அங்கி அணிந்து ரோஜா பூ மலர் மாலை சூடி, ஸ்ரீதேவி,பூதேவி, பெருந்தேவி தாயாருடன், டமாரம்மேளம், ஒலிக்க தவில்,நாதஸ்வர, வாத்தியங்கள் இசைக்க கோவில் வளாகத்தில் உலா வந்து ஸ்ரீ தாத தேசிகன் சன்னதிக்கு எழுந்தருளி சேவை சாதித்தார்.

பின்னர் வேத பாராயணம் மந்திரங்கள் ஒலிக்க பெருந்தேவி தாயார்,வரதராஜ பெருமாள், அணிந்து வந்த ரோஜா பூ மாலைகளை வழங்கி ஸ்ரீ தாத தேசிகனுக்கு  அணிவித்து சிறப்பு செய்தார்.

தாத தேதிகன் சாற்று முறை உற்சவத்தில் நவரத்தினங்கள் பதித்த ரத்தின அங்கியில் வரதராஜ பெருமாள் சேவை சாதிக்கும் காட்சியைக் காண ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோவிலுக்கு வந்து வரதராஜ பெருமாளையும், பெருந்தேவி தாயாரையும் தரிசனம் செய்து வணங்கி வழிபட்டு சென்றனர்.



Leave a Comment