குமரி பகவதியம்மன் நவராத்திரி விழா...


பிரசித்திப்பெற்ற கன்னியாகுமரி பகவதியம்மன் கோயிலில் முக்கிய விழாக்களில் ஒன்றான நவராத்திரி செப்டம்பர் 21ஆம் தேதி தொடங்கி 30ஆம் தேதி வரை 10 நாட்கள் நடைபெறுகிறது. முதல் நாள் திருவிழா 21-ஆம் தேதி அம்பாள் கொலுமண்டபத்தில் எழுந்தருளலுடன் தொடங்குகிறது. விழா நாள்களில் சிறப்பு அபிஷேகம், அன்னதானம், ஆன்மிக உரை, கலை நிகழ்ச்சிகள், அம்பாள் வீதியுலா வருதல் ஆகியன நடைபெறும். 10-ஆம் நாள் திருவிழாவான செப். 30ஆம் தேதி அதிகாலை 4.30 மணிக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற உள்ளது. அன்று தேவி வெள்ளிக் குதிரை வாகனத்தில் சிறப்பு அலங்காரத்துடன் பரிவேட்டைக்கு புறப்படுகிறார். அப்போது துப்பாக்கி ஏந்திய போலீஸார் அணிவகுப்பு மரியாதை அளிக்கப்படும். பரிவேட்டை ஊர்வலத்தின் முன் குமரி பகவதியம்மன் பக்தர்கள் சங்கம் சார்பில் யானை, குதிரை அணிவகுக்க தப்பாட்டம், தையம் ஆட்டம், செண்டைமேளம், தேவராட்டம், பொய்க்கால் குதிரையாட்டம், முத்துக்குடை ஊர்வலம் ஆகிய கலை நிகழ்வுகள் நடைபெறும். வழிநெடுகிலும் திரளான பக்தர்கள் அம்மனுக்கு சுருள் வைத்து வணங்குகின்றனர். இந்த ஊர்வலம் விவேகானந்தபுரம், சுவாமிநாதபுரம், பழத்தோட்டம், பரமார்த்தலிங்கபுரம் வழியாக மாலை 6.30 மணிக்கு மகாதானபுரம் காரியக்கார மடத்தை சென்றடையும். அங்கு அம்மனுக்கு சிறப்பு வழிபாடு நடைபெறும். இதைத் தொடர்ந்து இரவு 7 மணிக்கு அம்மன் பாணாசூரன் என்ற அரக்கனை வதம் செய்யும் பரிவேட்டை நடைபெறும். இதில் தென் மாவட்டங்களைச் சேர்ந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பார்கள். பின்னர் அங்கிருந்து பல்லக்கு வாகனத்தில் பஞ்சலிங்கபுரம், விவேகானந்தபுரம் வழியாக செல்லும் அம்மனுக்கு முக்கடல் சங்கமத்தில் ஆறாட்டு நடைபெறும். தொடர்ந்து அம்பாள் கிழக்கு வாசல் வழியாக கோயிலுக்குள் பிரவேசிப்பார்.



Leave a Comment