வங்காளத்தின் துர்கா பூஜை


 

துர்கை, லட்சுமி, சரஸ்வதி ஆகிய முப்பெரும் தேவியர்களை வேண்டி கொண்டாடப்படும் விழா நவராத்திரி. வடமாநிலங்களில் துர்கா பூஜா என்ற பெயரில் நவராத்திரி திருவிழா வெகுவிமரிசையாக கொண்டாடப்படும்.வெவ்வேறு விதமாக அம்பிகை ஒன்பது நாட்களும் பூஜிக்கப்படுகிறாள்.குறிப்பாக வங்காளத்தில் இந்த துர்கா பூஜை மிகவும் பிரசித்தம்.

 இதற்கான புராணக் கதையை நாம் தெரிந்துக்கொள்வது அவசியமாகிறது.

 தட்சன் என்கிற மன்னனுக்கு மகளாய் பிறந்த சக்தியானவள் தந்தையின் விருப்பத்திற்கு மாறாக சிவனை மணந்து கொள்ள, அதனால் தன்னுடைய தந்தைக்கும்,கணவனுக்கும் இடையே ஏற்படும் பிரச்சினைகளினால் மனம் உடைந்து தன்னை மாய்த்துக் கொள்கிறாள் சக்தி. இதனால் கோபமடைந்த சிவன், இறந்த மனைவியின் உடலை சுமந்து கொண்டு கோரதாண்டவம் ஆடினார். அப்போது விஷ்ணு சிவனை சாந்தப்படுத்த, தனது சக்கராயுதத்தினை பிரயோகித்து சக்தியின் உடலை ஐம்பத்தியோரு கூறுகளாய் சிதறச் செய்தார்.அவ்வாறு சிதறிய உடலின் பாகங்கள் விழுந்த இடங்களே தற்போதைய  ஐம்பத்தியோரு சக்தி பீடங்களாய் கருதிப் போற்றப்படுகிறது.

பின்னர் மஹாவிஷ்ணு சக்தியை மீண்டும் உயிர்ப்பித்ததாகவும், அதன் பின்னர் ஒவ்வொரு ஆண்டும் சக்தியும் அவரின் புதல்வர்களும்,புதல்விகளும் தாய் வீட்டிற்கு வரும் நிகழ்வே வங்காளத்தில் துர்கா பூஜையாக கொண்டாடப்படுகிறது என்கிறார்கள் வங்க தேசத்து மக்கள்.

                                                                             

வங்காளத்தில் மட்டுமே சக்தியின் ஐம்பத்தியோரு சக்தி பீடங்களில், பதினாறு சக்தி பீடங்கள் இருப்பதாக கூறப்படுகிறது. வங்காளிகளின் வாழ்க்கையில் ஒரு அங்கமாகவே சக்தி வழிபாடு இருக்கிறது என்றால் அது மிகையில்லை.

துர்கா பூஜை கொண்டாட்டங்களுக்காக  தற்காலிக வழிபாட்டுக் கூடங்களில் அமைக்கப்பட்டு,அதில் துர்கையின் பிரம்மாண்டமான சிலைகள் வைக்கப்பட்டிருக்கும்.காண்போரை சிலிர்ப்பூட்டும் வகையில் உயிர்ப்புடன் அமைக்கப்படும் அந்த துர்கையின் சிலைகளை அவ்வளவு எளிதில் எல்லோராலும் செய்து விட முடியாது. அதை செய்வதற்கெனவே மிகச் சிறந்த சிற்பிகள் வங்க மாநிலத்தில் அதிக எண்னிக்கையில் இருக்கிறார்கள்.

 நவராத்திரி நாட்களில் ஊரெங்கும் பெரிய பெரிய மத்தளங்களைப் போல் இருக்கும் தக் என்ற இசைக் கருவி எப்பொழுதும் எங்கும் ஒலித்துக் கொண்டே இருக்கும். இந்த பண்டிகை காலத்தில் விதவிதமான தின்பண்டங்கள் கவனத்துடன் தயாரிக்கப்பட்டு பூசையில் படைக்கப்பட்ட பின்னர் அனைவருக்கும் பகிர்ந்து கொடுக்கப்படுகிறது.

மேலும் நவராத்திரியின் முதல் நாளன்று, பூஜையறையில் மண் படுக்கையில்  பார்லி விதைகள் விதைக்கிறார்கள். முளைகட்டி வளர்ந்த பிறகு, பத்தாவது நாளில் அதை விதையுடன் பறித்து பக்தர்களுக்கு அன்னையின் பிரசாதமாக வழங்கப்படுகிறது.

 நவராத்திரியின் ஒவ்வொரு நாளும் சக்தியின் ஒவ்வொரு அம்சத்தை முன்னிறுத்தி வழிபாடுகள் நடை பெறுகிறது.விழாவின் முதல் நாளில்  குழந்தையின் அம்சமாகவும்,இரண்டாம் நாளில்  கன்னியின் அம்சமாகவும்,மூன்றாம் நாளில்  பேரிளம் பெண்ணின் அம்சமாகவும் தேவி வணங்கப்படுகிறாள். கடைசி நாள் மஹாநவமியாக கொண்டாடப்படுகிறது.அன்று  ஒன்பது கன்னிப் பெண்களுக்கும் பாத பூசை செய்து, அன்னையின் ஒன்பது வடிவங்களாக வழிபடுகிறார்கள்.

 

நவராத்திரி பெண்களை கொண்டாடும் விழாவாக மட்டுமின்றி,நம்முடைய பாரம்பரியத்தைக் காக்கும் விழாவாகவும் விளங்குகிறது.

 



Leave a Comment