நவராத்திரி பூஜை.... முக்கிய விதிமுறைகள்....


பூஜை செய்பவரும் சரி, மற்றவர்களும் சரி சந்தனம், குங்குமம் இவற்றினை வலது கை மோதிரவிரலால் மட்டுமே இட்டுக்கொள்ளவேண்டும்.

வாசனை நிறைந்த மலர்களால் மட்டுமே பூஜிக்க வேண்டும். மலர்களை நாம் முகர்ந்து பார்க்கக் கூடாது. மல்லிகை, ஜாதிமல்லி, செண்பகம், மனோரஞ்சிதம், சிகப்பு மற்றும் வெள்ளை தாமரை, அரளி, பவளமல்லி, ரோஜா, மரிக்கொழுந்து, கதிர்பச்சை, செம்பருத்தி போன்ற மலர்களை மிகவும் சுத்தமான முறையில் பயன்படுத்த வேண்டும். பூக்களின் தண்டுப் பகுதி அம்பாள் பக்கத்தில் இருக்க வேண்டும். படம், விக்ரகங்களில் அணிவிக்கப்படும் பூ மாலைகள் கண், காது போன்ற பகுதிகளை மறைக்காமல் இருக்க வேண்டும். உதிராமலும் இருக்க வேண்டும்.

தாழம்பூவினை முட்கள் இல்லாது வெட்டி எடுத்து உபயோகிக்க வேண்டும். தாமரை போன்ற பெரிய மலர்களை 1,3,9 என்ற விரிவாக்க முறையில் சமர்பிக்க வேண்டும்.

அம்பிகை பரத்யட்சமாக இருப்பதனை உணர்ந்து பய பக்தியுடன் நிதானமாய் பாதத்தில் சேர்க்க வேண்டும்.

குச்சி, காம்பு, காய்ந்த பூ, மண் இவை தவறிகூட இருக்கக் கூடாது.

நறுமண ஊதுவத்தியினை, தூப சாம்பிராணிகளை பயன்படுத்துங்கள்.

ஊதுவத்தியினை ஆள்காட்டி, கட்டைவிரலால் பிடித்து இடமிருந்து வலமாக முழு வட்டமாக மூன்று முறை சுற்ற வேண்டும்.

ஆரத்தி காண்பிப்பது நெய்தீபமாக ஏக முகமாகவும், பஞ்ச முகமாகவும் காண்பிக்க வேண்டும். இரண்டு வரிகளாவது அப்போது பாட வேண்டும். அம்பிகை கானப்பிரியை.

வீணை போன்று அனைத்து வாத்தியங்களும் அம்பிகைக்கு பிரியம் தான். அதனால்தான் நவராத்திரி காலங்களில் பாட்டு, நடனம், வாத்திய கச்சேரிகள் நடைபெறுகின்றன.

அம்பாளுக்கு புடவை, சட்டை துணி, வளையல் குங்குமம் வைத்து உபசாரம் செய்து வழிபடுங்கள்.

சித்திரை மாதத்தில் வருவது வசந்த நவராத்திரி. புரட்டாசி மாதத்தில் வருவதுசாரதா நவராத்திரி. அதிக சிறப்பாக புரட்டாசி மாதத்தில் வரும் சாரதா நவராத்திரியே வட இந்தியாவில் தசராவாகவும் தென் இந்தியாவில் நவராத் திரியாகவும் கொண்டாடப்படுகிறது.



Leave a Comment