யாரிந்த முருகன் ?! ஈடு இணையற்ற தனித்த இத்தலைவனைத் தமிழ்க் கடவுள் என்று ஏன் அழைக்கிறோம் ?!


தமிழ் எழுத்துகளாலான பிரணவம் எனும் அகர, உகர, மகரத்தின் (அ உ ம - ஒளம் -  அஉம் - ஓம்) பொருளாக விளங்குபவர். தென்னாடுடையவரும் எந்நாட்டவர்க்கும் இறைவரான சிவபெருமானுக்கும் பிரணவத்தின் இரகசியம் அறிவித்து உபதேசித்தவர்.

உலகின் தலைசிறந்த தமிழறிந்த அறிஞர்கள், அறிவியலாளர்கள், பேரறிவு பெற்ற மகான்கள், சாவற்ற  சித்தர்கள் வணங்கிப் போற்றும் பேரொளியானவர். இப்படிப் பட்டியலிட்டால் சொல்லி முடிக்க இப்பிறவி போதாத அளவுக்குப் பெரும் பெருமைகளைக் கொண்ட முருகனே தமிழ்தான். எனவே தமிழுக்கான கடவுள் அல்ல முருகப்பெருமானார். தமிழே அவர்தான்.

இன்னும் ஒருபடி மேலே சென்ற அருணகிரிநாதப் பெருமகனார், "மொய் தார் அணிகுழல் வள்ளியை வேட்டவன், முத்தமிழால் வைதாரையும் ஆங்கு வாழவைப்போன்" என்கிறார் கந்தர்  அலங்காரத்தில்.

"அதென்ன வைதாரையும் ஆங்கு வாழவைப்போன்" என்கிறார் அருணகிரிநாதர் ?!

மலர்மாலை அணிந்த வள்ளியை மணந்த முருகப்பெருமான், முத்தமிழால் வைதல் - அதாவது முத்தமிழால் திட்டினவரையும் வாழ வைக்கக்கூடிய பெருங்ருணை கொண்டவர் என்கிறார் அருணகிரிநாதப் பெருமானார்.

முருகப் பெருமானாரே கேட்டு இரசித்து நெகிழ்ந்து உருகி நிற்கும் வகையில் உள்ள அருணகிரிப் பெருமானாருக்கு அப்படிப்பட்ட பேரழகுத் தமிழை அளித்தவரே முருகப் பெருமான்தானே. ஏன், அருணகிரி நாதருக்கு தெலுங்கு, கன்னடம், இந்தி, பிரெஞ்ச், ஆங்கிலம் பாட முருகப்பெருமான் அருளவில்லை?  அவருக்குத் தெரியாத மொழிகளா இந்த உலகில் இருந்துவிட முடியும்?!

தமிழ்தான் இறை மொழி - ஒலி என்பதாலேயே ஈடு இணையற்ற கடவுளரான முருகப் பெருமான் தமிழ் போதிக்கிறார். தமிழால் தன்னைத் திட்டினாலும்கூட திட்டியவரையும் வாழ வைக்கும் பெருங்கருணை கொண்டவராகவும் இருக்கிறார் முருகப் பெருமான்.

திட்டவாவது தமிழில் பேசுக என்று உலக மக்களுக்கு உணர்த்தும் முருகப் பெருமானைத் தமிழ்க் கடவுள் என்றுதானே அழைப்பதுதானே பொருத்தமானது?!.

உலக மொழிகளில், தமிழ் சிவானுபூதியை அளிக்கவல்ல மொழி - ஒலி என்கிறார் இராமலிங்க வள்ளல் பெருமகனார். எனவே தமிழை வெறும் மொழி என்றெண்ணுவது அறியாமையே. முருகனை வணங்குவதும், வழிபடுவதும் என்பது தமிழை வணங்குதலும், வழிபடுதலுமே. தமிழை வழிபடுதல் என்பது தமிழை சரியாகப் பேசுவது என்பதே.

மானுடப் பிறப்பின் இரகசியம் அறிய, இலக்கை  முழுமையாக அடைய தமிழ் மொழி வாயிலாக மட்டுமே சாத்தியம் என்பதே பேரறிஞர்கள் நமக்கு உணர்த்தும் பெரும் பாடம்.

- வளர்மெய்யறிவான்

 



Leave a Comment