வெள்ளித்தேரில் காஞ்சி ஸ்ரீ காமாட்சியம்மன்... வண்ண வண்ண அதிர்வெட்டுகளுடன் விழா கோலாகலம்...


காஞ்சிபுரம் உலக பிரசித்திபெற்ற காஞ்சி ஸ்ரீ காமாட்சியம்மன் கோவில் மாசி மாத  பிரம்மோற்ச்சவத்தின் 9-ஆம் நாள் உற்சவத்தில், வெள்ளித்தேரில் எழுந்தருளி நான்கு ராஜவீதிகளில் திரு வீதி வலம் வந்த காமாட்சியம்பாளை வழிநெடுகிலும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள்  ஓம்சக்தி பராசக்தி என முழக்கமிட்டபடி சாமி தரிசனம் செய்தனர்.

கோவில் நகரமான காஞ்சிபுரம் மாநகரில் சக்தி பீடங்களில் முதன்மையானதும், உலகப் பிரசித்தி பெற்றதுமான  காஞ்சி ஸ்ரீ காமாட்சியம்மன் கோவிலில் மாசி மாத பிரம்மோற்சவ திருவிழாவின் 9-ஆம் நாளில் பிரபல உற்சவமான வெள்ளித் தேர் பவனி விழா வெகு விமரிசையாக நடைபெற்றது.

அதையொட்டி காமாட்சி அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்று  பட்டு உடுத்தி பல்வேறு மலர் மாலைகள் அணிந்துகொண்டு லஷ்மி, சரஸ்வதி தேவியருடன் சிறப்பு அலங்காரத்தில் காமாட்சி அம்மன் வெள்ளித்தேரில் எழுந்தருளினார்.

பின்னர் மேளதாளங்கள், வாத்தியங்கள் முழங்க பக்தர்களுக்கு காட்சியளித்தப்படி நான்கு ராஜ வீதிகளில் பக்தர்கள் வடம் பிடித்து இழுக்க பக்தர்களின் வெள்ளத்தில் காமாட்சியம்மன் வெள்ளித்தேரில் திரு வீதி உலா  வந்தார்.

வழிநெடுகிலும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் காத்திருந்து வெள்ளித் தேரில் வீதி உலா வந்த காமாட்சி அம்மனை ஓம்சக்தி பராசக்தி என முழக்கமிட்டபடி சாமி தரிசனம் செய்து வணங்கி சென்றனர். வெள்ளித்தேர் உற்சவத்தையொட்டி  பக்தர்களை கவரும் வகையில் பல வண்ண வண்ண அதிர்வெட்டுகளுடன் கூடிய வானவேடிக்கை நிகழ்ச்சிகளால் காஞ்சிபுரம் மாநகரமே விழா கோலம் பூண்டது.



Leave a Comment