சூரனைச் வதம் செய்த கந்தப் பெருமான்....


கந்தப் பெருமான் சூரனைச் சங்கரித்த பெருமையைக் கொண்டாடுவதே ஸ்கந்த சஷ்டி விரத விழாவாகும். முருகன் கோயில் கொண்டுள்ள எல்லா ஆலயங்களிலுமே ஸ்கந்தசஷ்டி விரதம் மிகச் சிறப்பாக ஆறு நாட்கள் அனுஷ்டிக்கப்படுகின்றது. ஐப்பசி மாதத்தில் வரும் வளர்பிறை சஷ்டி அன்றுதான் முருகப் பெருமான் சூரபத்மனை அழித்த நாள்.
முருகப் பெருமான் சூரசங்காரம் செய்து தேவர்களைக் காத்த அருட் செயலைக் குறிக்கும் இவ்விழாவின் ஆறாம் நாள் முருகன் ஆலயங்களில் ‘சூரன் போர்’ என்னும் சமய நிகழ்வு நாடக பாணியில் நடைபெறுவது வழக்கம்.
சூர சம்காரத்தின் முடிவில் முருகன் மா மரமாக நின்ற சூரனை தன் சக்தியாகிய வேலினால் பிளந்தார். பிளவுபட்ட மாமரம் சேவலும் மயிலுமாக மாறவும், சேவலை கொடியாகவும் மயிலை வாகனமாகவும் முருகன் ஏற்றுக்கொண்டார். இது கந்தபுராணத்தில் சொல்லப்பட்ட ஒரு நிகழ்ச்சியாகும்.
கந்தபுராணத்தில் வரும் சூரபத்மன், சிங்கமுகன், தாரகாசுரன் ஆகியோர் முறையே சைவ சித்தாந்தத்தில் பேசப்படும் ஆணவம், கன்மம், மாயை என்னும் மும்மலங்களைக் குறிப்பதாகக் கருதப்படுகின்றது. ஆன்மாவைத் துன்புறுத்தும் மலங்களின் கெடுபிடியில் இருந்து ஆன்மாவுக்கு விடுதலை அளிப்பதோடு ஆணவமலத்தின் பலத்தைக் குறைத்து அதனைத் தன் காலடியில் இறைவன் வைத்திருப்பதை உணர்த்துவதே சூர சம்காரமாகும்.
ஆறுபடை வீடுகளிலும், அனைத்து முருகன் கோயில்களிலும் இந்த ஆறு நாட்களிலும் சிறப்பான பூஜைகள் நடைபெறும். ஆறு நாட்கள் தொடர்ந்து விரதம் இருப்பவர்களும், இருக்க முடியாமல் போனவர்களும் கூட மாதந்தோறும் வரும் சுக்கில பட்சத்துச் சஷ்டியில் முருகப் பெருமானை வழிபட்டு விரதம் மேற்கொள்ளலாம்.



Leave a Comment