ரத்தின சபையான திருவாலங்காடு வடாரண்யேஸ்வரர் கோயில் ஆருத்ரா தரிசன விழா...


திருவாலங்காட்டில் உள்ளது மிகவும் பழமை வாய்ந்த வண்டார்குழலியம்மை சமேத வடாரண்யேஸ்வரர் கோவில். இக்கோவில் திருத்தணி முருகன் கோவிலுடன் இணைந்த உப கோவிலாகும். சிவபெருமான் திருநடனம் புரியும் ஐந்து சபைகளில் முதல் சபையான ரத்தின சபையை உடையதும், திருநாவுக்கரசர், சம்பந்தர், சுந்தரர் ஆகியோரால் தேவாரம் பாடல் பெற்ற சிவாலயமாகும்.

மேலும் காரைக்கால் அம்மையார் தலையால் நடந்து வந்து சிவபெருமானை தரிசித்த பேறு பெற்ற ஸ்தலமாகும்.இந்தக் கோவிலில் மார்கழி மாதம் திருவாதிரை நட்சத்திரத்தில் சுவாமிக்கு ஆருத்ரா விழா விமர்சையாக நடைபெறும். இதை தொடர்ந்து இந்த ஆண்டு நேற்று இரவு 9 மணிக்கு கோவில் தலவிருட்சமான ஆலமரத்தின் கீழ் உள்ள ஆருத்ரா  மண்டபத்தில் ஆருத்ரா  மகா அபிஷேகம் வெகு விமர்சையாக நடைபெற்றது.

இந்த ஆருத்ரா மகா அபிஷேகத்தை பக்தர்கள் காணும் வகையில் கோவில் வளாகத்தில் ஆங்காங்கே பெரிய அளவில் பந்தல்கள்   போடப்பட்டு கோவில் நிர்வாகம் சார்பில் நல்ல வசதி ஏற்படுத்தப்பட்டது. மேலும் இரவு ஒன்பது மணி முதல் அதிகாலை வரை விடிய விடிய சுவாமிக்கு பால்,தேன், வில்வப்பொடி, வாழை, பலா, பூக்கள் உள்ளிட்ட பல்வேறு வகையான பொருட்களைக் கொண்டு விடிய விடிய அபிஷேகம் நடைபெற்றது. இந்த ஆருத்ரா மகா அபிஷேகத்தை திருவள்ளூர், திருத்தணி, திருவாலங்காடு, மணவூர், அரக்கோணம், வேலூர், பூந்தமல்லி, சென்னை என பல்வேறு பகுதியில் இருந்து ஆயிரக்கணக்கான   பக்தர்கள் இரவு முழுவதும் கண்விழித்து சுவாமிக்கு அபிஷேகம் செய்வதை கண்டுளித்து  சுவாமியை மனம் உருகி வழிபட்டனர்.



Leave a Comment