சனிப் பிரதோஷத்தை மெச்சிய ஆஞ்சநேயர்


உஜ்ஜயினி நாட்டின் அரசர் சந்திரசேனன்; உஜ்ஜயினி ஈஸ்வரனான வீரமாஹாளர் மீது அதீத பக்தி கொண்டவர். ஒருமுறை இவரது அரண்மனைக்கு வந்த மாணிபத்திரர் என்ற சிவகணநாதர், மன்னனுக்கு உயரிய சிந்தாமணி ரத்தினம் ஒன்றை பரிசளித்தார்.

அந்த ரத்தினம் மிகவும் மகத்துவமானது. அதன் உன்னதத்தை அறிந்த அண்டை நாட்டு வேந்தர்கள், ரத்தினத்தை தங்களிடம் ஒப்படைக்கும்படியும் இல்லையேல் போர் மூளும் என்றும் எச்சரிக்கை விடுத்தனர். அவர்களது இந்த அறைகூவலை சந்திரசேனன் கண்டுகொள்ளவே இல்லை.
 
அதனால் கோபம் கொண்ட அந்த மன்னர்கள் பெரும்படையுடன் வந்து உஜ்ஜயினியை  முற்றுகையிட்டனர். எந்த நேரமும் போர் மூளும் அபாயம். உஜ்ஜயினி மன்னரான சந்திரசேனன் அதைப் பற்றிக் கவலைப் படவில்லை. வீரமாகாளர் கோயிலுக்குச் சென்றார். முறைப்படி பூஜை செய்து, முப்புரம் எரித்தவனை முழு மனதோடு தியானம் செய்தார். அரசர் செய்த அத்தனை பூஜைகளையும் அங்கே இருந்தபடி பார்த்துக் கொண்டிருந்தான், யாதவ குலச் சிறுவன் ஒருவன். உடனே அவன் மனதில், ‘நாமும் இதே போல பூஜை செய்ய வேண்டும்!’ என்ற எண்ணம் உண்டானது. வீடு திரும்பினான்.

மறுநாள் பொழுது விடிந்தது. சிவபூஜையை ஆரம்பித்தான். கருங்கல் ஒன்றை எடுத்து, சிவலிங்கம் போல நட்டு வைத்தான். மணலையும் பச்சை இலைகளையும் பூஜைப் பொருட்களாக எடுத்து வைத்துக் கொண்டான். ‘சந்தனம், மாலை, அபிஷேகத் தீர்த்தம், தூபம், தீபம், சாமிக்கு உண்டான ஆபரணம், ஆடை, நைவேத்திய சாதம்’ என்று சொல்லி மணலை யும் பச்சை இலைகளையும் தனித் தனியே பங்கீடு செய்து பிரித்து வைத்து கொண்டான். அவற்றால் அன்போடு அரனை பூஜை செய்தான். பூஜை முடிந்ததும் தியானத்திலும் ஆழ்ந்தான்.

நேரம் இரவு ஆனது. அவனின் தாயார் சாப்பிட அழைத்தாள். தியானத்தில் இருந்தவன், அவள் மீண்டும் மீண்டும் குரல்கொடுத்தும் பதிலே சொல்லவில்லை. ஆதலால், கோபத்துடன் வெளியே வந்தாள். அவனை நன்கு அடித்தது டன், சிவலிங்கமாக அவன் வைத்து பூஜித்த கருங்கல்லையும் பிடுங்கி எறிந்து, வீட்டுக்குள் சென்று படுத்துத் தூங்கி விட்டாள்.

அவள் மகனோ... ‘‘ஐயோ, என் ஸ்வாமியை எடுத்து எறிந்து விட்டாளே அம்மா!’’ என்று கதறித் துடித்து மயங்கி விழுந்தான். இரண்டு நாழிகை (48 நிமிடங்கள்) ஆயிற்று. அவனுக்கு மயக்கம் தெளிந்தது. மெள்ள நிதானித்து எழுந்தான். அவன் கண்களையே அவனால் நம்ப முடியவில்லை. வீடெங்கும் ரத்தினமும் தங்கமும் இறைந்து கிடந்தன. அவன் அம்மா வால் எடுத்து எறியப்பட்ட கல்லால் ஆன சிவலிங்கமும், ரத்தின மயமாக ஜொலித்துக் கொண்டிருந்தது. சிறுவன் ஆனந்தத்தில் மிதந்தான். சிறுவனின் தாயார் திடீரென்று விழித்தெழுந்தாள். வீடு முழுவதும் தங்கம் மற்றும் ரத்தின மயமாக இருந்ததைக் கண்டு வியந்தாள்.

தகவல் அரசருக்கும் எட்டியது. அரசர் உடனே ஆயர்சேரிக்குக் கிளம்பினார். அங்கே எழுந்தருளி இருந்த இறைவனை வலம் வந்து வணங்கினார். யாதவ சிறுவனை நெஞ்சோடு நெஞ்சாகத் தழுவிக் கொண்டார். ஊரார் எல்லாம் சிவ நாம கோஷம் செய்தார்கள்.

ஊருக்குள் கேட்ட மகிழ்ச்சி ஆரவாரத்தைக் கேட்டு பகை அரசர்கள் திகைப்பில் ஆழ்ந்தா ர்கள். ஒற்றர்களை அனுப்பி காரணத்தை தெரிந்து கொண்டவர்கள், சிவனருளை அறிந்து சிலிர்த்தார்கள். படைகளைத் திருப்பி அனுப்பி விட்டு, ஊருக்குள் வந்து சந்திரசேன னிடம் மன்னிப்பு வேண்டியதுடன், யாதவச் சிறுவனின் பக்திக்காகத் தோன்றி அருள் புரிந்த சிவலிங்கத் தையும் தரிசித்து மகிழ்ந் தார்கள். அனைவரும் மகிழ்ச்சியாக இருந்த அந்த நேரத்தில், ஆஞ்சநேயர் அங்கு வந்தார். அவருக்கு சகல மரியாதைகளும் செய்து வழிபட்டார் சந்திரசேனன்.

யாதவ சிறுவனை நெஞ்சோடு தழுவி அணை த்துக் கொண்டார் ஆஞ்சநேயர். ‘‘மன்னர்களே! அனைவரும் கேளுங்கள்! ஒன்றும் தெரியாத இந்தச் சிறுவனின் பூஜைக்கு மகிழ்ந்து, சிவ பெருமான் தரிசனம் தந்ததைப் பார்த்தீர்கள் அல்லவா? இதற்குக் காரணம், சந்திரசேன மகாராஜா சனிப் பிரதோஷம் அன்று சிவபெ ருமானைப் பூஜை செய்ததைப் பார்த்து, இந்தச் சிறுவனும் சிவ பூஜை செய்ததுதான். சனிப் பிரதோஷ பூஜையை தரிசித்ததனால் அடையு ம் பலன், இந்த அளவோடு நின்றுவிடாது.

இந்தச் சிறுவனின் பரம்பரையில் எட்டாவது தலைமுறையில் மஹாவிஷ்ணு, ‘கிருஷ்ணன்’ என்ற திருநாமத்துடன் அவதாரம் செய்வார். அவரை வளர்க்க இருக்கும் நந்தன் என்னும் ஆயர்கோன் ஒருவன், இந்தக் குலம் பெருமை அடையுமாறு தோன்றுவான். இன்று முதல் இந்தச் சிறுவனை ‘ஸ்ரீதரன்’ என்று அழையுங்க ள்!’’ என்ற ஆஞ்சநேயர், ஸ்ரீதரனுக்குச் சிவ பூஜை செய்ய வேண்டிய வழிமுறைகளை உபதேசித்துச் சென்றார்.

 



Leave a Comment