சகல ஐஸ்வரியங்களையும் தந்து அருள்பாலிக்கும் பரிக்கல் நரசிம்மர்...
பரிக்கல் நரசிம்மர், சக்தியும் சாந்நித்தியமும் வாய்ந்தவர். தன்னை நாடி வரும் பக்தர்களின் எதிர்ப்பையெல்லாம் நீக்கி அருளுகிறார். மனோபயங்களையும் மனக்கிலேசங்களையும் போக்கி அருளுகிறார். தடைப்பட்ட காரியங்களையும் நடத்தி அருளுகிறார். இல்லத்தில் லக்ஷ்மி கடாட்சத்துடன் திகழச் செய்து, சகல ஐஸ்வரியங்களையும் தந்து அருள்பாலிப்பார் லக்ஷ்மி நரசிம்மர் என்கிறார்கள் ஆச்சார்யர்கள்.
விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள முக்கியமான திருத்தலம்... பரிக்கல். இங்கே உள்ள ஸ்ரீநரசிம்மர், சக்தியும் சாந்நித்தியமும் கொண்டவர். தங்கம் வெள்ளி, இரும்பாலான கோட்டைகளை அமைத்து மூன்று புறங்களிலும் ஆண்டு வந்த தாரகாட்சன், கமலாட்சன், வித்யுமன்மாலி என்னும் மூன்று அசுரர்கள் மக்களைத் துன்புறுத்தி வாழ்ந்து வந்தனர். மூன்று அசுரர்களையும் அவர்கள் முப்புரக் கோட்டைகளையும் சிவபெருமான் எரித்துச் சாம்பலாக்கினார். இந்தத் திரிபுர தகனத்திற்கு திருமால் அம்பாக இருந்து உதவினார் என்கிறது திருவதிகைப்புராணம்.
இந்த மூன்று அசுரர்களுக்கும் தளபதியாக இருந்த பரிகலாசூரன் மனித உடலும் குதிரை முகத்தையும் கொண்டவன். திரிபுர தகன நிகழ்வின் போது தப்பித்துச் சென்ற இந்த பரிகலாசூரன், கிருஷ்ணாரண்யங்களில் ஓன்றான திருமுதுகுன்றம் எனும் விருத்தாசலம் பகுதிக்குள் மறைந்து கொண்டான் என்கிறது ஸ்தல புராணம்.
இந்தப் பகுதியை, வசந்தராஜன் எனும் குறுநில மன்னன் ஆட்சி செய்து வந்தான். மிகுந்த திருமால் பக்தன். இவனுடைய ஆளுகைக்குக் கீழிருந்த பரிக்கல் பகுதி இருந்தது.நரசிம்ம மூர்த்திக்கு இங்கே ஆலயம் எழுப்ப விரும்பினான். அதற்கான திருப்பணிகளை மேற்கொண்டான். இதற்காக, எல்லைப் பகுதிகளில் காவலுக்கு நிறுத்திவைக்கப்பட்டிருந்த ஒரு பிரிவினரை ஆலயப் பணிகளில் ஈடுபடுத்தினான்.
அந்த தருணத்தில் தான், பரிகலாசூரன் தன் மாயப்படையுடன் வந்து பரிக்கல் உள்ளிட்ட பகுதியை அழித்தான். மக்களை ஓடஓடவிரட்டினான். மன்னனின் படைகளை அழித்தான். குதிரைகளையும் மாடு கன்றுகளையும் அழித்தான். மன்னனின் பெற்றோரை, உறவினர்களையெல்லாம் அழித்தான். இவற்றை அபசகுனமாகப் பார்த்தான் மன்னன். ஆலயம் எழுப்பும் பணியை தற்காலிகமாக ஒத்திவைத்தான். சிறிதுகாலம் கழித்து, தன் ராஜகுருவிடம் உத்தரவு வேண்டினான்.இந்த முறை வேறொரு இடத்தில் ஆலயம் எழுப்ப இடம் தேர்வு செய்து கொடுத்தார் ராஜகுரு. மேலும் ஆலயம் எழுப்புவதற்கான சாஸ்திர வழிமுறைகளையும் வகுத்துக் கொடுத்தார்.
அதன்படி, திருப்பணி ஆரம்பிக்கும் முன்பு, யாகம் நடத்தப்பட்டது. அந்த யாகத்துக்கு அசுரக்கூட்டம் இடையூறு செய்யாமல் இருக்க வேண்டும் என்பதற்காக, மன்னனின் கையில் கங்கணம் கட்டப்பட்டது. ’நானே கடவுள். என்னை வணங்கினால் உங்களை அழிக்காமல் விட்டுச் செல்வேன்’ என்று எச்சரித்தான் அசுரன். ஆனால் ‘நரசிம்மரே என் கடவுள். அவரின் திருவடியில் மண்டியிடு. உனக்கும் உன் கூட்டத்துக்கும் மோட்சம் கிடைக்கும்’ என உறுதியாகச் சொன்னான் மன்னன்.
அசுரன் கோபமானான். யாகத்தைக் குலைத்துப் போட ஆரம்பித்தான். சர்வ வல்லமை கொண்ட கோடரியால், மன்னனின் தலையைப் பிளந்தான் அசுரன். அப்போது மன்னனின் உடலில் இருந்து புறப்பட்டு வந்த நரசிங்கப் பெருமாள், அசுரனை இரண்டாகப் பிளந்தார். துவம்சம் செய்து அழித்தார் என்கிறது ஸ்தல புராணம்.
நரசிம்மப் பெருமானின் திருவருளால் வசந்தராஜன் உயிர்த்தெழுந்தான். வசந்தராஜன் நரசிங்கப் பெருமானின் அகோர விஸ்வரூபத்தைத் தரிசித்து மகிழ்ந்தான். பக்தர்களின் குறையகற்றும் எம்பிரானே. அடியேனுக்கு அருள்புரிந்தீர்கள். என் பெரும் பாக்கியம்’ என வேண்டினான்.
’என்னோடு யாகத்தில் ஈடுபட்ட அனைவரையும் உயிர் பெறச் செய்யுங்கள் சுவாமி. திருமகளுடன் தாங்கள் இங்கே சாந்த மூர்த்தியாக எழுந்தருளி, பக்தர்களுக்கு அருள்புரிய வேண்டும்’ என வேண்டுகோள்விடுத்தான் மன்னன். அதன்படியே சாந்தமூர்த்தியாக திருக்காட்சி தந்தருளினார் நரசிம்ம மூர்த்தி. அதுமட்டுமின்றி, லக்ஷ்மி நரசிம்மராக அங்கே கோயில்கொண்டார்.
பரிகலாசுரன் எனும் அரக்கனை அழித்த இடம், பரிகலபுரம் என்றாகி, பின்னர் பரிக்கல் என்றாயிற்று. பரிக்கல் நரசிம்மர், சக்தியும் சாந்நித்தியமும் வாய்ந்தவர். தன்னை நாடி வரும் பக்தர்களின் எதிர்ப்பையெல்லாம் நீக்கி அருளுகிறார். மனோபயங்களையும் மனக்கிலேசங்களையும் போக்கி அருளுகிறார். தடைப்பட்ட காரியங்களையும் நடத்தி அருளுகிறார். இல்லத்தில் லக்ஷ்மி கடாட்சத்துடன் திகழச் செய்து, சகல ஐஸ்வரியங்களையும் தந்து அருள்பாலிப்பார் லக்ஷ்மி நரசிம்மர் என்கிறார்கள் ஆச்சார்யர்கள்.
Leave a Comment