முப்பெரும் சக்தி ஒன்றிணையும் நவராத்திரி....தெரிந்ததும்...! தெரியாததும்...!


துர்க்கை, லட்சுமி, சரஸ்வதிஎன்ற முப்பெரும் சக்தி  ஒன்றிணைந்து மகிஷாசுரமர்த்தினியாக  உருவெடுத்து மகிஷனை அழித்ததே சாரதா நவராத்திரி.

நவராத்திரி 9 நாட்களும் அன்னையை பூஜிக்க முடியாதவர்கள் சப்தமி, அஷ்டமி, நவமி அதாவது 7, 8,9வது  நாட்களில் வழிபடலாம். அதுவும் முடியாதவர்கள் 8-வது நாளான  அஷ்டமி அன்றாவது  நிச்சயம் தேவியை ஆராதிக்க வேண்டும்.

 நவராத்திரி நாட்களில் வீட்டுக்கு வரும் பெண்களை அம்பிகையாகவே நினைத்து கவுரவிக்க வேண்டும். அவர்களுக்கு தாம்பூலம், மஞ்சள், கண்ணாடி, சீப்பு, குங்குமச் சிமிழ், தேங்காய், பழம், புத்தகங்கள், ரவிக்கைத் துணி கொடுத்து மரியாதை செய்யலாம்.

நவராத்திரி 9 நாட்களும் 9 கன்னியரை சக்தியாக பூஜிப்பதும் ,தினமும் 9 பெண்களுக்கு நலங்கு வைத்து மஞ்சளிட்டு அன்னதானம் கொடுப்பதும் தேவியை மகிழ்விக்கும்.

நவராத்திரி முதல் நாளன்று ஒருவர், 2-வது நாள் ரெண்டு பேர் என்று அதிகரித்து 9-வது நாள் 9 பேரை பூஜிப்பது நல்லது.

மைசூரில் நவராத்திரியுடன் சேர்த்து  10-வது நாளான விஜயதசமியையும் சேர்த்து கொண்டாடுகிறார்கள். 10-வது நாள் தசமி என்பதால் அன்றைய தினம் தசராத்திரி என்கிறார்கள். அதுவே சுருக்கமாக தசரா என்று அழைக்கப்படுகிறது.

 மேற்கு வங்கத்தில் நவராத்திரியை துர்க்கா பூஜை, காளி பூஜை என்றும்ம,மிகப்பெரிய விழாவாகக் கொண்டாடுகிறார்கள்.

 உத்தரபிரதேசம், டெல்லி, பஞ்சாப், அரியானா மாநிலங்களில் விஜயதசமி தினத்தன்று ராவணனை ராமபிரான் அழித்ததை நினைவு கூறும் வகையில், "ராம்லீலா'' கொண்டாடுகிறார்கள்.

 நவராத்திரி நாட்களில் தேவி மகாத்மியம் தேவி பாகவதம் படிப்பதும், கேட்பதும் நமது பாவங்களை விரட்டும்.

நவராத்திரி கடைசி நாளன்று துர்க்கை இமயமலைக்கு திரும்பிச் செல்வதாக ஐதீகம்.அதனால், வட மாநிலங்களில் துர்க்கை சிலைகளை கங்கையில் போடும் வழக்கம் உள்ளது.

ஒரு காலத்தில் ,நவராத்திரி பூஜையின் போது எருமை மாடுகளைப் பலி கொடுக்கும் வழக்கம் மேற்கு வங்கத்தில் இருந்தது.

 சங்கீதப் பிரியையான அம்பிகையை மகிழ்விக்க ,நவராத்திரி நாட்களில் தினமும் ஏதாவது ஒரு பாடலாவது பாடினால் நலம்.

இந்தியாவில் சரஸ்வதி தேவிக்கு இரண்டே இரண்டு இடங்களில் தான் கோவில் உள்ளது. ஒன்று தமிழ்நாட்டில் உள்ள கூத்தனூர், மற்றொன்று ஆந்திராவில் பாசர் என்னும் கிராமத்தில் உள்ளது.

தமிழ்நாட்டில் நவராத்திரி கொலு வைக்கப்படுவது போல ஜப்பானிலும் பொம்மை கொலுவில், நம்மூர் சரஸ்வதி போல பெண்-டென் என்ற தேவதையை வணங்குகிறார்கள். அந்த தேவதையும் சரஸ்வதி வைத்திருப்பது போல கையில் புத்தகம் வைத்திருப்பது குறிப்பிடத்தக்கது.

 "ஓம் ஸ்ரீமகா சரஸ்வதி சரணம்'' என்ற நாமத்தை மாணவ-மாணவிகள் தினமும் 9 தடவையும், வேலையில் இருப்பவர்கள் 18 தடவையும் முக்கிய பொறுப்புகளில் இருப்பவர்கள் 108 தடவையும் சொல்லி வந்தால் பொன்,பொருள் சேர்க்கையுடன் புத்திக் கூர்மை உண்டாகும்.

சந்திரகுப்தர் ஆட்சிக் காலத்தில் நவராத்திரி விழா ஒரு வீர விழாவாகக் கொண்டாடப்பட்டதாக அறிகிறோம்.மேலும் அக்பர் காலத்தில் தான்  தசரா திருவிழா கோலாகல நிலைக்கு மாறியது.

காளி வழிபாடு  மேற்கு வங்க மக்கள் மத்தியில் மிகவும் முக்கியம் அம்மாநில மக்கள் சக்தி உபாசகர்கள் என்று அழைக்கப்படுகிறார்கள்.

குஜராத்தில் நவராத்திரியின்  9 நாட்களும் பெண்கள் கும்மியடித்து ஆடும் கார்பா நடனம் சிறப்பு வாய்ந்தது.

நவராத்திரி கோலத்தை செம்மண் கலந்து போட்டால், அம்பாள் மனமகிழ்ந்து நம் இல்லம் தேடி வருவாள்.



Leave a Comment