ஆடி செவ்வாய் தேடிக் குளி
ஆடியில் அத்தனை நாளுமே விசேஷம். எனினும் செவ்வாய், வெள்ளி, ஞாயிற்றுக்கிழமைகள் அம்பிகைக்கு ஏற்றவை. `ஆடி செவ்வாய் தேடிக் குளி' என்பது ஆன்றோர் வாக்கு.
ஆடி மாதத்தில் வரும் செவ்வாய், வெள்ளிகளில் ஓளவையார் விரதமிருப்பது பெண்களின் வழக்கம். ஆடி வெள்ளி, செவ்வாய், ஞாயிறு தவிர ஆடி அமாவாசை, ஆடிப்பூரம், ஆடி கிருத்திகை, ஆடித்தபசு, வியாச பௌர்ணமி, ஆடிப்பெருக்கு, வரலட்சுமி விரதம், கருட பஞ்சமி, ஆண்டாள் அவதார தினம், ஹயக்ரீவர் ஜயந்தி, கோவர்த்தன விரதம், குமார சஷ்டி, வாராஹி விரதம் என இந்த மாதம் முழுவதும் பண்டிகைகளும் விரதங்களும் நிறைந்து காணப்படும்.
அது மட்டுமா? தெருவெங்கும் இருக்கும் அம்மன் ஆலயங்களில் ஞாயிற்றுக்கிழமைகள் களைகட்டும். கரகம் எடுத்தல், பால்குடம் எடுத்தல், பொங்கல் வைத்து வழிபடுதல், கங்கா - காளி வேடமிட்டு ஆடுதல், தீ மிதித்தல், கூழ் ஊற்றுதல், பம்பை உடுக்கை ஒலிக்க சாமியாடுதல் எனத் தமிழகம் எங்குமே பக்திப் பெருக்கெடுக்கும் மாதமும் ஆடிதான். விண்ணுலகில் இருந்த வேப்ப மரம் மண்ணுலகம் வந்த அதிசயமும் இந்த மாதத்தில் நடந்ததுதான்.
Leave a Comment