திருப்பதி செல்லும் பக்தர்களுக்கு நற்செய்தி... இலவச தரிசனத்திற்கு இனி முன்பதிவு தேவையில்லை 


திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க பக்தர்கள் வருகை அதிகரித்துள்ள காரணத்தால் இலவச தரிசனத்திற்கு டோக்கன்கள்  வழங்கும் நடைமுறை ரத்து செய்யப்பட்டுள்ளது. திருமலைக்கு வரும் பக்தர்கள் ஏழுமலையானை இலவசமாக வழிபட திருமலை திருப்பதி தேவஸ்தானம் திருப்பதியில் உள்ள கவுண்டர்களில் இலவச தரிசன டோக்கன்களை வழங்கி வந்தது.

நாள் ஒன்றுக்கு 25 ஆயிரம் அல்லது 30 ஆயிரம் என்ற எண்ணிக்கையில் இலவச தரிசன டோக்கன்கள் வழங்கப்பட்டன. அவற்றை பெறுவதற்காக இன்று ஒரே நாளில் மட்டும் சுமார் 75 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் குவிந்தனர். இதனால் பல்வேறு பிரச்சினைகள் ஏற்பட்டன.

 மேலும் ஒரே நாளில் 75  ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் இலவச தரிசன டோக்கன் வாங்க வருவதால் அவர்களில் சுமார் 50 ஆயிரம் பக்தர்களுக்கு டோக்கன்கள் கிடைக்காத நிலை ஏற்படுகிறது. இதனால் மேலும் ஓரிரு நாட்கள் காத்திருந்து டோக்கன்களை வாங்கி சாமி கும்பிட வேண்டிய நிலை அவர்களுக்கு ஏற்படுகிறது.

 தரிசன டிக்கெட்டுகள் இல்லாத பக்தர்களை தேவஸ்தான நிர்வாகம் இன்று மதியம் வரை திருப்பதி மலைக்கு செல்ல அனுமதிக்காமல் இருந்து வந்தது. இதனால் டோக்கன்கள் கிடைக்காத பக்தர்கள் திருப்பதி மலைக்கு செல்ல இயலாமலும், திருப்பதியில் ஓரிரு நாட்கள் தங்கி,சாப்பிட்டு ஏழுமலையானை வழிபடுவதில் பொருளாதார சிக்கல்களை சந்திக்கும் நிலை ஏற்பட்டு வந்தது.

இந்த நிலையில் இன்று முதல் டிக்கெட் இல்லாத பக்தர்களையும் திருமலை செல்ல தேவஸ்தானம் அனுமதி அளித்துள்ளது. மேலும்  தரிசன டோக்கன்கள் மூலம் ஏழுமலையானை இலவசமாக தரிசிக்கும் நடைமுறையையும் தேவஸ்தானம் ரத்து செய்துள்ளது. எனவே இனிமேல் பக்தர்கள் ஏற்கனவே வழக்கத்தில் இருந்த நடைமுறையின் படி நேராக திருப்பதி மலைக்கு சென்று கூண்டுக்குள் அடைபட்டுக் கிடந்து ஏழுமலையானை வழிபடலாம்.



Leave a Comment