கஷ்டங்கள் போக்கும் தை கிருத்திகை வழிபாடு


தை மாதம் என்பது வழிபாட்டுக்கான அற்புதம். தை மாதத்தில் இயற்கையையும் வணங்குகிறோம். கால்நடைகளையும் வணங்கி வழிபடுகிறோம். தை மாதத்தில்தான் முருகக் கடவுளுக்கு பூசத்திருவிழா விமரிசையாக நடைபெறுகிறது.

திதியில் சஷ்டி திதி முருகக் கடவுளுக்கு உகந்த நாள். மாதந்தோறும் வருகிற சஷ்டியில் விரதம் மேற்கொண்டு முருகக் கடவுளை தரிசித்து வணங்கிச் செல்வார்கள் பக்தர்கள். அதேபோல், நட்சத்திரங்களின் அடிப்படையிலும் முருகக் கடவுளுக்கு உரிய தினங்கள் இருக்கின்றன.

பங்குனி மாதத்தின் உத்திரம் நட்சத்திரநாளில் முருகக் கடவுள் குடிகொண்டிருக்கும் ஆலயங்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெறும். அதேபோல் வைகாசி மாதத்தில் வருகிற விசாகம், கந்தனுக்கு உகந்தநாள். இந்தநாளிலும் வேலவனை தரிசித்து வணங்குவார்கள்.

அதேபோல், நட்சத்திரங்களில் கிருத்திகை நட்சத்திரம் மிக மிக முக்கியமான நட்சத்திர நாள். மாதந்தோறும் வருகிற கிருத்திகை நட்சத்திர நாள் விசேஷமானது. குறிப்பாக, கார்த்திகேயனை வணங்குவதற்கு உரிய மிக முக்கிய தினமாக தை கிருத்திகை நட்சத்திர நாளும் ஆடிக்கிருத்திகை நட்சத்திர நாளும் மகோன்னதமான பலன்களைத் தந்தருளக் கூடிய நாட்கள். உத்தராயன புண்ய காலத்தின் தொடக்க மாதத்தில் வருகிற கிருத்திகையும் தட்சிணாயன புண்ய காலத்தில் வருகிற கிருத்திகையும் மும்மடங்கு பலன்களைத் தரக்கூடியது என்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள்.

நாளைய தினம் 9ம் தேதி செவ்வாய் கிழமை தை மாத கிருத்திகை. இந்த அற்புதமான நாளில், அருகில் உள்ள முருகப் பெருமான் குடிகொண்டிருக்கும் கோயிலுக்கோ, முருகப்பெருமான் சந்நிதி கொண்டிருக்கும் கோயிலுக்கோ சென்று மனம் குளிர தரிசியுங்கள். மனதார பிரார்த்தனை செய்யுங்கள்.

வீட்டில் சர்க்கரைப் பொங்கல் அல்லது எலுமிச்சை சாதம் நைவேத்தியம் செய்து வழிபடுவதும் பிரசாதத்தை அக்கம்பக்கத்தாருக்கு வழங்குவதும் இல்லத்தில் சுபிட்சத்தை உண்டாக்கும்.

உங்கள் வேதனைகளையெல்லாம் போக்கி அருளுவான் வேலவன். கஷ்டங்களையெல்லாம் அகறி அருளுவான் கந்தகுமாரன். குறைகளையெல்லாம் நிவர்த்தி செய்து தந்தருளுவான் தணிகைவேலன்
 



Leave a Comment