முருகன் அழித்த ஆறு பகைகள் எது ?


 

சரவணப் பொய்கையில் உதித்தவன் ஆகையால் சரவண பவன் என்று அழைக்கப்பட்டான். கார்த்திகை பெண்களால் வளர்க்கப்பட்டதால் கார்த்திகேயன் என்றும் சக்தியினால் ஆறு உருவமும் ஓர் உருவமாக ஆக்கப்பட்டதால் கந்தன் என்றும் பெயர் கொண்டான். மயிலில் சஞ்சரிப்பவன் என்பதால்  முருகனுக்கு விசாகன் என்றும் ஒரு பெயர் உண்டு.

சஷ்டி, விசாகம், கார்த்திகை, திங்கள், செவ்வாய், ஆகிய நாட்கள் முருகப் பெருமானுக்கு  உகந்த நாட்கள் ஆகும். முருகப் பெருமானுக்கு உகந்த மலர்கள் முல்லை, சாமந்தி, ரோஜா, காந்தன் முதலியவை ஆகும். முருகனின் மூலமந்திரம் ஓம்சரவணபவாய நம என்பதாகும்.

நம் அனைவரின் மனதிலும் நீங்கா புகழ்ப் பெற்ற கந்தர் சஷ்டி கவசத்தை எழுதியவர் தேவராயன் ஆவார்.

பிற கடவுள்களுக்கு இல்லாத சிறப்பு ஒன்று முருகனுக்கு உள்ளது. அது பிரமசரிய-கிருகஸ்த-சந்நியாசக் கோலங்களில்முருகனை மட்டுமே காண முடியும்.

ஆறு முகனான முருகன் அழித்த ஆறு பகைவர்கள் வேறு எங்கோ இல்லை. நம் மனதில் உறைந்திருக்கும் ஆணவம், கன்மம், குரோதம், லோபம், மதம், மாச்சர்யம் தான்.

 முக்கண்ணன் மகன் ஆறுமுகன் போர் புரிந்து அசுரர்களை அழித்த இடம் மூன்றாகும். அவை ,சூரபத்மனை வதம் செய்த திருச்செந்தூர், தாரகாசுரனை வதம் செய்த திருப்பரங்குன்றம், சிங்க முகாசுரனை வதம்செய்த போரூர் ஆகும்.

சூரனை வதம் செய்யும் போது அவனோடு மோதியதால் ஏற்பட்ட பள்ளம்,இன்றும் திருத்தணி சுப்பிரமணிய சுவாமி கோயில் மூலவரின் நெஞ்சில் இருப்பதைக் காண முடியும்.

ஸ்ரீசுப்பிரமண்ய அஷ்டகத்தை  செவ்வாய் தோஷம் உள்ளவர்கள் அதிகாலையில் குளித்து முடித்துத் தூய்மையுடன் ஓதினால் தோஷம் விலகி நன்மை உண்டாகும்.

முருகப்பெருமானின் வலப்புற ஆறு கரங்களில் அபயகரம்,கோழிக்கொடி, வச்சிரம், அங்குசம், அம்பு, வேல் என்ற ஆறு ஆயுதங்களும், இடப்புற ஆறு கரங்களில் வரமளிக்கும் கை, தாமரை, மணி, மழு, தண்டாயுதம், வில் போன்றவையும் காணப்படுகிறது.

 ஈரோடு அருகே வெண்ணைமலையில்  முருகன் தன்னந்தனியனாகத்  தண்டாயுதபாணியாகக் காட்சியளிக்கிறார்.

கார்த்திகைப் பெண்கள் சீராட்டி வளர்த்த முருகனின் பெருமைகளை பாராட்டி  இறைபணிச் செய்தவர்கள்  அகத்தியர், அருணகிரி நாதர், ஒளவையார், பாம்பன் சுவாமிகள், அப்பர் அடிகளார், நக்கீரர், முசுகுந்தர்,சிகண்டி முனிவர், குணசீலர், முருகம்மையார்,திருமுருக கிருபானந்த வாரியார், வள்ளிமலைச் சுவாமிகள், குன்றக்குடி அடிகளார் ஆவார்கள்.

திருப்பங்குன்றத்தில் உள்ள பிரம்மகூபம் என்ற சந்தியாசிக் கிணற்று நீரைத்தான் முருகப் பெருமானின்  அபிஷேகத்திற்காகப் பயன்படுகிறது. இக்கிணற்று நீரில் குளிப்போருக்கு முருகனது அருளால் வெண்குஷ்டம், நீரிழிவு போன்ற நோய்களும் நீங்குகின்றன என்பது அதிசயமாகும்.

திருச்செந்தூரில் நடைபெறும் ஆவணித் திருவிழாவின் 7-ஆம் நாள் விழாவில் தங்கப் பல்லகக்கில் எழுந்தளும் முருகப் பெருமான் முன்புறம் ஆறுமுகனின் தோற்றத்திலும், பின்புறம் நடராஜர் தோற்றத்திலும் காட்சி அளிப்பது சிறப்பாகும்.

 கந்தபுராணத்தில் வரும் சுப்பிரமணிய ஸ்தோத்திரம் தினசரி அதிகாலையில் படிப்பவர்களது அனைத்துப் பாவங்களும் நிவர்த்தியாகும் என்பது நம்பிக்கை.

முருகப் பெருமானின் திருவருளால் சாப விமோசனம் பெற்ற பராசர முனிவரின் ஆறு புதல்வர்கள் தப்தர், அனந்தர், நந்தி, சதுர்முகர், சக்ரபாணி, மாலி முதலியோர் இவர்கள் மீனாய் இருந்து, முருகன் அருளால் மீண்டும் மனிதர் ஆகினர் என்கிறது புராணம்.

கழுகுமலை, திருக்கழுக்குன்றம், குன்றக்குடி, குடுமியான்மலை,சித்தன்னவாசல், வள்ளிக் கோயில், மாமல்லபுரம் ஆகியவை தமிழகத்தில் முருகனுக்குக்கான குடவரைக் கோயில்கள் உள்ள இடங்கள் ஆகும்.

மலேசியாவில் உள்ள கோலாலம்பூரில் இருந்து 18 கி.மீ. தூரத்தில் உள்ள பத்துமலை என்ற பெரியமலை மீது உள்ள முருகன் கோயில் மிக விசேஷம்.

 

                                                                              

முருகப் பெருமானுக்காக முதலாம் ஆதித்த சோழன் கட்டிய திருக்கோவில் புதுக்கோட்டைமாவட்டத்தில் உள்ள ஒற்றைக் கண்ணூரில் உள்ளது. இந்தக் கோவிலில் முருகனுக்கு யானை வாகனமாக உள்ளது. ஒரு திருக்கரத்தில் ஜபமாலையும், மறுகையில் சின்முத்திரையும் கூடிய நிலையில் இங்கே அருள் பாலிக்கிறார்.

நான்முகனுக்குப் பதில் முருகன் சிறிது காலம் படைப்புத் தொழிலையும் செய்திருக்கிறார் என்பதை  உணர்த்தும் வகையில் திண்டுக்கல்லில் இருந்து ஏழு மைல் தூரத்தில் உள்ள சின்னாளப்பட்டியில் நான்கு தலையுள்ள முருகன் ஆலயம் அமைந்துள்ளது.

சென்னை-நெல்லூர் வழியில் பொன்னேரிக்கு 20 கி.மீ. தூரமுள்ள  சிறுவாபுரி முருகனுக்கு ,புதுமனை புகுவோர் பால் அபிஷேகம் செய்தால் வீட்டில் சகல பாக்கியங்களும் முருகனால் உண்டாகும்.

வேறு எங்கும் இல்லாதபடிக்கு தெய்வானை கிரீடத்துடனும் வள்ளிக் குறத்தி கொடையுடனும் காட்சி தரும் முருகன் பொன்னேரிக்கு அருகில் உள்ள பெரும்பேடு கோவிலில் காட்சி தருகிறார்.

வேலுண்டு வினையில்லை ...

மயிலுண்டு பயமில்லை...



Leave a Comment