கருடன் வானில் வட்டமிட.... கோலாகலமாக நடைபெற்ற வடபழனி முருகன் கோவில் கும்பாபிஷேகம்


சென்னை வடபழனி முருகன் கோவிலில் 15 ஆண்டுகளுக்குப் பிறகு இன்று கும்பாபிஷேக விழா ஆகம விதிப்படி வெகு விமரிசையாக நடைபெற்றது. கும்பாபிஷேக விழாவிற்காக முருகப்பெருமானுக்கு 33 ஹோம குண்டங்கள், பரிவார தெய்வங்களுக்கு 75 ஹோம குண்டங்கள் ஆக மொத்தம் 108 குண்டங்களுடன் பிரமாண்டமான முறையில் யாகசாலை அமைக்கப்பட்டு பூஜை நடத்தப்பட்டது. அதில், கங்கை, யமுனை, துங்கபத்ரா, காவிரி, கிருஷ்ணா, கோதாவரி, தாமிரபரணி உள்ளிட்ட நதிகள் மற்றும் ராமேஸ்வரம் தீர்த்த கிணறு, அறுபடை முருகன் திருத்தலங்கள் என பல்வேறு இடங்களில் இருந்து புனித நீர் கொண்டுவரப்பட்டு கும்பாபிஷேகத்திற்கு பயன்படுத்தப்பட்டது. 

கோவில் கோபுரத்தில் உள்ள தங்க முலாம் பூசப்பட்ட தங்க கலசங்களில் புனித நீரை ஊற்றி சிவாச்சாரியார்கள் கும்பாபிஷேக விழாவை நடத்தினர்.  முன்னதாக வானில் கருடன் வட்டமிட்டு கும்பேபிஷேகத்தை கண்டுகளித்தது பக்தர்களை பரவசப்படுத்தியது. 

நம் நாட்டில், எந்தக் கடவுளுக்குரிய ஆலயங்களின் குடமுழுக்கு விழா (கும்பாபிஷேகம்) நிகழ்ச்சியிலும், குடமுழுக்கு நடைபெறும் நேரத்தில் வானத்தில் கருடன் வட்டம் இடுகிறானா என்பதையே மிகவும் முக்கியமாகப் பார்ப்பர். 
அவ்வாறு வட்டம் இடாமல் இருந்தால், யாகத்தில் ஏதாவது குறைபாடு இருக்கலாம் என்று முடிவு செய்வர். கருடன் வட்டமிட்ட பிறகே, திருக்குட முழுக்கு நடைபெறுவது வழக்கம். 
இதற்கு காரணம் கருடன் வேத படிவமானவன். வேத மந்திரங்களை ஓதி செய்யப்படும் ஒரு சடங்கில் வேத வடிவமான கருடன் எழுந்தருள்வது தானே முறையாகும். ஆனால் சரியான வேத வேள்வி நடக்காத போது அவ்விடத்தில் அவனுக்கு என்ன வேலை? எனவேதான் கருட தரிசனத்திற்கு பிறகே திருக்குட முழுக்கை நடத்தி மகிழ்கின்றனர்.

இதற்கிடையில் கொரோனா பரவல் உள்ளிட்ட காரணங்களுக்காக பல்வேறு கட்டுப்பாடுகளுடன் இந்த கும்பாபிஷேக விழா நடத்தப்பட்டது. இந்த விழாவை நடத்துவது குறித்து இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, அதிகாரிகள் மற்றும் போலீசாருடன் நடத்திய ஆலோசனையின் அடிப்படையில், கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்த கும்பாபிஷேக விழாவில் பொதுமக்கள் கலந்து கொள்ள அனுமதி அளிக்கப்படவில்லை. 
 



Leave a Comment