அல்லல் தீர்க்கும் விநாயகரை வணங்குவோம்


 

நாம் எந்த ஒரு செயலையும் தொடங்கும் முன் விக்கினங்கள் இல்லாமல் இருக்க அந்த விக்னேஸ்வரனை வணங்கி வழிபட்டால் , எடுத்த காரியம் யாவிலும் வெற்றி தான்.

கணக்கெடுத்துப் பார்த்தால், நம் ஊரில் விநாயகருக்கு இருப்பது போல் கோவில்கள் வேற எந்த தெய்வத்திற்கும் இல்லை எனலாம். கணபதிக்கு கோவில் எழுப்ப பெரிய நிலபுலங்கள் தேவையில்லை. தெரு முக்கு மற்றும் அரச மர நிழலாக இருந்தாலும்,தன்னை  உண்மையான அன்போடு கூப்பிடும் பக்தருக்காக எழுந்தருளக்கூடியவர்.

 விண்ணுலகும், கீழான  பாதாள லோகமும், நாம் இருக்கும் இந்த பூவுலகு என மூவுலகிற்கும் கணபதி தான்  முழுமுதற் கடவுள். உச்சிப் பிள்ளையார், மகா கணபதி, பாதாள கணபதி என்ற மூன்று நிலைகளில் அவரை போற்றிப் பாடுகின்றன  பக்தி நூல்கள்.

 

முழுமுதற் கடவுள்  பற்றிய முத்தான தகவல்கள் :

 

ஆலயங்களில் மகா கணபதியாகவும். மலை உச்சியிலும் உச்சிப்பிள்ளையாராகவும், பள்ளத்தில் சந்நிதி அமைத்து பாதாள விநாயகராகவும் போற்றப்படுகிறார். 

 

திருச்சியில் மலையின் உச்சியில் ஸ்ரீஉச்சிப்பிள்ளையாரைப் போல கும்பகோணத்திலும் கட்டுமலை போன்ற அமைப்பு ஒன்றை உண்டாக்கி அதன் மீது விநாயகர் ஆலயத்தை அமைத்துள்ளனர். இவருக்கும் உச்சிப்பிள்ளையார் என்று தான்பெயர்.  

 

மண்ணின் கீழே பாதாளத்தில் வீற்றிருக்கும்  விநாயகரை பூமி மட்டத்திலிருந்து பல படிகள் இறங்கிப் போய் அவரை ஆழத்துப் பிள்ளையார் மற்றும்  பாதாள பிள்ளையாராக  பக்தர்கள் வழிபடுகிறார்கள்.

 

காளஹஸ்தி மற்றும்  விருத்தாசலம் திருக்கோயிலில் ஆழத்துப் பிள்ளையார் சந்நிதிகள் உள்ளன.

 

எங்கும் இல்லாதபடி,சுசீந்திரம் தாணுமாலயன் ஆலயத்தில் விநாயகரின் முன் காளை வாகனம் காணப்படுகிறது.

 

தன் தந்தை கயிலாச நாதரின் மலையில், ஆனைமுகனின் உறைவிடம் கரும்புக்காடுகள் சூழ்த்த ஆனந்தபுவனம்.

 

தன் தாய் மாமனான  திருமால், பாற்கடலில் உறைவது போல, கணபதியின் உறைவது கருப்பஞ்சாற்று  கடல்.

 

திருவானைக்காவில் உள்ள விநாயகர் சன்னதியில் தான் கணேசபஞ்சரத்தை ஆதிசங்கரர் எழுதினர்.

 

எத்தனையோ விசித்திரமான பெயர்கள் விநாயகருக்கு இருந்தாலும் ,கோவையிலுள்ள ஒரு விநாயகரின் விசித்ரமான பெயர் டிரான்ஸ்பர் விநாயகர்.

 

உலகம் போற்றும் மதுரை மீனாட்சியம்மன் ஆலயத்தில் 108 விநாயகர் திருவுருவங்கள் இருப்பதாகக் கூறப்படுகிறது.

 

மங்கோலியர்கள் விநாயகரை தோத்கார் அவுன்காரகன் என்றழைக்கின்றனர். இதிலிருந்து ஆதி தெய்வமான விநாயகரின் தொன்மை நமக்கு புரிபடும்.

 

நினைத்தாலே முக்தி தரும் திருவண்ணாமலை ஆலய நுழைவாயிலில் உள்ள விநாயகரின் பெயர் அல்லல் தீர்க்கும் பிள்ளையார்.

 

விநாயகருக்கு அனைத்து இலைகள் மற்றும் மலர்கள் பூஜைக்கு உகந்தது என்றாலும், துளசியால் சதுர்த்தியன்று மட்டுமே விநாயகரை பூஜிக்கலாம்.

 

27நட்சத்திரங்களில் உத்திராட நட்சத்திரத்தின் அதிதேவதை கணபதி.

 

ஜாவா தீவில் விநாயகர் கபால மாலையணிந்து காணப்படுகிறார்.

 

ஐந்துகரப் பண்டிதன் என அருணகிரிநாதர் விநாயகரைக் குறிப்பிட்டுள்ளார்.

 

திருச்சி உச்சிப்பிள்ளையார் தலையில் விபீஷணன் குட்டிய வடு இன்றும் காணப்படுகிறது.

 

மதுரை முக்குறுணி விநாயகருக்கு24 படி அரிசியால் மோதகம் செய்யப்படுகிறது.

வேறு எங்கும் இல்லாதபடி ஆந்திரா ஸ்ரீ சைலத்தில் கணபதி கையில்

 

புல்லாங்குழலுடன் காணப்படுகிறார்.திருப்பரங்குன்றத்தில்   கரும்பு வில் தாங்கிய கற்பக விநாயகர் காட்சியளிக்கின்றார்.

 

`ஐந்து கரத்தனை ஆனை முகத்தனை

இந்தின் இளம்பிறை போலும் வயிற்றனை

நந்தி மகன்தனை ஞானக்கொழுந்தினை

புந்தியில் வைத்தடி போற்றுகின்றேனே''

 

ஐந்து கரங்களை கொண்டவர், யானை போன்ற முகத்தைக் கொண்டிருப்பவர். இளம்பிறை போன்ற வயிற்றைக் கொண்டிருப்பவர். நந்தி தேவரின் மகனாகப் பட்டவரை, ஞானமாகிய மிகச் சிறந்த அறிவு படைத்தவரை,புந்தியில் - நம் மனத்தில் என்றும் நினைத்து வணங்குவோமாக!

கவலைகள் அகல கணபதி பாதம் தொழுவோம் .....

 



Leave a Comment