விநாயகர் சதுர்த்தி!


"விநாயகனே வினை தீர்ப்பவனே..", 'முதல்வனுக்கே எங்கள் முதல் வணக்கம்' இப்படி முழு முதற்கடவுளான விநாயகர் எல்லோராலும் போற்றப்படுகிறார்.தங்கக் கலசத்துக்கு கீழும் இருப்பார், தகரக் கொட்டகையிலும் இருப்பார் இந்த விக்னேசன். 'பிடித்து வைத்தால் பிள்ளையார்' இது வெறும் பழமொழி அல்ல, நாம் ஒவ்வொருவரும் விநாயகர் மீது கொண்ட நம்பிக்கையை பிரதிபலிப்பதாகவே இருக்கிறது.ஆம், அதனால் தான் மண்ணைக் குழைத்து பிடித்து வைத்தாலும் பிள்ளையார் தான், மஞ்சளை பிடித்து வைத்தாலும் பிள்ளையார் தான். பிடித்து வைக்கும் போது அதில் அந்த    விநாயகரே வந்து அமர்வதாக ஐதீகம் இருக்கிறது. இப்படி ஆண்டி முதல் அரசன் வரை கொண்டாடும் விநாயகருக்கு ஆவணி மாத வளர்பிறை சதுர்த்தியில் விமரிசையாக விழா கொண்டாப்படுகிறது. பொதுவாக அந்த நாளினையே  விநாயகரின் பிறந்தநாளாக கொண்டாடப்பட்டு வருகிறது.

   விநாயகர் சதுர்த்தி, இந்த வருடம் நாளை(வெள்ளிக்கிழமை) உலகெங்கிலும் சிறப்பாக கொண்டாடப்பட இருக்கிறது. விநாயகர் சதுர்த்தி அன்று  விநாயகரை எப்படி வழிபட வேண்டும் என்று விவரிக்கிறார் கடம்பூர் ஐயப்பன் கங்காதர குருக்கள்.

      "விநாயகர் சதுர்த்தி அன்று, காலையிலேயே வீட்டை சுத்தம் செய்து, நல்ல நேரத்தில் களிமண்ணினால் செய்த விநாயகர் சிலையை வீட்டுக்கு கொண்டு  வர வேண்டும்.விநாயகருக்கு சதுர்த்தி அன்று பூஜை செய்ய உகந்த நேரம் மாலை வேலை தான். சதுர்த்தி பிறையை தரிசித்து, விநாயகர் வழிபாடு மேற்கொள்ள வேண்டும். காலை மற்றும் மதியத்தில் விரதம் இருந்து விநாயகர் வழிபாடு மேற்கொள்ள வேண்டும். நாளை மாலை 6 மணிக்கு மேல் வழிபாடு மேற்கொள்வது சிறந்தது.  விநாயகருக்கு அருகம்புல் மாலை, தும்பைபூ மற்றும் எருக்கம்பூ  சாற்றி வழிபடலாம்.

  நமது வசதிக்கு ஏற்ப பட்சணங்கள் செய்து வழிபடலாம். பொதுவாக 16 வகையான உணவுகளை படைத்து விநாயகரை வழிபட வேண்டும். அவற்றில் குறிப்பாக, மோதகம், கொழுக்கட்டை, பால், தயிர், தேன், அவல்,பொறி, கடலை, சர்க்கரை, பேரீட்சை, தேங்காய்,விளாம்பழம், வாழைபழம், கொய்யா, மாதுளை,லட்டு  மற்றும் சுண்டல் செய்து விநாயகருக்கு நெய்வேத்தியம் செய்ய வேண்டும். களிமண்ணால் ஆன சிலையை வைத்து வழிபடுவது சிறப்பு. தூப ஆராதனையின் போது "பாலும் தெளிதேனும்.." என்ற ஸ்லோகத்தை சொல்லி வழிபடுவது சாலச் சிறந்தது.விநாயகரை வழிபட்ட பிறகே நாம் உணவு உட்கொள்ள வேண்டும்.

 மூன்று நாட்களுக்கு பிறகு, வீட்டில் வைத்து வழிபட்ட விநாயகர் சிலையாய் உரிய முறையில் பூஜைகள் செய்து நீர் நிலைகளில் கரைக்க வேண்டும்.

எல்லோருக்கும் அருளும் முதல்வனை 'விநாயகர் சதுர்த்தி' அன்று வழிபடுவது சிறப்பாகும். முழுமுதற் கடவுள் நம்மை காத்து அருட்கொள்வான் என்பதில் எந்த வித சந்தேகமும் இல்லை.



Leave a Comment