அமாவாசையில் பவுர்ணமியைக் கொண்டு வந்த அபிராமி பட்டர்


 

காவிரி தாயின் கருணையால்  வளம் கொழிக்கும் தஞ்சைமாநகரில்  திருக்கடையூர் என்னும் திருத்தலத்தில் சுமார் 300ஆண்டுகளுக்கு முன் அவதரித்தார் அபிராமி பட்டர். காலனைச் சிவபெருமான் சம்ஹாரம் செய்த இடமும் இது தான். அம்பிகையை வழிபடும் சாக்த நெறியில் ஆழ்ந்த ஈடுபாடு கொண்டஅபிராமி பட்டர் இசைத்துறையிலும் பாடல் புனைவதிலும் வல்லவராக இருந்தார்.தனது மனதுள்  ஒளிப் பிரவாகமாக அன்னையை ,தாய் அம்பிகையைத் தரிசித்து பேரின்பம் கண்டார். ஆனால், இவரின்  தெய்வீக நிலையை மற்றவர்களால் உணர முடியாமல் ,அவரைப்  பித்தன் என்றும் பைத்தியம் என்றும் வசைபாடினர். அவர்களின் ஏச்சையும் பேச்சையும் அபிராமி பட்டர் ஒரு பொருட்டாகஎண்ணவில்லை.

அக்காலத்தில் தஞ்சையை தலைநகராகக் கொண்டு மராட்டிய  வம்சத்தைச் சேர்ந்த சரபோஜி மன்னர் ஆட்சி செய்து வந்தார். இறையுணர்வு, மத சம்பிரதாயங்களில் அதிக ஈடுபாடு கொண்ட அவர் , ஒரு தை அமாவாசை நாளில் திருக்கடையூர் கோயிலுக்கு தரிசனம் செய்ய வந்திருந்தார். கோயிலில் அபிராமி பட்டர் அம்பிகையின் முன்னர் ஆழ்ந்த  தியானத்திலிருந்தார்.

 மன்னரின் வருகையைக் கூட கவனிக்காமல் பட்டர் இருப்பதைக் கண்ட மன்னருக்கு  வியப்பு.  ஆனால், சுற்றியிருந்தவர்களோ மன்னரிடம், மன்னா!தங்களுக்கு தர வேண்டிய மரியாதையை வழங்காமல் கண்மூடி இருக்கிறார் பட்டர்.எந்நேரமும் இப்படித்தான் இருப்பார். இவர் ஒரு பித்தன், என்று பட்டரைப் பற்றி புகார் கூறினார்கள். 

ஆனால், சரபோஜி மன்னர் அவர்கள் சொன்னதை நம்பவில்லை.இருந்தாலும், பட்டரின் உள்ளுணர்வை அறிய விரும்பினார் மன்னர்.அவரின் அருகில் சென்ற மன்னர்,“பட்டரே! இன்றுஎன்ன திதி?” என்று கேட்டார். அப்போது கண் திறந்த பட்டர், அபிராமி அம்பிகையை ஏறிட்டுப் பார்த்தார். அவளது முகம் நிலவைப் போல்  பிரகாசித்தது. அந்த அருள் பொங்கிய  முகத்தில் லயித்தவராக, இன்று பவுர்ணமி என்றார். ஏதோ நினைவில் அப்படி சொல்கிறார் என நினைத்த மன்னர், கேள்வியை மீண்டும் கேட்டார். அப்போதும் அதே பதில் வந்தது. பின்னர், சுதாரித்து பார்த்த போது மன்னர் கேள்வி கேட்டதும், அதற்கு சரியான பதில் சொல்லாததும் தெரிய வந்தது.

தன் வாக்கு பொய்த்துவிட்டதே என்று கதறி  அழுத அவர், அரசர் வரும்வேளையில் கவனக்குறைவால் ஏற்பட்ட தவறிலிருந்து அம்பிகையே தன்னைக் காத்தருள வேண்டும் என்று அரிகண்டம் பாடினார். அபிராமி சந்நிதி முன் ஒருஆழமான ஒரு குழியை வெட்டி, விறகை அடுக்கி தீ மூட்டினார். அதற்கு மேல் ஒருவிட்டமும், நூறு கயிறுகளாலான உறியையும் கட்டினார். அதில் ஏறி அமர்ந்து கொண்ட பட்டர்  உதிக்கின்ற செங்கதிர் என்று பாடத் தொடங்கினார்.

 ஒவ்வொரு பாடல் முடிந்ததும் உறியின் ஒவ்வொரு கயிறையும் அறுத்துக் கொண்டே வந்தார். பட்டர் பல பாடல்கள் பாடியும் அம்பிகையின் அருள் கிட்டவில்லை.  “அம்மா! உன் விழிக்கே அருள் பார்வையுண்டு. பழிபாவம் கொண்டு உழலும்  மாந்தருடன் இனி எனக்கு என்ன தொடர்புண்டு?”என்ற பொருள்படும் வகையில்,விழிக்கே அருளுண்டு அபிராமிவல்லிக்கே என்ற பாடலைப் பாடி முடித்ததும், அன்னை அபிராமி அவருக்கு அருட்காட்சி கொடுத்தாள்.

 

                                                                             

தன் தாடங்கம் என்னும் தோடினை எடுத்து வான வீதியில் தவழ விட்டாள். அந்த தாடங்கம் வானில் மிதந்து பலகோடி நிலாக்கள் ஒன்று கூடினாற் போல் ஒளியைப் பொழிந்தது.  அவள் பட்டரிடம், “நீ வாய் தவறி மன்னனிடம் கூறிய  சொல்லையும் மெய்யே என நிரூபித்தேன். நீ தொடங்கிய அந்தாதியை தொடர்ந்து பாடு” என்றாள்.  பரவசமுற்ற அபிராமிப்பட்டர் அதோடு, தம் அனுபூதி நிலையைவெளிப்படுத்தும் அந்தாதிப் பாடல்களைப் பாடி நிறைவு  செய்தார். அபிராமிப்பட்டரின் உறுதியான பக்தி கண்டு சரபோஜி மன்னரும் மனம் மகிழ்ந்தார். மன்னரிடம் பட்டரைப் பற்றி புகார் கூறியவர்கள் எல்லாம் பட்டரிடம் மன்னிப்பு கேட்டனர்.

அற்புதமான தெய்வீக துதி நூலான  அபிராமி அந்தாதியை பவுர்ணமி, வெள்ளிக் கிழமைகளில் பாராயணம் செய்து வருபவர்களின் எண்ணங்கள் யாவும் நிறைவேறும்.



Leave a Comment