தொழில் தடைகள் நீக்கும் பரிகாரங்கள்..! 


மேஷம்:

மேஷ ராசிக்குப் பத்தாமிடம் மகரம். மகரத்தின் அதிபதி சனிபகவான் ஜாதகத்தில் நல்ல இடத்தில் அமைய வேண்டும். அவ்வாறு அமைய வில்லை எனில் தொழிலில் தொடர்ந்து தடைகள் வந்த வண்ணம் இருக்கும். இவை நீங்க மேஷ ராசிக்காரர்கள் ஆஞ்சநேயர் வழிபாடு செய்ய வேண்டியது கட்டாயம். அதிலும் அமாவாசை, மூலம் நட்சத்திரம் ஆகிய தினங்களில் அனுமனுக்கு வெண்ணெய்க் காப்பு, வடைமாலை, வெற்றிலைமாலை ஆகியன சாத்தி அர்ச்சனை செய்து வழிபடலாம். இவை அனைத்தையும் விட அனுமனுக்குப் பிரியமானது ராமநாம ஜபம். அந்த ராம நாமஜபத்தை ஆஞ்சநேயர் சந்நிதியில் நின்று செய்தாலே அவர் மனம் மகிழ்வார். சனிபகவானின் பார்வையால் உண்டாகும் தொல்லைகளும் விலகும்.

ரிஷபம்:

ரிஷப ராசிக்காரர்களில் பலர் 33 வயதுக்கு மேல் சொந்தத் தொழில் செய்ய விரும்புபவர்களாக இருப்பார்கள். இவர்களின் பத்தாமிடம் கும்பம். அதன் அதிபதி சனிபகவான். ரிஷப ராசி சனிபகவானின் நட்பு வீடு என்பதால் நீங்கள் செய்யும் சனி பிரீதி அனைத்தும் நல்ல பலன்களைத் தந்து தொழிலில் மேன்மையை ஏற்படுத்தும். குறிப்பாக சனிக்கிழமைகளில் நல்லெண்ணெயில் தீபமேற்றி சனிபகவானுக்கு அர்ச்சனை செய்து வழிபட வேண்டியது அவசியம். எள் சாதன் நிவேதனம் செய்து விநியோகம் செய்தால் செய்தொழிலில் இருக்கும் தடைகள் விலகும்.

மிதுனம்:

மிதுன ராசிக்கு 10 ம் இடம் மீன ராசி. இதன் அதிபதி குருபகவான். குருபகவானின் அருள் இருந்தால் ஒருவர் மற்றவர்கள் மதிக்கும் துறைகளில் நுழைந்து சாதனைகள் செய்யலாம். ஜாதகத்தில் குருபகவான் சாதகமில்லாத நிலையில் இருப்பவர்கள் குருவழிபாடு செய்வது அவசியம். மேலும் ஆதிகுருவாக விளங்கி சிவநெறியைப் பரப்பிய நந்திதேவரை பிரதோஷ தினத்தில் வழிபட்டு அவருக்கு அறுகம்புல் மாலை அணிவித்து, காப்பரிசி நைவேத்தியம் செய்வதுவந்தால் குரு அருள் பரிபூரணமாகக் கிடைத்து தொழிலில் மேன்மை அதிகரிக்கும். வாய்ப்புக் கிடைக்கிறபோதெல்லாம் சிவபெருமானுக்கு வில்வம் சமர்ப்பித்து வழிபடுவதும் சிறந்த பரிகாரமாக விளங்கும்.

கடகம்:

கடக ராசிக்காரர்களுக்கு ஜீவனஸ்தானம் மேஷம். மேஷ ராசிக்கு அதிபதி செவ்வாய் பகவான். பொதுவாகவே செவ்வாயினால் பாதிக்கப்படுபவர்கள் முருகப்பெருமானை வழிபட வேண்டும். முருகனுக்கு உகந்த திதி சஷ்டி. நட்சத்திரம் கிருத்திகை. இந்த நாள்களில் முருகப்பெருமான் எழுந்தருளியிருக்கும் ஆலயத்துக்குச் சென்று வழிபாடு செய்வது நல்லது. செந்நிற மலர்கள் கொன்டு அந்த சிங்கார வேலனை அர்ச்சனை செய்துவந்தால் செவ்வாயால் உண்டாகும் தொல்லைகள் நீங்கி நன்மைகள் பெருகும். கந்த சஷ்டிக் கவசம், வேல்மாறல் ஆகியவற்றை தினமும் பாராயணம் செய்துவந்தால் தொழிலில் இருந்த தடைகள் அகலும்.

சிம்மம்:

ரிஷப ராசியை ஜீவனஸ்தானமாகக் கொண்ட சிம்மராசிக்காரர்கள், சுக்கிர பகவானின் அருள் இருந்தால் தொழிலில் பல உச்சங்களைத் தொட்டுவிடுவார்கள். ஜாதகத்தில் சுக்கிரன் பலவீனமாக இருந்தாலும் சாதகமற்ற தசைகள் நடந்துகொண்டிருந்தாலோ தொழிலில் சில பிரச்னைகள் ஏற்படலாம். அவ்வாறு பிரச்னைகளைச் சந்திக்கும் நபர்கள் மகாலட்சுமி வழிபாடு செய்ய வேண்டியது அவசியம். வெள்ளிக்கிழமைகளில் தொழில் செய்யும் இடம் அல்லது வீட்டில் நெய்விளக்கேற்றி பால் அல்லது பால் பாயசம் நிவேதனம் செய்துவருவது நல்லது. பெருமாள் கோயில் சென்று தாயார் சந்நிதிக்குச் சென்று வழிபாடு செய்வதும் நன்மை பயக்கும்.

கன்னி:

புதனை அதிபதியாகக் கொண்டவர்கள் கன்னி ராசிக்காரர்கள். இவர்களுக்குப் பெருமாள் வழிபாடு எப்போதும் கைகொடுக்கும் அருமருந்து. இவர்களுக்கு 10 இடமான மிதுனராசியும் புத பகவான் ஆட்சி பலம் பெறும் வீடு என்பதால் ஜாதகத்தில் புதன் நல்லமுறையில் அமைந்த ஜாதகக் காரர்கள் கட்டாயம் சுயதொழில் செய்து முன்னுக்கு வருவார்கள். அவ்வாறு அமைய வில்லை என்றால் தொழிலில் பதற்றத்தோடு காணப்படுவார்கள். சிறு நஷ்டம் ஏற்பட்டாலும் மனதுடைந்து போவார்கள். 

அப்படிப் பட்டவர்கள் பெருமாள் வழிபாடு செய்தாலே பாதி பிரச்னைகள் தானே சரியாகிவிடும். சனிக்கிழமை மற்றும் புதன் கிழமைகளில் ஆலய வழிபாடு செய்வது நல்லது. விஷ்ணு சகஸ்ரநாமத்தைக் கேட்பது அல்லது பாராயணம் செய்வதும் நன்மை பயக்கும். வாய்ப்புக் கிடைக்கும்போது திருப்பதி அல்லது ஶ்ரீரங்கம் சென்று பெருமாளை வணங்கிவாருங்கள் மாற்றமும் ஏற்றமும் உண்டாகும். புதன்கிழமைகளில் புதன் பகவானுக்குப் பச்சை வஸ்திரம் சாத்தி, பச்சைப் பயறு பாயசம் அல்லது சுண்டல் நைவேத்தியம் செய்து வழிபடுவது மிகவும் சிறப்பான பரிகாரமாகும்.

துலாம்:

துலாராசிக்குப் பகைகிரகமான குருபகவான் உச்சமடையும் வீடான கடக ராசியே துலாம் ராசிக்காரர்களுக்கான ஜீவன ஸ்தானமாகும். மேலும் கடக ராசியின் அதிபதி சந்திரன் என்பதால் ஜாதகத்தில் சந்திரன் இடம் பெற்றிருக்கும் இடத்தைப் பொறுத்தே இவர்களுக்குத் தொழில் யோகம் அமையும். தொழிலில் மிகுந்த ஈடுபாடு இருக்கும். ஆனால் சிலருக்குத் தடங்கல்களும் வந்துபோகும். அப்படிப்பட்டவர்கள் அம்பிகை வழிபாடு செய்வது நல்லது. பௌர்ணமி அன்று அம்பிகைக்கு நெய்தீபம் ஏற்றி வழிபாடு செய்வது மிகவும் சிறந்த பரிகாரமாகும். மேலும் வளர்பிறை நாள்களில் சந்திரபகவானுக்கு அர்ச்சனை செய்வதும் சந்திர தோஷ பரிகாரத் தலங்களுக்குச் சென்றுவருவதும் நன்மை பயக்கும். குறிப்பாக ஆண்டுக்கு ஒருமுறையேனும் திருப்பதி சென்று வழிபாடு செய்துவந்தால் துன்பங்கள் யாவும் நீங்கும். தொழில் மேன்மை ஏற்படும்.

விருச்சிகம்:

செவ்வாய் ஆட்சிபலம் பெறும் வீடான விருச்சிக ராசிக்கு 10 ம் வீடு சிம்மராசி. சிம்மராசியின் அதிபதி சூரியன். சூரியனின் அருள் இருந்தால் சகல துறைகளிலும் வெற்றி கிடைக்கும். விருச்சிக ராசிக்கு சூரியன் நட்பு கிரகமே. எனவே தொழிலில் பின்னடைவைச் சந்திக்கும் விருச்சிக ராசிக்காரர்கள், மேன்மேலும் தொழிலில் அபிவிருத்தியடைய விரும்புகிறவர்களும் சூரிய பகவானை வழிபட வேண்டும். தினமும் அதிகாலையில் சூரிய நமஸ்காரம் செய்யும் விருச்சிக ராசிக்காரகள் அதிக நன்மைகளை அடைவார்கள். மேலும் சூரிய பகவானுக்குச் சிவப்பு வஸ்திரம் சாத்தி செம்பருத்தி மலர்களால் அர்ச்சித்து வழிபாடு செய்வதன் மூலம் தொழிலில் முன்னேற்றம் உண்டாகும். சூரியபகவான் வழிபட்ட ஆலயங்கள், சூரியன் கோயில்களுக்குச் சென்றுவழிபாடு செய்வதன் மூலம் சகல நன்மைகளையும் பெறலாம்.

தனுசு:

கன்னிராசியை ஜீவனஸ்தானமாகக் கொண்ட தனுசு ராசிக்காரர்கள் இயல்பிலேயே பெருமாள் மீது பக்தி கொண்டவர்களாக இருப்பார்கள். எனவே அவர்களின் ஜாதகத்தில் புதன் எந்த இடத்தில் இருந்தாலும் தடைகளை மீறித் தொழிலில் ஈடுபடுவார்கள். கடின உழைப்பாளிகள். நேரம் காலம் பார்க்காமல் தொழிலில் பணியாற்றும் இவர்கள் சில நேரங்களில் கவனச் சிதறல்களால் நஷ்டங்களையும் சந்திப்பார்கள். அப்படிப்பட்டவர்கள் பெருமாளை வழிபடுவதுவே ஆகச் சிறந்த பரிகாரமாகும். தொழிலில் சிக்கலான கால கட்டத்தை சந்திக்கும் தனுசுராசிக்காரர்கள் அருகில் இருக்கும் பெருமாள் கோயிலுக்கு தினமும் சென்று வழிபாடு செய்யுங்கள். வாரத்துக்கு ஒருமுறையாவது துளசி சமர்ப்பியுங்கள். அப்படிச் செய்துவந்தால் மனதில் அமைதி உண்டாகும். தொழிலில் கவனம் கூடும். எங்கிருந்து சறுக்கினீர்களோ அந்த இடத்தைவிடனும் உயர்வான நிலையை அடைவீர்கள்.

மகரம்:

மகர ராசி சனிபகவானின் சொந்த வீடு. சனியின் பார்வை நல்லபடியாக அமைந்துவிட்டால் ஒருவர் தொழிலின் மூலம் செல்வந்தர் ஆகிவிடலாம். அதே வேளையில் இவர்களின் ஜீவனஸ்தானத்தின் அதிபதி சுக்கிரன். எனவே சுக்கிரனின் பார்வையும் அமைப்பும் நல்லபடியாக அமைய வேண்டியதும் அவசியம். சுக்கிரபலம் வேண்டுபவர்கள், வெள்ளிக்கிழமைகளில் அம்பிகை வழிபாடும் மகாலட்சுமி வழிபாடும் செய்ய வேண்டியது அவசியம். லலிதா சகஸ்ர நாம பாராயணமும் ஶ்ரீ சூக்த பாராயணமும் செய்வது நற்பலன்களை அதிகரிக்கும். தாயாருக்கு பால்பாயாச நைவேத்தியமும் வில்வ அர்ச்சனையும் செய்துவந்தால் தொழிலிலிருந்த பிரச்னைகள் விலகும். புதிய பெரிய ஒப்பந்தங்களில் ஈடுபடும் முன்பாக திருச்சானூர் சென்று வருவதும் கைகொடுக்கும் வழிபாடாகும்.

கும்பம்:

கும்பராசிக்காரர்களின் பத்தாம் வீடு விருச்சிக ராசி. விருச்சிகம் செவ்வாய் பகவானின் வீடு என்பதால் செவ்வாய் ஜாதகத்தில் சிறப்பாக அமைந்துவிட்டால் தொழிலில் அவர்கள் பெறும் வெற்றியும் அமோகமாக இருக்கும். கும்பராசிக்காரர்கள் முருகப் பெருமானை வழிபாடு செய்வது அவசியம். முருகனின் அறுபடை வீடுகளில் ஏதேனும் ஒன்றைச் சென்று தரிசித்து வருவதும் கந்தசஷ்டியில் ஒருநாளேனும் விரதமிருந்து வழிபட்டுவருவதும் தொழிலில் இருக்கும் தடைகளை நீக்கும். முருகப்பெருமான் பன்னிரு கரங்களால் அள்ளி வழங்குபவன் என்பதால் தொழிற்கூடங்களிலும் வீட்டு பூஜை அறையிலும் முருகனின் படத்தினை வைத்து வழிபட்டு வந்தால் நஷ்டங்கள் நீங்கி லாபகரமான தொழில் உண்டாகும்.

மீனம்:

பன்னிரு கிரகங்களில் மீனமும் தனுசும் குருபகவானின் சொந்த வீடுகளாகும். மீனத்தின் ஜீவனஸ்தானமும் 10 ம் வீடான தனுசு ராசிதான். எனவே உங்களின் ராசி அதிபதி வலுப்பெற்று இருந்தால் உங்களின் தொழில் பலவகையிலும் ஏற்றம் பெறும். பொதுவாகவே சிறிய அளவில்தான் மீன ராசிக்காரர்கள் தொழில் தொடங்குவார்கள். ஆனால் மிக விரைவாக முன்னேறி தொழிலைப் பெருக்கிவிடக் கூடியவர்கள். அதேவேளையில் குருவின் அமைவிடத்தைப் பொறுத்து பாதிப்புகளும் ஏற்படலாம் என்பதால் குரு வழிபாடு செய்வது மிகவும் அவசியம். லோக குருவான தட்சிணாமூர்த்தியை வழிபாடு செய்வது இவர்களுக்கான சிறந்த பரிகாரம். வியாழக்கிழமைகளில் மஞ்சள் மலர்கள் சாத்தி வழிபட்டால் குருவின் பரிபூரண அருள் கிட்டும். கறுப்புக் கொண்டைக் கடலையில் சுண்டல் செய்து நிவேதனம் செய்து விநியோகிப்பதன் மூலம் தொழிலில் ஏற்படும் முதலீடு தொடர்பான பிரச்னைகள், பங்குதாரர்களுக்குள் இருக்கும் மனத்தாங்கல்கள் ஆகியன விலகும். நன்மைகள் அதிகரிக்கும்
 



Leave a Comment