சண்டிகேஸ்வரரும் நந்தியும் - தெரிந்த விஷயம் , தெரியாத உண்மை


 

நம்மில் பலரும், சிவன் கோவிலுக்கு சென்றால் ,ஈசனை  தரிசனம் செய்து விட்டு பிரகாரம் சுற்றி வரும்போது, துர்க்கை சன்னதிக்கு அருகில் இருக்கும்  சண்டிகேஸ்வரரை  தவறாமல்  வணங்கி வருவோம். மற்ற சன்னதியில் உள்ள தெய்வங்களை கை கூப்பி வணங்கும் நாம்  சண்டிகேஸ்வரரை மட்டும் ,சொடக்கு போட்டோ அல்லது பலமாக கைதட்டியோ தான் வணங்குவது வழக்கம்.  

ஆனால் உண்மையில் அவரை அப்படி வணங்க கூடாது என்பது நம்மில் எத்தனை பேருக்கு தெரியும். சண்டிகேஸ்வரர் எப்போதும்  சிவ தியானத்தில் இருப்பவர். சிவனிடமே ஈஸ்வர பட்டம் பெற்ற இவர், கோயிலுக்கு வரும் பக்தர்கள், என்னென்ன கோரிக்கை வைத்தார்கள் என சிவனிடம் கூறுவதாக ஐதீகம். எனவே சிவனை வணங்கிவிட்டு இவரை வணங்கும் போது, மிக மெதுவாக மூன்று முறை நமது கையைத் தட்டி, வந்தேன்...வந்தேன்...வந்தேன்... சிவனின் தரிசனம் கண்டேன்... கண்டேன்.. கண்டேன்...என கூற வேண்டும். அப்படி வணங்கும் போது  சண்டிகேஸ்வரர் நாம் வந்திருப்பதை அறிந்து, நமக்காக சிவனிடம் சிபாரிசு செய்து  உடனே நமது கோரிக்கையை  நிறைவேற்றிக் கொடுப்பார் என்பது நம்பிக்கை.

 

அதே போல் சிவாலயங்களில் நந்தி காதுகளில் ரகசியம் சொல்வதும் நம்மிடம் உள்ள பழக்கம்.

சித்தர்கள் மலைகளில், பூமியில் உள்ள வித்தியாசமான பாறைகளை தேர்வு செய்து அவைகளை லிங்கமாக ,நந்தியாக உண்டாக்கி வழிபாடு செய்தனர் என்பது நாம் அறிந்தது .

அரசர் ஒருவர்  சித்தர் நெறிகளை உடைய ஒருவரை  தம் கோவிலுக்கு அழைத்து வந்தார்.  32 லக்ஷனமும் அருமையாக ஒன்று சேர்ந்த ஒரு நந்தி சிலைக்கு ,கருவூரார் சித்தரை நினைத்து நந்தியின் காதுகளில் அவர் மந்திரம் சொல்ல நந்தி அசைந்து எழுந்தது . மன்னனும் மக்களும்  , வியந்து  அதிசயப் பட்டனர். உயிர் பெற்ற அந்த நந்தி கோவிலை விட்டு வெளியை சென்றது . வேடிக்கை பார்த்த மக்களும்  பரவசம் அடைந்து பின்னே சென்றனர் . பசி எடுத்த நந்திஅருகே இருந்த  வயல் மற்றும்  தோப்புகளில் நுழைந்து பயிர்களை உண்ணத் தொடங்கியது. மக்கள் அச்சம் அடைந்து அரசனிடம் முறையிட்டார்கள். பிரச்னை உணர்த்த அரசன் சித்தரிடம் கல் நந்தியை மீண்டும் கல்லாக்கி விட வேண்டும் என்று வேண்டினார். சித்தர் கல் நந்தியை பிடித்து வர சொல்லி அதன் காதுகளில் மந்திரம் சொல்ல அது மீண்டும் கல்லானது . பிறகு அதன் கால்களின் குழம்பில் ஒரு நகத்தை பேர்த்து எடுத்தார் . 32 லக்ஷணத்தில் 1 குறைந்தபடியால் அது கல்லாகி போனது . நந்தி மீண்டும் உயிர் பெறாது என்று உறுதி கொடுத்து வனம் சென்றார்.

அவர் நந்தியின் காதுகளில் ஏதோ சொன்னார் , நாமும் அப்படி சொல்ல வேண்டும் என்று மக்கள் நினைத்த விளைவு தான் இன்றும் நந்தியின் காதுகளில் அவர்கள் குறைகள் ,தேவைகளை சொல்கிறார்கள் .

ஓம் நம சிவாய .....



Leave a Comment