மன அழுக்கை நீக்கிய கங்கா மாதா


 

கங்கைக் கரையில் செருப்பு தைக்கும் ஒரு முதியவர்  தினமும் கங்கா மாதாவை தூர இருந்து கண்ணால் பார்த்து வணங்கி தன் வேலையை ஆரம்பிப்பார். தாழ்ந்த குலத்தை சேர்ந்தவர்  என்பதால் , அவர் தண்ணீரை   தீண்டினால் புனிதம்  கெட்டு விடும் என்று இந்த வழக்கம்.  

அதே ஊரில் இருந்த பண்டிதர் ஒருவர் ,  தினமும் மந்திரங்கள் ஜபித்துக் கொண்டே கங்கையில் இறங்கி நீராடி ,அனுஷ்டானங்கள் முடிந்து வெளியே வருவார்.

ஒருநாள்  அவரது செருப்பு அறுந்து விட்டது. அதை அந்த முதியவரிடம்  கொடுத்து சரி செய்யச் சொல்ல, அவரும்   நன்றாகவே அதை  சரி செய்து கொடுத்தார்.

அவரை  தொட்டால் தீட்டு என்று , பண்டிதர் ஒரு அணா  காசு விட்டெறிந்தார். அவர் பண்டிதரை  வணங்கி  ''சுவாமி நான் உங்களிடம் காசு வாங்க மாட்டேன்.  நீங்கள் கங்கா மாதாவை அனுதினமும்  வணங்கி மந்திரங்கள் ஜெபிப்பவர். உங்களுக்கு ஏதோ என்னாலான ஒரு சிறிய உதவி செய்தது என் பாக்யம்'' என்றார்.

அவரோ,உன் காசு எனக்கு வேண்டாம். இதை என்ன செய்வது?  நீ எனக்கு இலவசமாக சேவை செய்தால் அதை நான் ஏற்க முடியாது என்கிறார்.

ஐயா  இந்த ஏழைக்கு  ஒரு உதவி நீங்கள் செய்வீர்களா?   இதோ இந்த கங்காமாதாவை அனுதினமும்  வணங்குகிறேன் என்னால்  ஒன்றும் செய்ய இயலவில்லை.  நான் அளித்த காணிக்கையாக  நீங்களே  அதை அவளுக்கு சமர்ப்பிக்க முடியுமா.?என்று கிழவன் கேட்க ,என்ன சொல்கிறாய். இந்த ஓரணாவை  கங்கையில் நீ அளித்ததாக நான் எறிய வேண்டும் அவ்வளவு தானே? சரி என்று சொல்லி, பண்டிதர் கங்கையில் இறங்கினார். கங்கா மாதாவை வணங்கி,“ அம்மா கங்கா தேவி, இதோ இந்த ஓரணா கரையில் இருக்கும் செருப்பு தைக்கும் கிழவர் உன்னிடம் சமர்ப்பிக்க சொன்னது. ஏற்றுக்கொள்  என்று சொல்லி வீசி எறிந்தார்.

பிரவாகமாக ஓடிக்கொண்டிருந்த கங்கையிலிருந்து ஒரு அழகிய  கை  வெளியே தோன்றி அவர் வீசிய ஓரணா காசை ஆர்வமாக  அன்பாக  பெற்றுக் கொண்டது.  கங்கையின் முகம் தோன்றி, “பண்டிதரே, எனக்கு மிக்க மகிழ்ச்சி, இதோ இந்த பரிசை நான் கொடுத்ததாக அந்த முதியவரிடம்  கொடுங்கள் என்று கங்கா தேவி ஒரு அழகிய கண்ணைப் பறிக்கும் வைர, நவரத்னக் கற்கள்  பதித்து  ஒளி வீசிய    தங்க வளையலை கொடுத்தாள். பண்டிதர் ஆச்சர்யத்தில்  நடுங்கினார்.

அதை தனது மேல் துண்டில் பத்திரமாக  முடிந்து வைத்து கொண்டு ,அந்த முதியவரிடம்  ஒன்றுமே அது பற்றி சொல்லவில்லை. வீட்டிற்கு போய் தன் மனைவியிடம் கங்காதேவி தந்த வளையலை தந்தார்  பண்டிதர்.

பேராசை பிடித்த அவன் மனைவி ,ராஜாவிடம்  அந்த வளையலைக் கொடுத்துவிட்டு ஏதாவது காசு கொடுத்தால் வாங்கி வர ஆலோசனை சொன்னாள்.

பண்டிதரும்  ராஜாவிடம் சென்று கொடுக்க ,  ராஜா  அதை வாங்கி பார்த்து மகிழ்ந்தார். ஒரு பை  நிறைய பொற்காசுகள் கொடுத்தார்.ராணியிடம் ஆசையோடு அந்த வளையலை கொடுத்தார்.  மிகவும் மகிழ்ந்த  அந்த ராணி , ராஜாவிடம் அதன் ஜோடி எங்கே  என்று கேட்டாள் . ராஜா ஆட்களை அனுப்பி பண்டிதரை அழைத்து வர செய்தார். 

 இன்னொரு வளையல் எங்கே? அதை ஏன் தரவில்லை? என்று கேட்க,  பண்டிதர் நடந்ததை சொல்ல தயங்கினார். ராஜா அணையிட உயிருக்கு பயந்த பண்டிதர் கங்கைக்கரைக்கு ஓடினார்.

 அந்த முதியவர்  வழக்கம்போல் அதிகாலையில்  கங்கைக் கரைக்கு  தூர நின்று இரு கரம் கூப்பி  கண்களை மூடி கங்கையை வணங்கினார். அருகிலே தேங்கி நின்ற நீரில் கொஞ்சம் எடுத்து தலையில் ப்ரோக்ஷணம் பண்ணிக்கொண்டார். அது தான் அவருக்கு கங்காஜலம். செருப்பு தைக்க தேவையான ஜலத்தை ஒரு பாத்திரத்தில் வைத்துக்கொண்டு அமர்ந்தார்.

 திடீரென்று தன்  முன்னே  பண்டிதர் ஓடிவந்து நின்றதும் வணங்குவதும் அவருக்கு  ஏதோ ஒரு அதிர்ச்சியை தந்தது.  “சாமி  நீங்க என்ன செய்றீங்க?என்ன ஆச்சு உங்களுக்கு?  நான் தானே  உங்களை எப்போவும் வணங்கறது?''என்று கேட்டார்.

நடந்த விஷயத்தை சொன்னதும் , அந்த முதியவர் கண்ணை மூடி  தனக்கு எதிரே இருந்த அழுக்கு பாத்திரத்தில் நிரம்பிய நீரை வேண்டினார்,  “அம்மா கங்கா  நீ எனக்கு பரிசாக ஒரு வளையல் கொடுத்ததற்கு  நான் எத்தனையோ ஜென்மம் கடமைப் பட்டிருக்கிறேன் தாயே.  பாவம் இந்த பண்டிதரின் உயிரைக் காப்பாத்து தாயே. இன்னொரு வளையலும் தா. அவர் பிழைக்கட்டும்'' என்று  தனது கையை அந்த ஜலத்தில் விட்டதும் ,  மீண்டும்  பிரகாசமான தங்க வைர கற்கள் பதித்த இன்னொரு வளையல் அந்த அழுக்கு பாத்திரத்திலிருந்து தோன்றியது.

 பண்டிதர் அந்த முனிவரின்  கால்களை  கெட்டியாக பிடித்துக்கொண்டு  கண்ணீரால் அவற்றை நனைத்து அபிஷேகம் செய்தார். சீடனாக அருகில் அமர்ந்தான். மனதில் இருந்த அழுக்கு நீங்கியது.

 

                                                                                  

 



Leave a Comment