துளசி பூலோகம் வந்த கதை


 

உலகை காக்கும் திருமாலுக்கு உகந்தது துளசி. எப்போதும் திருமாலின் திருமார்பில், மாலையாக திகழ்வதை  விரும்புபவள் துளசி தேவி. ‘துளசி’ என்ற சொல்லுக்கு ‘தன்னிகரற்றது’ என்று பொருளாகும். துளசிக்கு பிருந்தை என்றொரு  இன்னொரு பெயரும் உண்டு. ‘துளசி தீர்த்தத்தால் எனக்கு அபிஷேகம் செய்தால், பல ஆயிரம் அமிர்தக் குடங்களால் அபிஷேகம் செய்த ஆனந்தமடைவேன்’ என்று மகாவிஷ்ணுவே கூறியுள்ளதில் இருந்து துளசியின் மகத்துவத்தைப் புரிந்துக் கொள்ளலாம்.  

இத்தனை பெருமையும் ,மகத்துவமும் வாய்ந்த துளசி, பூலோகம் வந்ததற்கு ஒரு புராண  கதை உள்ளது.

துளசித்தாய் பூமியில் ‘பிருந்தை’ என்ற பெயரில் பிறந்து, ஜலந்தரன் என்ற அரக்கனை திருமணம் செய்து இருந்தாள். ஜலந்தரன் கடும் தவம் செய்து பெற்ற வரத்தால் தேவர்களை கொடுமைப்படுத்தினான். இதனால் தங்களை காப்பாற்றும்படி தேவர்கள் சிவபெருமானிடம் முறையிட்டனர்.

இதைத்தொடர்ந்து, ஜலந்தரன் சிவனிடம் போரிட வேண்டி கயிலைக்கு புறப்பட்டு கொண்டு இருந்தான். அவன் முன் ஒரு அந்தணர் வேடத்தில் தோன்றிய சிவனிடம்  ,ஜலந்தரன் தன்னால் எதையும் செய்யமுடியும். என்னால் முடியாதது எதுவும் இல்லை என்று இறுமாப்புடன் கூறினான்.

உடனே அந்தணர் வடிவில் இருந்த சிவபெருமான் தன் கால் பெருவிரலால் மண்ணில் ஒரு வட்டமிட்டு, அந்த வட்டத்தை பெயர்த்து எடுத்து தலைமீது வைக்கவேண்டும் என்று கூறினார். ஜலந்தரன் அந்த வட்டத்தை பெயர்க்கும் முயற்சியில் ,அதனைப் பெயர்த்து தலைக்கு மேல் தூக்கி தாங்கினான். உடனே அந்த வட்ட சக்கரம் அவன் உடலை இரு கூறுகளாக பிளந்து, மீண்டும் அனல் கக்கும் தீப்பிழம்பாக மாறி சிவனின் திருக்கரத்தை சென்றடைந்தது.

இதற்கிடையில் கயிலைக்குச் சென்ற கணவன் திரும்பி வராததை கண்ட பிருந்தை கவலை அடைந்தாள். அவளது கற்பு என்று அழிகிறதோ அன்று தான் ஜலந்திரன் அழிவான் என்ற நிலை இருந்தது. இதைத் தேவர்கள் மகாவிஷ்ணுவிடம் தெரிவித்தனர். உடனே அவர் பிருந்தையின் கற்பைச் சோதிக்க ஒரு தவ முனிவர் வடிவில் பிருந்தை முன் சென்றார். அப்போது அவர் ஜலந்தரன் இருகூறாகி இறந்து விட்டதை கூறி அவள் முன் அந்த இருகூறுகளும் மாயையினால் வரும்படி செய்தார்.

 பிருந்தை தன் கணவன் மீண்டும் உயிர் பெற்று வர வேண்டும் என மன்றாடி கேட்டுக்கொண்டாள். உடனே திருமால் ஜலந்தரனின் உடற்கூறுகளை ஒன்றாகச் சேர்த்து, தான் அந்த உடலில் புகுந்து ஜலந்தரனே மீண்டும் வந்து விட்டதாக நம்பும்படி செய்தார்.

 பின்னர் திருமால் சிலகாலம் பிருந்தையுடன் குடும்பம் நடத்தினார். காலப்போக்கில் தன்னுடன் வாழ்பவர் தன் கணவன் இல்லை, மாயையில் வந்தவர் என்பதை அறிந்து கொண்ட பிருந்தை தீயில் புகுந்து உயிர் துறந்தாள்.

இதனால் மிகவும் மனம் வருந்திய திருமால் பிருந்தை தீக்குளித்த இடத்திலேயே அமர்ந்து இருக்க, இதை பார்த்த பார்வதி தேவி தனது இடது கை சிறு விரலில் இருந்து ஒரு விதையை உண்டாக்கி சிவபெருமானிடம் கொடுக்க, அதை பிரம்மா பெற்று பிருந்தை இறந்த இடத்தில் ஊன்றி தண்ணீர் வார்த்தார். அங்கே துளசி செடி உண்டாயிற்று. திருமால் அந்தத் துளசியை எடுத்து தன்மேல் அணிந்து மீண்டும் சகஜ நிலையை அடைந்தார்.

 

                                                                                

                                                                                                                  துளசி ஸ்தோத்ரம்

 

ஸ்ரீமத் துளசியம்மா, திருவே கல்யாணி அம்மா

வெள்ளிக் கிழமைதன்னில் விளங்குகின்ற மாதாவே

செவ்வாய்க் கிழமைதன்னில் செழிக்க வந்த செந்திருவே

தாயாரே உந்தன் தாளினை நான் பணிந்தேன்

பச்சைப் பசுமையுள்ள துளசி நமஸ்தே

பரிமளிக்கும் மூலக்கொழுந்தே நமஸ்தே

அற்பப் பிறப்பை தவிர்ப்பாய் நமஸ்தே

அஷ்ட ஐஸ்வர்யம் அளிப்பாய் நமஸ்தே

ஹரியுடைய தேவி அழகி நமஸ்தே

அடைந்தார்க்கு இன்பம் அளிப்பாய் நமஸ்தே

வனமாலை எனும் மறுவே நமஸ்தே

வைகுண்ட வாசியுடன் மகிழ்வாய் நமஸ்தே

 

எவர் தன்னை பூஜை செய்கின்றனரோ அவருக்கு என்ன பலன் வந்து சேரும் என்பதை துளசியே சொல்கின்றாள்;

 

அன்புடனே நல்ல அருந்துளசிக் கொண்டுவந்து மண்ணின்மேல் நட்டு மகிழ்ந்து நல் நீரூற்றி முற்றத்தில் தான் வளர்த்து முத்துப்போல் கோலமிட்டு செங்காவி சுற்றுமிட்டு திருவிளக்கும் ஏற்றிவைத்து பழங்களுடன் தேங்காயும் தாம்பூலம் தட்டில்வைத்து புஷ்பங்களை சொறிந்துப் பூஜித்தப் பேர்களுக்கு என்ன பலன் என்று ருஷிகேசர் தான் கேட்க ;

மங்களமான துளசி மகிழ்ந்துரைப்பாள் -

"மங்களமாய் எனை வைத்து மகிழ்ந்து உபாசித்தவர்கள்

தீவினையைப் போக்கி சிறந்த பலன் நானளிப்பேன்,

அரும்பிணியை நீக்கி அஷ்ட ஐஸ்வர்யம் நான் அளிப்பேன்,

தரிதிரத்தை நீக்கி செல்வத்தை நான் கொடுப்பேன்,

புத்திரன் இல்லாதவர்க்கு புத்திர பாக்கியம் அளிப்பேன்,

கன்னிகைகள் பூஜை செய்தால் நல்ல கணவரைக் கூட்டுவிப்பேன்,

கிருஹஸ்தர்கள் பூஜை செய்தால் கீர்த்தியுடன் வாழவைப்பேன்,

மும்மூர்த்திகள் பூஜை செய்தால் மோக்ஷபதம் நான் கொடுப்பேன்,

கோடி காராம்பசுவை கன்றுடனே கொண்டு வந்து கொம்புக்கு பொன் அமைத்து குழம்புக்கு வெள்ளிக் கட்டி கங்கைக்கரை தன்னில், கிரகண

புண்யக் காலத்தில் வாலுருவி அந்தணர்க்கு மஹா தானம் செய்த பலன் நானளிப்பேன். சத்யம்" என்று நாயகியும் சொல்லலுமே,

"அப்படியே ஆகுமென" திருமால் அறிக்கை இட்டார்.

இப்படியே அன்புடனே ஏற்றித் தொழுதவர்கள் அற்புதமாய் வாழ்ந்திடிவார்  பிருந்தையின் அருளால்!

தினமும் முடியாதவர்கள், செவ்வாய் மற்றும் வெள்ளிக் கிழமைகளில் இந்த ஸ்லோகத்தை சொல்லி, மஞ்சள் மற்றும் குங்குமத்தை துளசியின் தண்டில் வைத்து, பூவைத்தும் வழிபட, துளசியை  எல்லா நலன்களையும் நமக்கு பூரணமாய் தருவாள்.

 



Leave a Comment