அஷ்ட ஐஸ்வர்யங்களையும் அள்ளி வழங்கும் மகாலட்சுமிக்கு உரிய விரதங்கள்


குபேரனுடன் தொடர்புகொண்ட எட்டு செல்வக் கருவூலங்களுக்கும் தலைமைத் தெய்வமாகத் திகழ்பவள் அன்னை மகாலட்சுமி. இதனை மார்க்கண்டேய புராணம் தெளிவுற விளக்குகிறது.

லட்சுமிகள் எட்டு, அதனையே ‘அஷ்ட லட்சுமிகள்’ எனறு அழைக்கின்றோம். செல்வம், ஞானம், உணவு, மனவுறுதி, புகழ், வீரம், நல்ல புதல்வர்கள், விரும்பியதை விரைவாக முடிக்கும் ஆற்றல் இவையே அந்த அஷ்ட ஐஸ்வரியங்களாகும். இந்த அஷ்ட ஐஸ்வரியங்களையும் ஒருவனால் பெற முடியும். அதற்கு அந்தத் திருமகளின் அருட்கடாட்சம் இருக்க வேண்டும். அன்னை மகாலட்சுமியின் கடைக்கண் பார்வை ஒன்று மட்டுமே இதற்கு போதுமானது.

ஆலய வழிபாடும் அப்பழுக்கில்லாத அழகிய (உருவம் அல்ல) உள்ளம் கொண்ட எவரும் திருமகளின் திருவருளை எளிதில் பெற்றுவிடலாம். ஆலயங்களில் எழுந்தருளி அருள்பாலித்து வரும் அன்னை மகாலட்சுமியை ஆலயங்களுக்கு சென்று வணங்கி வழிபடலாம். ஸ்ரீசூக்தம், கனகதாரா ஸ்தோத்திரம், மகாலட்சுமி அஷ்டோத்திரம் என துதிப்பாடல்களை பாடியும் தியானித்து அன்னை மகாலட்சுமியை வணங்கி வழிபடலாம்.
தேவியின் துதிப்பாடல்களுள் ஆதிசங்கரர் பாடிய கனகதாரா தோத்திரமும் பராசரப்பட்டர் இயற்றிய ஸ்ரீ குணரத்ன கோசமும் மகிமை பெற்றவை. இயலாதவர்கள் வீடுகளில் திருக்கேற்றி வைத்து தீபச் சுடரையே மகாலட்சுமியாகக் கருதி வழிபடலாம்.

லட்சுமி விரதங்கள்:

மகாலட்சுமிக்கு உரிய விரதங்களுள் மிகவும் முக்கியமான விரதம் வரலட்சுமி நோன்பு விரதமாகும். இது போன்றே ஆவணி மாத வளர்பிறை அஷ்டமியும் லட்சுமிக்கு உரிய நன்னாளாகும். ஆவணி மாதத்தில் வரும் வளர்பிறை பஞ்சமியை ‘மகாலட்சுமி பஞ்சமி’ என்று அழைப்பர். அன்று முதல் நான்கு நாட்களுக்கு விரதம் இருப்பது சாலச் சிறந்தது. இதேபோன்று கார்த்திகை மாதத்தில் வரும் பஞ்சமியை ‘ஸ்ரீ பஞ்சமி’ என்று அழைப்பார்கள். அன்றும் மகாலட்சுமியை மனமுருகி வணங்கி அம்பாளின் அருட்கடாட்சத்தைப் பெறலாம்.
 



Leave a Comment