சொல்லின் செல்வர் அனுமன் புகழ் பாடுவோம்


 

இராமாயணம் என்னும் புண்ணிய இதிகாசத்தில் நம்மால் மறக்க முடியாத ,மறைக்க முடியாத பெயர் அனுமன்.  இதிகாசத்தின்  நடுநாயகமாக விளங்குபவரும் அவரே.  ராமாயணம் முழுவதும், எங்கேயும் தன் அளப்பரிய அறிவைப் பற்றியோ, ராமபிரானுக்கு தான் செய்த தொண்டைப் பற்றியோ பிறரிடம் தற்பெருமையாக சொன்னதே இல்லை. அடக்கத்தின் உருவமான அனுமன், சீதையை கண்டுபிடிக்கும் முயற்சியில் மிகப்பெரிய சாதனைகளைச் செய்தும், ராமரிடம் தனக்கு இது வேண்டும் ,அது வேண்டும் என்று எதையும் கேட்டதில்லை. ஆனால் ராமனுக்கு தொண்டு செய்த சுக்ரீவனுக்கு அவனது ராஜ்யமும், அங்கதனுக்கு  ராஜகுமாரன் என்ற பட்டமும், விபீஷணனுக்கு  இலங்கையின் அரசபதவியும் கிடைத்தது.  இதைக்கண்டு நெகிழ்ந்த ராமன்,“ உனது கடனை நான் எப்படி திரும்பச் செலுத்துவேன். நான் எப்பொழுதும் உனக்கு கடன்பட்டவனாகவே இருப்பேன். நீ சிரஞ்சீவியாக வாழ்வாய். என்னைப் போன்றே உன்னையும் எல்லாரும் போற்றி வணங்குவர்”, என்றார்.  “நீ எப்படி கடலைத் தாண்டினாய்?” என ராமன் கேட்டதற்கு ,அனுமன் மிகவும் அடக்கமாக, “எம்பெருமானே! எல்லாம் உமது நாம மகிமையால்” என்றார்.

பக்திக்கும் , இறை சேவைக்கும் உதாரணமாக திகழும் அனுமன் பிரம்மச்சரியத்தை முழுமையாகப் பின்பற்றுபவர். ஆற்றல், சீலம், அறிவு, பக்தி, வெற்றி, வீரம், புலனடக்கம் என்று நிகரற்ற தன்மைகளைக் கொண்ட அவர், தனது பக்தர்களுக்கு புத்தி, பலம், புகழ், உறுதிப்பாடு, அஞ்சா நெஞ்சம், ஆரோக்கியம், போன்றவற்றைத் தருபவர்.

  அப்பேற்பட்ட அனுமனை சாதரணமாக வணங்கி விட முடியுமா?.

வடமாலை அணியும் வழக்கம் ஏன்?

ராம பட்டாபிஷேகத்தின் போது, சீதாதேவி அனுமனுக்கு முத்துமாலை ஒன்றைப் பரிசளித்தாள். இதை வடக்கே "வடமால்யா' என்று சொல்வார்கள். இது தென்னகத்தில் வடைமாலையாகி விட்டது என்கிறார்கள் ஆன்மீகப் பெரியவர்கள்.

 

வெற்றிலை மாலையின் தாத்பரியம்

 

                                                       

அசோக வனத்தில் அனுமன் சீதையைக் கண்டு ராமரைப் பற்றிய விவரங்களை கூறி ராமரின் கணையாழியைக் கொடுத்து சூடாமணியைப் பெற்றார். அன்னையிடம் விடைபெறும் சமயம், அனுமனை ஆசிர்வதிக்க எண்ணிய சீதை தான் அமர்ந்திருந்த வெற்றிலைக் கொடியின் இலைகளை பறித்து அனுமனின் தலையில் புஷ்பமாய் தூவி ஆசீர்வதித்து வழி அனுப்பி வைத்ததால், அன்னையின் நினைவாகவே அனுமனுக்கு வெற்றிலை மாலை அணிவிக்கப்படுகின்றது என்று கூறப்படுகிறது.

 

 வெண்ணெய் சாத்துதலின்  அர்த்தம்

ராமசேவையையே தன் மூச்சாக இருந்த அனுமன் , ராவண வதத்தின் போது  போர்க்களத்தில் உடம்பெல்லாம் புண்ணாகி கிடக்க, அவரின் காயத்தின் வேதனையை போக்க குளிர்ந்த பொருளான வெண்ணையை அனுமனுக்கு சாத்தும் வழக்கம் ஏற்பட்டது. இதில் ஆச்சரியமான விஷயம், அனுமனுக்கு சாத்தப்படும் இந்த வெண்ணெய் எவ்வளவு வெயில் அடித்தாலும் உருகுவது இல்லை. எவ்வளவு நாள் ஆனாலும் கெட்டுப்போவதும் இல்லை.

ராம கடாட்சம் பெற துளசி மாலை

ராமதூதர் அனுமனுக்கு துளசிமாலை சாத்துவதால் ராம கடாட்சம் பெற்று நல்ல கல்வி, செல்வம் பெறலாம்.

காரிய சித்திக்கு குங்குமப் பொட்டு:

அனுமனுக்கு வாலில் தான் சக்தி அதிகம் என்பதால், பக்தி சிரத்தையுடன் ராமநாமத்தை ஜபித்துக் கொண்டு இடுப்பில் வால் தோன்றும் திருவிடத்தில் இருந்து தினமும் சந்தனம் சாத்தி குங்குமத் திலகம் வைத்துக் கொண்டு வரவேண்டும். வாலின் நுனியை அடைந்ததும், கலைத்துவிட்டு மறுபடியும் பொட்டு வைக்க வேண்டும். வால்முனையில் பொட்டு பூர்த்தி பெறுகின்ற சுபதினத்தில், எம்பெருமானுக்கு வடைமாலை சாத்த வேண்டும். காரியம் சித்தியாகும் வரை இது போல் பொட்டு வைத்துக் கொண்டே வர வேண்டும்.

மேலும் திருமணத்தடை நீங்க அனுமானுக்கு வியாழனன்று வெற்றிலை மாலையும்  எடுத்த  வேலைகளில் வரும் தடை நீங்க வியாழன், சனிக்கிழமைகளில் எலுமிச்சை மற்றும் வடைமாலையை  சாத்தும் நம்பிக்கையும் உண்டு.

 

அஞ்சிலே ஒன்று பெற்றான்

அஞ்சிலே ஒன்றைத் தாவி

அஞ்சிலே ஒன்று பெற்ற அணங்கைக்

கண்டு அயலார் ஊரில்

அஞ்சிலே ஒன்றை வைத்தான் அவன்

எம்மை அளித்துக் காப்பான்.

 

பொருள்: வாயுவுக்கு பிறந்தவன் அனுமான். ஆகாயத்தில் பறந்து, கடல் தாண்டி இலங்கை சென்றான். பூமிதேவியின் மகளான சீதையைக் கண்டான். அவளை மீட்க இலங்கைக்கு நெருப்பு வைத்தான். அவன் தன்னையே நமக்கு தந்து பாதுகாப்பான்.

 

விளக்கம்: பஞ்சபூதங்களில் ஒன்றான வாயுவுக்கு பிறந்தான். வானில் (ஆகாயம்) பறந்தான். கடலை (நீர்) தாண்டினான். ஜனகர் தங்கக் கலப்பையால் யாக குண்டத்திற்கு பூமியை (மண்) தோண்டும் போது கிடைத்த சீதையைக் கண்டான். பஞ்சபூதங்களில் ஒன்றான நெருப்பை இலங்கைக்கு வைத்தான். ஆக, பஞ்சபூதங்களையும் அடக்கியாண்டவர் அனுமான். அவரை வணங்கினால் இந்த பூதங்கள் நமக்கு நன்மையை மட்டுமே செய்யும்.

 

மேற்கண்ட இந்த ஸ்லோகத்தை,மனமுருக பாடி அனுமனை  வழிபட்டால் கல்வி கேள்விகளில் மட்டுமின்றி, பகைவரை அச்சமுறச் செய்யும் வலிமையும், மேருமலையைக் குன்றச் செய்யும் உறுதியான மனோதிடத்தையும்  நமக்கு தருவார் அனுமன்.

  

 



Leave a Comment