கொன்ற பாவம் தீரும் வழி: வாரியார் சொன்ன மொழிகள்


முன்னோர்களால் உணர்ந்து கூறப்பட்ட பழமொழிகள் பல இன்று திரிந்து திரிகிறது.  ‘கொன்றால் பாவம் தின்றால் போயிற்று’ என்பது பழமொழி. ஆடு, கோழி போன்ற உயிர்களைக் கொன்ற பாவமானது, அவற்றைத் தின்பதால் தீர்ந்து போகும் என்பதே நம்மில் பலரும் அறிந்து வைத்திருக்கும் அர்த்தம்.

ஒரு உயிரைக் கொல்வதே பாவமாக இருக்கும்போது, அவற்றைத் தின்பதால் அந்தப் பாவம் தீர்ந்து போகுமா? என்பதை யாரும் சிந்தித்துப் பார்ப்பது கிடையாது.

‘உண்ணாமையுள்ள துயிர்நிலை ஊனுண்ண

அண்ணாத்தல் செய்யா தளறு’

என்கிறார் திருவள்ளுவர். இதற்கு மாமிசத்தை உண்பது மிகப்பெரிய பாவம் என்பது பொருள். உலகமே ஏற்றுக் கொண்டுள்ள திருக்குறளை அளித்த பொய்யாமொழிப் புலவரின் வாக்கும் கூட பொய்யாய் போகுமோ?

சரி அப்படியானால் இதன் உண்மையான கருத்துதான் என்ன என்கிறீர்களா? இதற்கு கிருபானந்த வாரியார் தனது சொற்பொழிவு ஒன்றில் கூறியதை பார்ப்போம், உயிர்களைக் கொன்ற பாவிகளை அவர்களின் இறப்பிற்குப் பிறகு எம  தூதர்கள், நரகத்திற்குக் கொண்டு போய் கிடத்துவார்கள். அங்கு அந்தப் பாவிகளின் மாமிசத்தை அறுத்து, அவர்கள் வாயில் ஊட்டி, மாமிசத்தை உண்டவனே! உன் மாமிசத்தை நீயே சாப்பிடு’ என்று சாப்பிட வைப்பார்கள். உயிர்களை வதைத்துத் தின்ற பாவமானது, தன் சதைகளை தின்றால்தான் தீரும். இதுதான் அந்தப் பழமொழியின் உட்பொருள். அதனால் தான் கொன்றால் பாவம் தின்றால் போகும் என்று கூறி வைத்தார்கள்.



Leave a Comment