அரிவாட்டாய நாயனார் புராணம்


- "மாரி மைந்தன்" சிவராமன்

நீர்வளமும் நில வளமும் 
நிறைந்த சோழ நாட்டில் கணமங்கலம் 
என்றொரு திருத்தலம்.

அவ்வூரில் 
வேளாளர் செல்வராக 
மதியும் நிதியும் நிறைந்த வேளாளர் தலைவராக வாழ்ந்து வந்தார் தாயனார் 
என்ற ஒரு சிவபக்தர்.

அவர் இணையிலா
பெரும் பக்தர்.
அன்பு நிறை அருட்தொண்டர். 
எச்சூழலிலும் 
தளராத சிவபக்தர்.

தினமும் 
செந்நெல் அமுதமும் 
(சம்பா அரிசி சாதம்)  செங்கீரையும்
மாவடுவும் 
(வடுமாங்காய்)
மாதொரு பாகனுக்குப் படைத்து வழிபடுவார்.

சிவபிரானும் ஆசையோடு மாவடு கடிக்கும் போது 
'விடேல்' எனும் ஒசையெழ உணவருந்தி முடிப்பார்.

வழிவழி வந்த செல்வமும் 
ஏர் வழி உழவால்
நேர்வழி வந்த வருமானமும் பெருகி 
தாயனாரின் 
சிவவழிபாடு 
சீரோடும் சிறப்போடும் நடந்து வந்தது.

தாயனாரின் 
சிவபக்திக்கும்
அவரது திருத்தொண்டுக்கும் 
மன உறுதிக்கும் சோதனை வைத்து அவரை 
ஒரு நாயனாராக்கி தன்னுடனேயே 
வைத்துக் கொள்ளத் திட்டமிட்டார் 
தாயுமானவரான
தகப்பன் சாமி.

எம்பிரான் திருவுளம் கொண்டால்
என்னென்ன நடக்கும் 
என யாருக்குத் தெரியும்?

சிவபிரானின் சோதனையின் 
முதல் படி 
தாயனாரை 
வறுமை சூழ வைத்தது.

வறுமையாகிய 
சிறுமை வந்தபோதிலும் தாயனாரது திருத்தொண்டு கொஞ்சமும் குறையவில்லை.

நிலபுலன்களை விற்று இறைவனுக்கு இடைவிடாது அமுது படைத்து வந்தார்.

கையிருப்புக் கரைந்தது. அப்போதும் 
மனம் தளரவில்லை 
மாண்புமிக்க தாயனார்.

கூலி வேலைக்குச் சென்றார்.
கூலியாகச் 
செந்நெல் பெற்றார்

இறைவனுக்குச் 
செந்நெல் அமுது 
படைத்து விட்டு 
தனக்கும் மனையாளுக்கும் 
கார் நெல்லை 
உணவாக்கிக் கொண்டார்.

இறை சோதனையின் இரண்டாவது படி 
இன்னும் 
சிக்கலைத் தந்தது.

ஊரின் அனைத்து விவசாய நிலங்களிலும் செந்நெல் மட்டுமே விளைந்தது.

குறிப்பாக 
கார் நெல் எங்கும் விளையவே இல்லை.

கூலியாகக் கிடைத்த செந்நெல்லை அமுதாக்கி இறைக்குப் படைத்துவிட்டு தன் இரையைத் தண்ணீரோடு முடித்துக்கொண்டார் தாயனார்.
அவர் மனைவியோ கண்ணீரோடு முடித்துக்கொண்டார்.

வீட்டின் பின்புறத்தில் விளைந்த செங்கீரை கருகி அழுகியது கங்கைகொண்டானின்
அடுத்த சோதனையால்.

இலைக் கறி சமைத்தாள் 
கலங்காத மனைவி. தாயனாரும்
கலங்கினாரில்லை.

அமுது படையல் அப்போதும் தொடர்ந்தது.

தாயனாரின்
மனம் முழுதும் சிவவழிபாட்டுப் பேரானந்தத்தில் திளைத்திருந்தது.

பசி உணர்வு இல்லை. தாகம் எழவில்லை.
உறக்கமில்லை.

அவர் பொறுப்பார் !
உடல்....?

இளைத்தது. பலவீனமானது. தொடர்ந்து நடக்கவே முடியாத அளவிற்கு 
நடை தளர்ந்தது.

அப்படியும் 
ஒரு நாள்-
கூடையில் 
நிவேதனப் பொருட்களை வைத்துக்கொண்டு மாண்புடைநல்லாள் மண்பானையில் பஞ்சகவ்யத்துடன் பின்தொடர 
கோயிலுக்குப் புறப்பட்டார் தாயனார்.

இறையின் விளையாடல் இங்குதான் உச்சபட்சத் தாண்டவமாடியது.

ஓரிடத்தில் 
உடல் பலவீனம் காரணமாக 
தாயனார் இடறி விழ 
பின்வந்த இல்லாள் பஞ்சகவ்ய பாத்திரத்தைப் பத்திரமாகப் பிடித்தபடியே கணவனையும் பாதுகாப்பாக அணைத்துக் காத்தாள்.

ஆனால்...
அந்தோ பரிதாபம்!

தாயனார் தலையில் இருந்த கூடைத் தலைகீழாகக் கவிழ்ந்து செந்நெல்லமுதும் கீரையும் மாவடுவும் தரையில் நிலவெடிப்பில் சிதறித் தெறித்தன.

ஓரளவு சுதாகரித்த தாயனார் 
"ஐயகோ...
என்ன பாவம் 
செய்தேனோ ?

அளவில்லாத தீமை உடையேன் ஆயினேனே !

இறையின் இரை 
தரை முழுக்க 
சிதறிக் கிடக்கிறதே!

இறைவனுக்கு அமுது செய்யும் பேறு பெற்றிலேனே !

முழுப் பாவி ஆனேனே!"

என புலம்பினார்.
கைப்பிடித்த மனையாளே செய்வதறியாது 
கண்ணீர் சிந்தினாள்.

கூடையோடு தரையில் விழுந்த தாயனார்
மனையாளின் 
தோள் சாய்ந்து

"உணவோ சிதறிவிட்டது. இனி கோயிலுக்குப் போவதில் என்ன அர்த்தம் இருக்கிறது ?"

என விரக்தி மேலிட வினவினார்.

அவள் சொல்வதறியாது மௌனமாய் இருக்க
நகர்ந்தன சில 
கணங்கள் அமைதியாக.

என்ன தோன்றியதோ திடீரென்று 
இறைவனை அழைத்தார் தழுதழுத்த குரலில் தளர்ந்துபோன தாயனார்.

"எம்பெருமானே!
நீங்கள் 
எல்லாம் வல்லவர். எல்லாம் அறிந்தவர். எங்கும் நிறைந்தவர்.

எங்கும் நிறைந்திருக்கும் நீங்கள் இவ்விடத்திலும்
கண்டிப்பாக இருப்பீர்கள்! 

என் சிவபக்தி உண்மையெனில் 
நீங்கள் இவ்விடத்தில் இருப்பது உண்மையெனில் 
உடனே வாருங்கள் 
வந்து படையல் 
பெறுங்கள்."

மனைவியின் 
மெல்லிய அழுகுரல் தவிர அவரது பெருமூச்சு தவிர வேற எந்த அறிகுறியும் தென்படவில்லை.

மனமுடைந்த தாயனார் முரசறைவோன் போல் உரத்த குரலில்

"நீங்கள் உண்ணவில்லை எனில் 
நான் உயிரை விடுவேன்"

என்றவாரே தாயனார்
நெல் அறுக்க எப்போதும் இடையில் வைத்திருக்கும் அரிவாளை எடுத்து 
தன் தொண்டையை அறுக்க முற்பட்டார்.

போதும் சோதனை என நினைத்த ஆடல் நாயகன் அக்கணமே 
நில வெடிப்பைப் பிளந்து 
இடது கையை நீட்டி தாயனார் கைகளைத் தடுத்தார்.

அரிவாள்  
தூரத் தள்ளி விழுந்தது.

அதே சமயம் 
'விடேல்... விடேல்'
என ஓசை கேட்டது.

ஆம்...
அதுநாள் வரை விளையாடிய இறைவன் விடேல் ஓசை தந்து சிதறிய அமுதம் உண்டு மாவடுவை கடித்து ருசிக்கும் ஓசை.

தாயனாருக்குப் புரிந்துவிட்டது.
சிவனாரின் 
விளையாடல் எனவும் புரிந்துவிட்டது.

கணத்திலேயே தொண்டைப் பகுதியின் ரணம் குணமானது.
அரிவாள் புண் 
ஆறி மறைந்தது.
இழந்து போயிருந்த சக்தி மீண்டும் உயிர் பெற்றது.

தாயனார் 
ஆனந்தக் கூத்தாடினார். அன்பு மனைவி 
ஆனந்தக் கண்ணீர் வடித்தாள்.

"எம்பிரானே....! அடியேனின் அறிவிலாமையைக் கண்டும்
என்னை ஆட்கொண்டு நிலவெடிப்பினுள் வந்து திருவமுது கொண்ட 
திருநீலகண்டப் பெருமானே !

தூய பரஞ்சோதி போற்றி! பவளச் செம்மேனியனே போற்றி!!
புரிசடைப் புராணா போற்றி!!!" 

துதி பாடித் 
துள்ளி மகிழ்ந்தார்.

அக்கணமே 
இறைவன் 
இடப மேல் இமயவல்லியுடன்  காட்சியளித்தார்.

"தாயனாரே!
என் மனதிற்கு உகந்தவரே!

உன் பக்தியால் அளவற்ற மகிழ்ச்சி உற்றேன்.

எல்லையில்லா 
ஆனந்தம் கொண்டேன்.

உன் கீர்த்தியை வெளிக்கொணரவே 
இந்நாடகம்.

நீயும் 
உன் இல்லக்கிழத்தியும் இப்போதே எம்முடன்
புறப்படுங்கள்.

என் அருகிலேயே எப்போதும் 
என்னை விட்டு நீங்காது சிவபுரத்தில் 
மகிழ்ச்சியாக வாழ்வீராக!"

இறைவன் இறைவியுடன் தாயனார் தம்பதியினர் சிவபுரமாம் சிவபுரிக்குப்
பயணமானார்கள்.

நெல் அறுக்கும் அரிவாள் கொண்டு கழுத்தறுத்து உயிர் துறக்கவும் துணிந்ததால்
'அரிவாள்' தாயனார் அரிவாட்டாய நாயனார் ஆனார்.

'அஞ்சாத வாட்டாயன் அடியார்க்கும் அடியேன்'
என்பது சுந்தரர் வாக்கு.

திருச்சிற்றம்பலம்.



Leave a Comment