சிவமே மூச்சாக வாழ்ந்த அறுபத்து மூன்று நாயன்மார்கள் – (அரிவாட்டாய நாயனார் )


 

சோழவள நாட்டின் செழிப்பினை வையத்திற்கு எடுத்துக் கூறிய  கணமங்கலம் என்னும் ஊரில்  தாயனார் என்னும் சிவனடியார் வாழ்ந்து வந்தார் . வேளாண் மரபைச் சேர்ந்த இவர்,சிவனடியார்களிடத்துப் பேரன்பு மிக்கவர். அனுதினமும் இறைவனுக்குச் சம்பா அரிசியின் அமுதும், செங்கீரையையும், மாவடுவையும் நிவேதனப் பொருட்களாக  அளிப்பதை தனது கடமையாகக் கொண்டிருந்தார். எக்காரணத்தைக் கொண்டும் இதில் இருந்து தவறியது இல்லை . ஜாடிக்கு ஏற்ற மூடி போல் இவரது மனைவியும் இவரைப் போலவே இறைவனிடம் பக்தி கொண்டிருந்தாள். கணவன் ,மனைவி இருவருக்கும் இந்த  தெய்வப் பணி மட்டுமே வாழ்க்கையில் முக்கியமான அம்சமாக இருந்தது.

தன் மீது அளவில்லாத அன்பு கொண்ட அடியவர்களின் புகழை உலகறிய செய்வது தானே அந்த ஆடலரசனின் வேலை . தாயனார் மட்டும் இதற்கு விதிவிலக்கா என்ன ? அவரிடமும் இறைவனின் திருவிளையாடல் ஆரம்பமானது. இறைவனுக்குத் தவறாமல் பணிபுரியும் அந்த தம்பதியினருக்கு வறுமையை  ஏற்படுத்தினார். ஆனால் வறுமையைக் கண்டு சற்றும் மனம் தளராமல் வழக்கமாக செய்யும் தொண்டினை அந்த தம்பதியினர் செய்து வந்தனர்.

  நாளுக்கு நாள் வறுமை அதிகமான நிலையிலும் அடியார் சற்றும் மனம் தளராமல், கூலிக்கு நெல் அறுக்கும் பணிக்கு தள்ளப்பட்டும்,அதில்  கிடைத்த  நெல்லில் செந்நெல்லைக் கோயில் நைவேத்தியத்துக்கும், கார்நெல்லை தம் உணவிற்கும் வைத்துக் கொள்வார்.

இங்ஙனம் வறுமையிலும் செம்மையாக  வாழ்ந்து  வந்த அடியாருக்கு செந்நெல்லாகவே கூலியாக கிடைத்ததால், நாயனாருக்கும் அவரின் மனைவிக்கும் அரிசி இல்லாமல், தோட்டத்தில் விளைந்த கீரையைப் பக்குவம் செய்து சாப்பிடத் தொடங்கினார்.

விடுவாரா ஈசன், நாளடைவில் அந்த கீரைக்கும் பஞ்சம் வந்தது.சோர்ந்து போகாமல்  அந்த சமயத்திலும் அடியார் தண்ணீரைக் குடித்து வயிற்றை நிரப்பிக் கொண்டார். ஒருநாள் நாயனார் தன் மனைவியுடன் இறைவனுக்கு திருவமுது படைப்பதற்கான செந்நெல், கீரை, மாவடு ஆகியவற்றை ஓர் கூடையில் சுமந்துக்கொண்டு புறப்பட்டார். பசியால் ஏற்பட்ட சோர்வு அவரை மிகவும் வருத்தியது.

நாயனார் பசியினால் நிலத்தில் விழப்போக ,அம்மையார் தாங்கிக் கொண்டார். கூடையில் சுமந்து வந்த நிவேதனப் பொருள்கள் கீழே விழுந்து சிதறியதால் , நாயனார் மனம் கலங்கினார்.இதற்கும் மேலும் தான் உயிர் வாழ விரும்பாமல் , தம்மிடம் இருந்த அரிவாளால் கழுத்தை அரிந்துகொள்ள துணிந்தார்.

 

                                                                  

அவரது பக்தியினைக் கண்ட அம்பலத்தரசன் தொண்டரைத் தடுத்தாட் கொண்டார். திருவமுது சிந்திய நிலவெடிப்பிலிருந்து ருத்திராக்ஷ மாலையும், திருநீறும் அணியப் பெற்ற திருக்கரம் ஒன்று வெளிப்பட்டது.

அத்திருக்கரம் நாயனாரின் கையைப் பற்றியது. இறைவனின் ஸ்பரிசத்திலே மெய் உருகி நின்றார் நாயனார். அவர் கையில் இருந்து  அரிவாள் தானாக நழுவியது. நிலத்தில் இருந்து வெடுக் வெடுக் என்று ஒலி கேட்டது. அவ்வொலியைக் கேட்ட நாயனார் தான் நிலத்தில் கொட்டிய மாவடுவை எம்பெருமான் ஏற்றுக்கொண்டார் என்பதற்கு அறிகுறியாகத்தான் இந்த ஓசை கேட்கிறது என்று உணர்ந்து அகமகிழ்ந்தார்.

இறைவனின் திருவருட் கருணையை எண்ணி எண்ணி மனம் உருகிய நாயனாரும் அவர் மனைவியாரும் நிலத்தில் வீழ்ந்து வணங்கி எழுந்தனர். அடியவரை ஆட்கொண்ட இறைவன் சக்தி சமேதராய்த் தம்பதியர்க்குப் பேரானந்த காட்சி அளித்தார். இறைவன் நாயனாருக்கும் அவர் தம் மனைவியாருக்கும் என்றென்றும் தம் அருகிலேயே இருந்து மகிழ்ந்து வாழும் பேரின்பப் பேற்றினை அருளினார்.

 

 



Leave a Comment