முக்திக்கு வழிகாட்டும் பகவான் ஸ்ரீ ரமண மகரிஷி


 

எல்லோரும் தான் இந்த மண்ணில் பிறக்கிறோம் , ஜீவனம் நடத்துகிறோம் , மூப்பு வந்தால் இறக்கிறோம் . ஆனால் இதில் வெகு சிலரே இறைவனின் அம்சமாக இந்த உலகில் பிறக்கின்றனர் . வாழும் போதும் , இவ்வுலகை விட்டு மறைந்த பின்பும் மக்கள் மனதில் நிலையான இடத்தை  பிடித்து மகான் ஆகின்றனர் . இதில்,  தான் வாழும் காலத்திலேயே மக்களால் பகவான் என்றும் மகரிஷி என்று அழைக்கப்பட்டு வணங்கப்பட்டவர் ரமணர் .

விருதுநகர் மாவட்டத்தில் திருச்சுழியில் சுந்தரம் ஐயர், அழகம்மாள் தம்பதியருக்கு எல்லோரையும் போல் சாதரணமாக பிறந்த வேங்கடரமணன் தான் யார் என்று கேள்விக்கு விடை தேடி இவ்வுலக பந்தம்  துறந்து துறவியானது தன் பதினாறாம் வயதில். 

 

                                                          

காவ்ய கண்ட கணபதிமுனி என்ற சமஸ்கிருத பண்டிதரால்,  வேங்கடரமணன்   'ரமண மகரிஷி' யானார் . ஆன்மிகத்தில் பற்றுக் கொண்டவர்கள் , மலரை நாடி வரும் தேனீக்களாக  பல மாநிலங்களில் இருந்தும், நாடுகளில் இருந்தும் இனம் , மொழி , மத வேறுபாடில்லாமல்  அவரால் ஈர்க்கப்பட்டார்கள் திருவண்ணாமலை நோக்கி வந்தனர் . அவரை தங்கள் வாழ் நாளில் தரிசிக்க முடிந்தவர்கள் பாக்கியம் பெற்றவர்கள் .

இன்றும் ரமணாச்ரமத்திற்கு  தம்மை நாடி வரும் அன்பர்களுக்கு சூட்சும ரீதியில் பகவான் உதவிக் கொண்டுதான் இருக்கிறார் என்பதை அவரின் பக்தர்கள் அனுபவித்துவரும்  மறுக்க முடியாத உண்மை.

உண்மையான பக்திக்கு சாஸ்திரமும் வேண்டாம் சம்பிரதாயமும் வேண்டாம் , பக்தனின் மனதில் நல்ல இறை சிந்தனை மனது இருந்தால் மட்டும் போதும் என்று தன்னுடைய அடியவர் ஒருவருக்கு ரமணர் உணர்த்திய ஒரு நிகழ்வை அறிந்துக்கொள்வோம் .

ரமணமகரிஷி திருவண்ணாமலை ஆசிரமத்தில் இருந்த போது, அவரைப் பார்க்க பல வேதவிற்பன்னர்கள் வருவார்கள். முக்தியடைவது பற்றி பல விஷயங்களை ரமணரும் அவர்களுடன் விவாதிப்பார்கள்

 அவருக்கு சேவை செய்யும் பக்தர் ஒருவர், இதையெல்லாம் பார்த்துகொண்டு இருப்பார் .தன்னால்  இந்த வேதவிற்பன்னர்களைப் போல பேச முடியவில்லையே, வேதத்தைப் படிக்காததால் முக்தி கிடைக்கும் வாய்ப்பு போய்விட்டதே என வருந்துவார்.

 தன்னுடன் இருக்கும் அடியவர்களின் எண்ண ஓட்டத்தை அறிந்துக்கொள்ள முடியாதவரா பகவான் . அவரது ஏக்கத்தைப் புரிந்து கொண்டார் ரமணர்.ஒருநாள், தனக்கு அவர் பணிவிடை செய்து கொண்டிருந்த போது, இன்று சவரம் செய்து கொண்டாயா? எனக் கேட்டார். அவர் ஏதும் புரியாமல், ஆமாம் சுவாமி என்றார்.

 கண்ணாடியைப் பார்த்து தானே சவரம் செய்தாய்?'' என்று திரும்பவும் கேட்டார் ரமணர். பக்தர் கலவரத்துடன் ஏதும் புரியாமல், ஆமாம் என்று பணிவுடன் தலையாட்டினார். கண்ணாடியைப் பார்த்து நீ சவரம் செய்தாய். அதாவது, நீ சவரம் செய்யும்வரை அது உனக்கு தேவைப்படுகிறது.

 உன் முகத்தை அழகாக்கும் வரை அது உதவுகிறது. ஆனால், அந்தக்கண்ணாடியில் உன் முகத்தைப் பார்க்கலாமே தவிர, கண்ணாடியே உனக்கு சவரம் செய்து விடுமா?' என்றார் . ரமணரிடம், முடியாது சுவாமி, என்றார் பக்தர்.

அதேபோல் தான் வேதங்களும், உபநிஷதங்களும், சாஸ்திரங்களும். நீ சிரமப்படாமல், காயப்படாமல், முக்தியடைய அவை உதவும் அவ்வளவு தான். அவற்றால் உனக்கு முக்தியை வாங்கித்தர முடியாது. தீவிர பக்தியும், இறைவழிபாடும் மட்டுமே உனக்கு முக்தியைத் தரும். உன்னை இறைவனடியில் சேர்க்கும் . அதை மட்டும் நீ செய்தால் போதும் என்றார்.

இத்தனை காலம் மனதிற்குள் தான் எண்ணி மருகிக்கொண்டிருந்த ஒரு விஷயத்தில் , ரமணரின் இந்த விளக்கத்தால் தெளிவடைந்த அந்த அன்பர் தனது கண்ணீரை பகவானின்  திரு கமலா பாதங்களுக்கு அர்ப்பணித்தார் . எங்கும் நீக்கமற நிறைந்திருக்கும் இறையருளை  பெற்றுக் கொள்ள  தூய்மையான நம் மனமே சிறந்த பாத்திரம் அல்லவா ...?

 



Leave a Comment