நளனுக்கு நல் வாழ்வு அளித்த திருநள்ளாற்று நாயகன்


ஒருமுறை தேவலோகத்தில் ஒரு மண்டபம் கட்ட முடிவாயிற்று. அதில், தேவலோகத்தில் வசிப்பவர்கள் அனைவரும் தங்கி, ஆட்டம், பாட்டம் கொண்டாட்டமாக இருக்கலாம் என்பது திட்டம். சிவபெருமானுக்கு இதில் இஷ்டமில்லை. அதேநேரம், அவரது மனைவி பார்வதி மண்டபம் கட்டும் விஷயத்தில் ஆர்வமாக இருந்தாள்.தேவஜோதிடர்கள் மண்டபம் கட்ட நாள் பார்த்தனர். அப்போது ஒருவர், இதைக் கட்டி முடித்தாலும் எரிந்து போகும். சனியின் பார்வை சரியில்லை, என்றார். இருந்தாலும், சனீஸ்வரனை சரிக்கட்டி விடலாம் என நினைத்த பார்வதி மண்டபத்தை கட்ட ஏற்பாடு செய்தாள். பார்வதி சிவனிடம், மண்டபத்தை அழியாமல் பாதுகாக்கும்படி சனீஸ்வரனிடம் சொல்வோம். அவன் நம்மை மீறவா செய்வான்? அப்படி மீறினால், நீங்கள் எனக்கு ஒரு சமிக்ஞை செய்யுங்கள். அவன் எரிப்பதற்கு முன் நானே எரித்து விடுகிறேன். அவன் ஜெயிக்கக்கூடாது என்றாள். எல்லாருக்கும் பாவபுண்ணிய பலனைத் தர வேண்டும் என்ற உத்தரவு போட்டவரே மீறலாம் என்றால் எப்படி? சிவன் பார்வதியிடம், நானே அவனிடம் விஷயத்தைச் சொல்கிறேன். அவன் கேட்க மறுத்தால், தலைக்கு மேல் உடுக்கையைத் தூக்கி அடித்து சமிக்ஞை செய்கிறேன். நீ தீ வைத்து விடு, என சொல்லிவிட்டு சென்றார். சனீஸ்வரனிடம் சென்று, தேவர்களுக்காக இந்த மண்டபத்தை விட்டுக்கொடேன், என்றார். சிவனே சொல்லும் போது என்ன செய்ய!சனீஸ்வரர் தடுமாறினார். வேறு வழியின்றி, பெருமானே! தாங்கள் நடனமாடுவதில் வல்லவர். உங்கள் நடனத்தை நான் பார்த்ததில்லை. எனக்காக ஆடிக்காட்டினால் விட்டு விடுகிறேன், என்றார்.எனக்கு சகாயம் செய்த உனக்கு நான் இதைக்கூடவா செய்யமாட்டேன்! என்ற சிவன், உடுக்கையை தலைக்கு மேல் தூக்கி அடித்தபடியே ஆடினார். பார்வதியின் காதில் சத்தம் விழுந்தது. ஆஹா! சனீஸ்வரன் சம்மதிக்கவில்லை போலிருக்கிறதே! என்று எண்ணியவள், மண்டபத்துக்கு தீ வைத்து விட்டாள். சனீஸ்வரனும் கடமையைச் செய்து விட்டார், சிவனும் நினைத்ததை சாதித்து விட்டார். அவரவர் பாவ புண்ணியத்தைப் பொறுத்து சனீஸ்வரன் பலன் வழங்கியே தீருவார் என்பதற்கு இந்த சம்பவத்தை ஒரு  உதாரணமாகக் கொள்ளலாம் .

 

மூன்றாவது சுற்று

 

படபடப்பையும், பயத்தையும் தரும்  ஏழரையின் மூன்றாவது சுற்று  ஐம்பது வயதைத்தாண்டி வரும் . இள வட்டங்கள் மத்தியில் ஏளனமாகப் பார்க்கப்படும் போதும் நிதானம் இழக்காமல் இருக்க வேண்டும் . நம்மிடத்தில் ஒரு கட்டுப்பாடும் , மன முதிர்ச்சியையும் கொண்டு வரும் காலகட்டம் இது .  

எது நடந்தாலும் நெற்றிக் கண்ணை திறந்து குற்றம் குற்றமே என்று வெறும் குற்றத்தை மட்டுமே கண்டுபிடித்துக் கொண்டிருக்கக் கூடாது. மொத்தத்தில் இந்த மூன்றாவது சனியில் நமக்கென்று முதல் மரியாதையை எதிர்பார்க்கக் கூடாது. விட்டு கொடுத்துப் போவதால் கெட்டுப் போகப்போவதில்லை என்று தெளிந்தால் இனி இருக்கப்போகும் வாழ்க்கை தெளிந்த நீரோடை தான் . எல்லோருக்கும் எல்லா பணிகளிலும் உதவியாக இருந்தால் நம்மை  சனி உயர்ந்த இடத்தில் வைத்து அழகு பார்ப்பார்.

சனி தோஷம் நீங்குவதற்கு சனிக் கிழமைகள் தோறும் விரதமிருந்து, சனி பகவான் சந்நதியில் இரண்டு அகல் விளக்குகளில் நல்லெண்ணெய் ஊற்றி தீபமிட்டு, எள்ளன்னம் நைவேத்யம் படைத்து, மனமுருக, சனி கவசம்,சனிஸ்வர அஷ்டோத்ரம் பாராயணம் செய்திடலாம். சனி பகவான் ஸ்தோத்திரப் பிரியர் என்பதால்  இதன் மூலம்  பயன் பெறலாம் . முடிந்தவரை ஏழைகளுக்கு எள்ளன்னம், கருப்பு வஸ்திரங்களை தட்சணையுடன் தானம் தந்தும் அவர் கருணையைப் பெறலாம் . சனியின் பார்வை நேரிடையாக நம்மீதுபடக்கூடாது  என்பதால் ,சனி பகவானை நேருக்குநேர் வணங்காமல் பக்கவாட்டில் நின்றவாறு வணங்க வேண்டும் என்பது நியதி .

 

 சனியின் தோஷத்திற்கு ஆளான ஸ்ரீ நள சக்கரவர்த்தி பட்டப் பாடு நாம் அனைவரும் அறிந்ததே .  ஏழரை ஆண்டு சனி பிடித்து, எல்லா துன்பங்களையும் அனுபவித்த நளன்  மனைவியையும், குழந்தைகளையும் விட்டு விட்டு காட்டுக்குச் செல்லும் சமயம் கார்கோடகன் என்ற பாம்பு கடிக்க சுய உருவத்தை இழக்க நேரிட்டது. பல துன்பங்களுக்குப் பின் அயோத்தி அரசனிடம் தேரோட்டியாக நளன் வேலை பார்த்தார். நளனின் மனைவியான தமயந்தி தன் கணவர் தோற்றம் மாறி வாழ்ந்து வருவதை ஒற்றர்கள் மூலம் அறிந்து மிகவும் மன வேதனை அடைந்தாள்.

நளமகராஜன் இந்த பிரமை நீங்க திருநள்ளாறுக்கு குடும்பத்துடன் வந்து வழிபட ஏழரை சனியின் கொடுமை நீங்கியதாகத் அறிகிறோம் .

"நிடத நாட்டு அரசன் நள சக்கரவர்த்தி நீ அரசர்களுள் சிறந்தவன். தோல்வியை அறியாதவன். உன்னிடம் ஏழரை ஆண்டுகள் வசித்து வந்தேன். உனது குடும்பத்தை யார் தரிசனம் செய்கின்றார்களோ, அவர்களை நான் காப்பேன் . நீ எனக்கு ஒரு தீர்த்தத்தை உருவாக்கு. இந்த நள தீர்த்தத்தில் நல்லெண்ணெய் தேய்த்து நீராடி என்னை தரிசனம் செய்பவர்களுக்கு என்னால் வரும் துன்பங்கள் யாவும் நீக்கப்படும் என்று என்று சனீஸ்வர பகவான் அருள்பாலித்தார் என்கிறது புராணம் .

நளனும் அவ்வாறே நள தீர்த்தத்தை உருவாக்கி ஸ்ரீ சனீஸ்வர பகவானின் அருளால் இழந்த செல்வத்தைப் பெற்று இன்புற்றார் என்பதை அறியும் போது ,  உண்மையில் சனி பகவான் கொடுக்க ,எவர் தடுக்க முடியும் என்ற வழக்கு உண்மை என்பது தெளிவாகிறது .  

 

சனி பகவான் துதிப்பாடல்

 

சங்கடந் தீர்க்கும் சனி பகவானே

மங்களம் பொங்க மனம் வைத்தருள்வாய்

சச்சரவின்றி சாகா நெறியில்

இச்சகம் வாழ இன்னருள் தா தா



Leave a Comment