நவராத்திரி கொண்டாட்டத்தின் ஆன்மிகம், அறிவியல் பின்னனி


சிவனை வழிபடக்கூடியது சிவராத்திரி என்றும், அம்பாளை வழிபடுவதற்கு நவராத்திரி என நம் இந்து மதத்தில் ஒரு விழாவாக கடைப்பிடித்து வருகின்றோம்.

சர்வம் சக்தி மயம் என கூறுவது வழக்கம். நவராத்திரி என்றால் ஒன்பது இரவு பொருள் உண்டு. நவ என்றால் ஒன்பது என்றும், புதுமை என்ற அர்த்தம் உண்டு. ஒன்பது ராத்திரிகள் அம்பிகையை வழிபடக்கூடிய உன்னதமான விழா தான் இந்த நவராத்திரி திருவிழா.

நவராத்திரி  பண்டிகை மைசூருவில் மிக கோலாகலமாக கொண்டாடப்படுவது வழக்கம். அதே போல தமிழத்தில் தூத்துக்குடியில் அமைந்துள்ள குலசேகரப்பட்டியில் இருக்கும் முத்தாரம்மன் கோயிலில் மிக விசேஷமாக கொண்டாடப்படுகிறது. 

அம்பாள் மகிசாசூரனை வதம் செய்வதற்காக இந்த ஒன்பது நாட்கள் தவம் நோற்ற காலம் தான் இந்த நவராத்திரி. முப்பெரும் தேவியர்களான மலைமகள், அலைமகள், கலைமகள் இந்த மூன்று தேவியரும் ஒரு ரூபமாக வந்து மகிசாசூரனை வதம் செய்த திருவிழா தான் இந்த நவராத்திரி.

நவராத்திரி தினங்களில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு தானியங்களால் நெய்வேத்யம் செய்து அம்பாளுக்குப் படைத்து, அதை அருகில் உள்ளவர்களுக்கு கொடுப்பது வழக்கம்.

புரட்டாசி மாதத்தில் அசைவம் சாப்பிடக்கூடாது என முன்னோர்கள் கூறுவது வழக்கம். வெயில் காலம், காற்று காலம், மழைக் காலம் என இருக்கும் நிலையில், இந்த புரட்டாசி மாதத்தில் மழையால் ஏற்பட்ட குளிர்ச்சியால், பூமி இத்தனை நாட்களாக உட்கிரகித்திருந்த வெப்பத்தை வெளியிடும் காலம். இதனால் நம் உடலுக்கு உஷ்ணம் அதிகமாகும். இந்த காலத்தில் அசைவம் சாப்பிட்டால் மேலும் உஷ்ணம் அதிகரித்து வியாதிகளை ஏற்படுத்தும்.

நாம் இந்த காலத்தில் கொண்டாடப்படும் நவராத்திரி விழாவின் போது, பிரசாதமாக வழங்கப்படும் தானியங்களால் ஆன பிரசாதம் நம் உடலுக்கு தேவையான ஆரோக்கியம் கொடுத்து, உடலை வலுப்படுத்தவல்லது.

இதனால் நவராத்திரி விழாவை நாம் வெறும் ஆன்மிக ரீதியாகப் பார்க்காமல், அதை அறிவியல் ரீதியாகவும் பார்த்து அதன் பாரம்பரியத்தைக் காத்து, நம் தலைமுறையை பாரம்பரியத்தோடு வளர்ப்பது நம் கடமை.



Leave a Comment