பழனியில் முதன் முறையாக பங்குனி உத்திர திருவிழா ரத்து


பழனி முருகன் மலை கோவிலில் கோவில் வரலாற்றிலேயே முதன் முறையாக பங்குனி உத்திரம் திருவிழா கொரோனா வைரஸ் எதிரொலி காரணமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.

பழனி முருகன் கோவிலில் நடைபெறும் திருவிழாக்களில் முக்கியமான திருவிழா பங்குனி உத்திரம் திருவிழா. இந்த திருவிழாவையொட்டி பக்தர்கள் கொடுமுடி காவிரி ஆற்றிலிருந்து தீர்த்த காவடி எடுத்து வந்து முருகப் பெருமானுக்கு அபிஷேகம் செய்து மகிழ்வார்கள். 

இத்திருவிழாவில் திருக்கல்யாணம், தேரோட்டம் ஆகியவை நடைபெறும். கோவை, ஈரோடு, திருப்பூர், சேலம், தர்மபுரி ஆகிய மாவட்டங்களை சேர்ந்த சுமார் 5 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் தீர்த்த காவடி எடுத்து வருவது வழக்கம். 

ஆனால் இந்நிலையில் உலகம் முழுவதும் அச்சுறுத்தும் வைரஸின் தாக்கத்தின் எதிரொலியாக பங்குனி உத்திரம் திருவிழா முதல் முறையாக ரத்து செய்யப்பட்டுள்ளது. முருகன் கோவில் பங்குனி உத்திரம் திருவிழா வரும் 31ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்க இருந்தது. கோயிலின் ஆகம விதிப்படி பூஜைகள் நடைபெறும் என்று கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

சில அசம்பாவித நிகழ்வுகளால் சுவாமி புறப்பாடு, தேரோட்டம் மட்டுமே சில நேரங்களில் பழனி கோவிலில் ரத்தான நிலையில் முழு திருவிழாவும் ரத்து செய்யப்படுவது கோயில் வரலாற்றில் இதுவே முதல்முறையாகும். இதனால் பக்தர்கள் மத்தியில் கவலையை ஏற்படுத்தியுள்ளது.
 



Leave a Comment