வள்ளியூர் சுப்பிரமணிய சுவாமி கோயில்


நெல்லை மாவட்ட திருக்கோயில்கள்

வள்ளியூர் சுப்பிரமணிய சுவாமி கோயில்

நெல்லை - கன்னியாகுமரி தேசிய நெடுஞ்சாலையில், நெல்லையிலிருந்து 42 கி.மீ., தொலைவில் உள்ளது வள்ளியூர். இந்த ஊரின் மையப்பகுதியிலேயே அமைந்துள்ளது, வள்ளி, தெய்வானை சமேத வள்ளியூர் ஸ்ரீசுப்பிரமணிய சுவாமி திருக்கோயில்.

திருத்தணியில் வள்ளியை மணம் முடித்த முருகப்பெருமான் மகேந்திரகிரி மலையின் கிழக்குப் பக்கத்தில் உள்ள இந்தக் குன்றில் குடியேறியதால் இவ்வூர்வள்ளியூர்என்றானது. சூரபத்மனை முருகப்பெருமான் சம்ஹாரம் செய்த வேளையில் கிரௌஞ்ச மலையையும் தகர்த்தெறிந்தார். அதன் துண்டுகள் விழுந்து உருவான மலையே வள்ளிமலை என்கிறார்கள். முருகனின் வேல் பட்டு ஒளிர்ந்த மலை என்பதால் இதைப் பூரணகிரி என்றும் அழைக்கிறார்கள். தென் பகுதிக்கு வந்த அகத்திய முனிவர், இந்த வள்ளி மலைக்கு வந்து வள்ளி பிராட்டியுடன் எழுந்தருளியிருக்கும் முருகப்பெருமானை வழிபட்டார். முருகப்பெருமான் குரு ஸ்தானத்தில் கிழக்கு முகமாக நின்று உபதேசிக்க, அகத்திய முனிவர் சீடரின் நிலையிலிருந்து மேற்கு முகமாக நின்று உபதேசம் பெற்ற தலம். உபதேசம் பெற்ற பிறகு, அந்தக் குன்றை பிரதட்சிணமாகக் கிரிவலம் வந்து கந்தக் கடவுளை வழிபட்டார்.

அகத்தியருக்குப் 'பிரம்ம ஞான உபதேசம்' அருளிய காரணத்தினால் வள்ளியூர் ஸ்ரீசுப்பிரமணிய சுவாமி, 'ஞானஸ்கந்தன்' என்றும் அழைக்கப்படுகிறார். ---இந்த அற்புதக் காட்சியை தரிசித்தது பங்குனி மாதத்தில் வரும் கடைசி வெள்ளிக்கிழமை என்பது தலபுராணம் கூறும் செய்தி.

நான்கு திருக்கரங்களில் வஜ்ஜிரம், சக்தி, மலரும் ஏந்தி, இடக் கரத்தை தொடையின் மீது வைத்த கோலத்தில் முருகப்பெருமான் அருள் தரும் காட்சி அலாதியானது. மேலும் வள்ளி, தெய்வானையும்கூட இந்தக் கோயிலில் அமிர்தவல்லி, சுந்தரவல்லியாகவே காட்சி தருகிறார்கள். அகத்தியர், இடைக்காடர், வண்ணச்சரபம் தண்டபாணி தேசிகர் உள்ளிட்ட பலரும் வணங்கிப் போற்றிய மகாமூர்த்தி இவர்.

வள்ளியூர் முருகன் கோயில், தென்மாவட்டங்களில் உள்ள குகைக் கோயில்களில் சிறப்பு பெற்ற திருத்தலமாகும். இந்த கோயிலின் முன்பகுதியில் தெப்பக்குளமும்மையப்பகுதியில் மண்டபமும் அமைந்துள்ளது. வள்ளியூர், போக்குவரத்துக்கு மிகவும் ஏற்ற பகுதி. அதுபோலவே இங்கு தங்கும் விடுதிகளும் ஏராளமாக உள்ளன.

 கேட்ட வரங்களை அருளும் இந்த வள்ளியூருக்கு வந்து கந்தனை வணங்கி அருள்பெறலாம்தானே!



Leave a Comment