சிவலிங்கத்தின் மீது சூரியன் ஒளிக்கதிர் படும் அதிசய கோயில் !!


திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறில் உள்ள வேதபுரீஸ்வரர் கோவிலில் சிவலிங்கத்தின் மீது ரத சப்தமி அன்று சூரியன் ஒளிக்கதிர் படும் அதிசய நிகழ்வு ஆண்டுதோறும் நடைபெறுகிறது.

பழமையான இந்த ஆலயம் உள்ள திருத்தலத்தின் புராணப் பெயர் திருவோத்தூர். இத் தலத்தில் தேவர்களுக்கு ஈசன் வேதங்களை உபதேசம் செய்ததாக வரலாறு தெரிவிக்கிறது. 

இந்த இறைவன் வேதபுரீஸ்வரர் என்று அழைக்கப்படுகிறார். சிவலிங்க வடிவில் இறைவன் சுயம்பு மூர்த்தியாக வீற்றிருந்து அருள்பாலிக்கிறார். இந்த ஆலயத்தில் உள்ள இறைவனின் மீது தினமும் சூரிய ஒளிக்கதிர் விழுகிறது. இருப்பினும், ரத சப்தமி அன்று இறைவன் மீது சூரியக் கதிர் படுவது சிறப்பு அம்சமாக பார்க்கப்படுகிறது.

இறைவியின் திருநாமம் இளமுலையம்பிகை என்பதாகும். அன்னைக்கு பாலகுஜாம்பிகை என்ற பெயரும் உள்ளது. ஆலயத்தில் மகா மண்டபத்தில் நின்றபடி சுவாமி, அம்பாள், முருகப்பெருமான், விநாயகர், நவக்கிரகங்கள், தலமரம் என்று எல்லாவற்றையும் தரிசிக்க முடியும். ஒரே இடத்தில் நின்றபடி இவை அனைத்தையும் தரிசினம் செய்வது இந்த ஆலயத்தில் முக்கிய சிறப்பாக உள்ளது.

சிவபெருமானைப் போற்றி பாடப்பட்ட தேவாரப் பாடல்கள் பெற்ற 274 சிவாலயங்களில் இது 240–வது தலமாக விளங்குகிறது. இத்தல இறைவனை திருஞானசம்பந்தரும், திருநாவுக்கரசரும் பாடிப் புகழ்ந்துள்ளனர். இங்குள்ள முருகப்பெருமானை அருண கிரிநாதர் பாடியுள்ளார்.

இத்தல இறைவனான வேதபுரீஸ்வரரை, விநாயகர், முருகப்பெருமான், பைரவர், திருமால், பிரம்மன், சூரியன், தொண்டைமான் ஆகியோர் வழிபட்டு பேறு பெற்றுள்ளனர். இங்குள்ள சேயாறு முருகப்பெருமானால் தோற்றுவிக்கப்பட்டு, இத்தலத்தில் தீர்த்தமாக விளங்குகிறது. இதன் காரணமாக இந்த ஊர் ‘செய்யாறு’ என்று பெயர் பெற்றுள்ளது. இத்தல விநாயகர் ‘நர்த்தன விநாயகர்’ என்றும், முருகப்பெருமான் ‘சண்முகர்’ என்ற திருநாமத்துடனும் அருள்பாலிக்கின்றனர்.


ஸ்தல புராணம்....
பார்வதியின் தந்தையான தட்சன் யாகம் ஒன்றை நடத்தினான். ஆனால் அந்த யாகத்திற்கு உலகை காத்தருளும் சிவபெருமானை அழைக்கவில்லை. இதுபற்றி அறிந்ததும் பார்வதிதேவி வருத்தம் கொண்டாள். தன் கணவனை அழைக்காததற்கு காரணம் என்ன என்பது பற்றி அறிய அவர் தட்சனிடம் சென்றான். ஆனால் பார்வதி தேவி அங்கு செல்வதற்கு சிவபெருமான் சம்மதிக்கவில்லை.

இருந்தாலும் அவரது சொல்லை மீறி பார்வதிதேவி யாகத்திற்குச் சென்றாள். அங்கு அன்னைக்கு அவமரியாதை ஏற்பட்டது. கணவனின் சொல்லை மீறிச் சென்று அவமானத்தை சந்தித்ததற்காக பாவம் நீங்க, பார்வதிதேவி இத்தலத்தில் வந்து தங்கி இறைவனை நினைத்து தவம் செய்து இறைவனுடன் இணைந்தாள்.

தேவர்களுக்கு வேதத்தை இறைவன் ஓதிவித்தான். சிவபெருமான் தேவர்களுக்கு இத்தலத்தில் வைத்து வேதத்திற்கு பொருள் சொன்னார் என்பதால் இந்தத் தலம் திருவோத்தூர் என்று அழைக்கப்பட்டது என்கிறது தல வரலாறு.
 



Leave a Comment