தோரணமலை முருகன் கோவில் 21 ஆம் தேதி  தைப்பூச திருவிழா 


நெல்லை மாவட்டம் கடையத்திற்கு அருகே தென்றல் தவழும் தென் பொதிகை மலைத்தொடரில் வீற்றிருக்கும் தோரணமலை முருகன் கோவில் தைப்பூச திருவிழா வரும் 21-ந் தேதி நடக்க உள்ளது. தோரணம் போல் மலை அமைந்த காரணத்தால் தோரணமலையாக ஸ்தலம் விளங்குகிறது. அகத்தியர் மாமுனிவர் அமர்ந்து தமிழ் வளர்த்த மலை இது. இம்மலையில் 64 சுனைகள் உள்ளன. இந்த சுனைகளில் உள்ள நீர் புனித நீராக கருதப்படுகிறது. இந்த சுனை நீரை பருகி, இதில் நீராடி முருகனை வழிப்பட்டால் தீராத நோயும் தீரும் என்பது பக்தர்கள் அனுபவித்து கூறும் கூற்றாகும்.

926 படிகளை ஏறி, மலை உச்சியை அடைந்தால், முருகப்பெருமான் கிழக்கு நோக்கி நின்ற கோலத்தில் அருள்பாலிக்கிறார். கையில் வேல் ஏந்தி மயில் வாகனத்தோடு நின்ற கோலத்தில் முருகப்பெருமான் அருள்பாலிக்கிறார். இந்த தலத்தில் முருகன் கிழக்கு நோக்கி திருச்செந்தூர் முருகனை பணித்தபடி உள்ளார். எனவே இத்தலத்தில் குன்றுக்குள் இருக்கும் முருகனை வழிபட்டால் திருச்செந்தூரில் வழிபட்ட அதே பலன்கள் கிடைக்கும் என்பது ஐதீகம். கடையத்தில் சிறிது காலம் வாழ்ந்த மகாகவி பாரதியார் ‘குகைக்குள் வாழும் குகனே’ என்று போற்றிப் பாடியதும் இந்த தோரணமலை முருகனைத்தான்.

 இத்தகைய சிறப்புக்குரிய தோரணமலை முருகன் கோவில் தைப்பூச விழா வரும் 21-ந் தேதி நடக்க இருக்கிறது. அன்றைய தினம் காலை 9 மணிக்கு வள்ளி தெய்வானை சமேத தோரணமலை முருகன் திருக்கல்யாணம் நடக்கிறது. ஸ்ரீலஸ்ரீ சத்யஞான மகாதேவ தேசிக பரமாச்சாரிய சாமிகள் ஆசியுரை வழங்குகிறார்.

அதிகாலை 5 மணிக்கு கணபதி ஹோமம், விவசாயம் தழைக்க அகத்திய பூஜை, மதியம் 2 மணிக்கு ஊட்டி படுகர் இனமக்களின் பாரம்பரிய நடனம், இரவு 7 மணிக்கு வள்ளியம்மாள்புரம் திருமுருகன் உயர்நிலைப்பள்ளி மாணவ-மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள், இரவு 9 மணிக்கு தோரணமலையானின் ஆவணப்படம், பட்டிமன்றம் நடைபெற உள்ளது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை பரம்பரை அறங்காவலர் கே.ஆதிநாராயணன், கே.ஏ.செண்பகராமன் ஆகியோர் செய்து வருகின்றனர்.



Leave a Comment