பஞ்சீகரண தத்துவமும் அகல் விளக்கும்


"அண்டத்தில் உள்ளதுதான் பிண்டத்திலும் உள்ளது” எனும் வரிகளை ஜோதிடத்தில் பலர் சொல்லக் கேட்டிருப்போம். இவ்வாக்கியத்தின் பொருள், புற உலகில் எது இருக்கின்றதோ அது, அக உலகமாகிய நமது உடலிலும் இருக்கின்றது என்பதே. அதாவது, புற உலகம் என்பது மண், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் எனும் பஞ்சபூதங்களை உள்ளடக்கியதாகும்.

நாம் அறியகூடிய இந்த பௌதீக பிரபஞ்சம் முழுவதும் பஞ்சபூதங்களின் வெவ்வேறு விகிதாச்சார கலவையால் உருவானது. உதாரணமாக, கல் அல்லது மண் போன்ற ஜடப் பொருள்கள் பஞ்சபூதங்களின் கலவை. சூரியன் உள்ளிட்ட நட்சத்திரங்களும் பூமி போன்ற கிரகங்களும் இந்தப் பஞ்சபூதங்களின் கலவையாக அறிவியல் அறிஞர்களின் விளக்கத்தின்படி உருவாயின.

மண், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் இவையே பஞ்சபூதங்கள். இவை அனைத்தும் ஒன்றுடன் ஒன்று சேர்ந்து உருவானதுதான் மனித உடல் எனும் பிரபஞ்சம்.

ஐம்பூதங்களில், ஒவ்வொரு பூதமும் இருகூறாக ஆகி, அதில் ஒரு கூறை நிறுத்திக்கொண்டு, மற்றொரு கூறை நான்கு கூறுகள் ஆக்கி, அந்த நான்கும் மற்ற நான்கு பூதங்களுக்குக் கொடுத்தும் வாங்கியும் தம்மில் கலப்பது பஞ்சீகரணம் எனப்படும். ஆகாயம் துவாரமாகி மற்ற பூதங்களுக்கு இடம் கொடுக்கும் இயல்பானது. வாயு சலித்து மற்ற பூதங்களை திரட்டும் இயல்பானது. தேயு சுட்டு ஒன்றாக்கும் இயல்பானது. அப்பு குளிர்வித்து பதம் செய்யும் இயல்பானது. பிருதிவி கடினமாய் ஆக்கும் இயல்பானது.

எந்தக் கடவுளுக்கு தீபம் ஏற்றினாலும் மண்ணினால் செய்யப்பட்ட அகல் விளக்கில் தீபம் ஏற்றுவது சிறந்தது. அதற்குக் காரணமும் உண்டு. அதாவது, அகல் விளக்கு ஏழை ஒருவனால் பஞ்சபூதத் தத்துவங்களின் அடிப்படையில் தயார் செய்யப்படுகிறது. அவன் களிமண்ணில் நீரை ஊற்றி, சூரிய ஒளியில் காயவைத்து, காற்றின் உதவி கொண்டு நெருப்பில் இட்டு ஒரு அழகான அகல் விளக்கைச் செய்கிறான்.

மேலும், அகல் விளக்கை ஏற்றும்போதும் மண்ணை குறிக்கும் அகல் விளக்கில், நீரைக் குறிக்கும் நல்லெண்ணெய் விட்டு, ஸ்வாசம் எனும் வாயுவை குறிக்கும் திரி போட்டு, நெருப்பு தத்துவத்தை குறிக்கும் விதமாக ஏற்றும்போது, வெளிச்சம் எனும் ஆகாயம் உருவாகிறது.



Leave a Comment