அரோகரா கோஷங்கள் முழங்க திருச்செந்தூரில் சூரசம்ஹாரம்...


திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கந்தசஷ்டி விழாவின் சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் விமர்சையாக நடந்தது. பக்தி கோஷங்கள் விண்ணதிர முழங்க லட்சக்கணக்கான பக்தர்கள் சுவாமியை தரிசனம் செய்தனர்.


திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கந்தசஷ்டி விழாவின் சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் நடந்தது. பக்தி கோஷங்கள் விண்ணதிர முழங்க லட்சக்கணக்கான பக்தர்கள் சுவாமியை தரிசனம் செய்தனர். ஆணவம் கொண்ட சூரபதுமனை, முருகப்பெருமான் சம்ஹாரம் செய்வதே கந்தசஷ்டி விழாவின் சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் ஆகும்.

அசுரர்களால் சிறைவாசம் அனுபவித்த தேவர்களை விடுவிக்கவும், கொடுமைகள் செய்த அசுரத் தலைவனான சூரபதுமனை வதம் செய்யவும் சிவபெருமானின் மைந்தனாக, முருகப்பெருமான் அவதரித்தார். தன்னை எதிர்த்த சூரனை அழித்ததோடு, அவனை ஆட்கொண்டு தன்னோடு இருக்குமாறு அருளிய கந்தனின் கருணை நிகழ்வுதான் திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவிலில் கந்தசஷ்டி விழாவாக கொண்டாடப்படுகிறது. திருச்செந்தூர் கோவிலானது, கந்தனின் அறுபடை வீடுகளில் 2-ம் படை வீடாகவும், திருச்சீரலைவாய் என்ற திருநாமத்துடனும் விளங்குகிறது.

சுவாமி, வள்ளி, தெய்வானை அம்பாளுடன் தங்க சப்பரத்தில் சண்முக விலாச மண்டபத்தில் எழுந்தருளி, பக்தர்களுக்கு அருள்பாலித்தார். சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. முக்கிய நிகழ்ச்சியான சூரசம்ஹாரத்தையொட்டி அதிகாலை 1 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டது. தொடர்ந்து விஸ்வரூப தீபாராதனை, உதய மார்த்தாண்ட அபிஷேகம், உச்சிகால அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து சுவாமி ஜெயந்திநாதர், வள்ளி- தெய்வானையுடன் தங்க சப்பரத்தில் சண்முகவிலாச மண்டபத்தில் எழுந்தருளினார்.

தீபாராதனைக்கு பின் திருவாவடுதுறை ஆதீன கந்தசஷ்டி மண்டபத்தில் சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடந்தது. ஆனந்தவல்லி அம்பாள் சமேத சிவக்கொழுந்தீசுவரர் கோவிலில் இருந்து சூரபதுமன் தனது படை வீரர்களுடன் முக்கிய வீதிகளின் வழியாக வலம் வந்து மாலையில் கோவில் கடற்கரைக்கு வந்து சேர்ந்தான். சுவாமி எப்போது போருக்கு வருவார்? என்று எதிர்பார்த்து காத்திருந்தான். சுவாமி ஜெயந்திநாதர், வண்ண மலர்களாலான மாலைகளை அணிந்து, சிறப்பு அலங்காரத்துடன் கையில் வேல் ஏந்தி, சூரபதுமனை வதம் செய்ய கடற்கரைக்கு புறப்பட்டார். சுவாமி வருகையை எதிர்பார்த்து கடற்கரையில் காத்திருந்த லட்சக்கணக்கான பக்தர்கள், முருகப்பெருமானை கண்டதும் பக்தி கோஷங்களை விண்ணதிர எழுப்பினர்.

சூரபதுமனின் தம்பியும், யானைமுகம் கொண்டவனுமாகிய தாரகாசூரன், முதலில் தனது பரிவாரங்களுடன், முருக பெருமானை நோக்கி போர் புரிய சுற்றி வந்தான். தாரகாசூரனை, முருகப்பெருமான் வேல் கொண்டு வதம் செய்தார். பின்னர் மற்றொரு தம்பியான சிங்கமுகம் கொண்ட, சிங்கமுகாசூரன் முருக பெருமானை வலம் இடமாக சுற்றி வந்து, நேருக்கு நேர் போரிட தயாரானான். அவனையும் முருகன் வேலால் வதம் செய்தார். சகோதரர்கள் வீழ்ந்ததை தொடர்ந்து, சூரபதுமன் போர் புரிய வந்தான். முருக கடவுள் வேல் எடுத்து சூரபதுமனையும் சம்ஹாரம் செய்தார். அப்போது வானத்தில் கருடன்கள் சுற்றி வட்டமிட்டன.


இந்த காட்சியை கண்டு, கடற்கரையில் கூடி இருந்த லட்சக்கணக்கான பக்தர்கள் ‘முருகனுக்கு அரோகரா, கந்தனுக்கு அரோகரா, வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா‘ என்ற பக்தி கோஷங்களை விண்ணதிர எழுப்பி சாமி தரிசனம் செய்தனர்.



Leave a Comment