திருச்செந்தூரில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம்!


அறுபடை வீடுகளில் 2வது படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் நடைபெறும் முக்கிய விழாக்களில் ஒன்று கந்த சஷ்டி விழா. இந்த ஆண்டிற்கான கந்த சஷ்டி விழா கடந்த 8ம் தேதி யாகசாலை பூஜையுடன் தொடங்கியது. 6 நாட்கள் நடைபெறும் இவ்விழாவில் தினந்தோறும் சுவாமி ஜெயந்திநாதருக்கு கோவில் யாகசாலையில் சிறப்பு வேள்வி பூஜைகள், அபிஷேகங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.

கந்த சஷ்டி விழாவை ஒட்டி விரதம் மேற்கொள்ளப்படுவது வழக்கம். இதில், தமிழகம் மட்டுமின்றி வெளிமாநிலங்களில் இருந்தும், இங்கிலாந்து, அமெரிக்கா, சிங்கப்பூர், மலேசியா, இலங்கை போன்ற வெளிநாடுகளில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றுள்ளனர். கோயிலின் உள் பிரகாரம், வெளி பிரகாரம் மற்றும் விடுதிகளில் தங்கி பக்தர்கள் 6 நாள் விரதத்தை கடைபிடித்து வருகின்றனர்.

கந்த சஷ்டி விரதத்தில் பங்கேற்க வெளிநாடுகளில் இருந்து வரும் பக்தர்களின் கூட்டம் ஆண்டுதோறும் அதிகரித்து வருகிறது. கோயிலின் வெளி பிரகாரங்களில் 5 ஆயிரம் பக்தர்கள் தங்கும் விதமாக 8 கொட்டகைகள் அமைக்கப்பட்டுள்ளன. இவற்றில் தங்கியும், தனியார் விடுதிகளில் தங்கியும் பக்தர்கள் விரதம் இருந்து வருகின்றனர்.

அதிகாலை 5 மணிக்கு எழுந்து கடலில் புனித நீராடும் பக்தர்கள், உள்பிரகார யாகசாலை மண்டபத்தில் ஜெயந்திநாதருக்கு நடைபெறும் யாகம், அபிஷேகம், தீபாராதனை நிகழ்ச்சிகளில் பங்கேற்கின்றனர். அதனை தொடர்ந்து, ஓம் சரவணபவ என்று எழுதியும், நாள் முழுவதும் முருகனை வழிபட்டும் விரதம் மேற்கொள்கின்றனர்.

கந்த சஷ்டி விழாவின் முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரம் வரும் 13ஆம் தேதி மாலை நடைபெறுகிறது. அந்த நிகழ்வு முடிந்தவுடன் கடலில் நீராடி, பக்தர்கள் சஷ்டி விரதத்தை நிறைவு செய்துக்கொள்வார்கள். அதற்கு மறுநாள், அதாவது 14ஆம் தேதி திருக்கல்யாண நிகழ்வுடன் கந்த சஷ்டி விழாவும் நிறைவு பெறும்.



Leave a Comment