திருப்பதி ஏழுமலையான் கோவில் சிறப்பு தரிசன முறையில் மாற்றம்


திருப்பதி ஏழுமலையான் கோவிலில் 65 வயது நிரம்பிய முதியோர், மாற்றுத்திறனாளிகள் மற்றும் மனநலம் குன்றியோர் ஆகியோருக்கு சிறப்பு தரிசன முறையை தேவஸ்தானம் அமல்படுத்தி வருகிறது.

அதன்படி, வாரம்தோறும் புதன்கிழமைகளில் காலை 10 மணிக்கு 700 பேர், மதியம் 3 மணிக்கு 700 பேர் என 1,400 முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளி பக்தர்களுக்கு சிறப்பு தரிசன ஏற்பாடுகள் செய்யப்பட்டு வந்தது. அதே போல் வெள்ளிக்கிழமைகளில் மாலை 3 மணிக்கு 700 பேர் இந்த சிறப்பு தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுகிறார்கள்

இதற்காக திருமலையில் உள்ள ஸ்ரீ வெங்கடேஷ்வரா அருங்காட்சியகத்திற்கு எதிரே 7 கவுண்ட்டர்கள் ஏற்பாடு செய்யப்பட்டு முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளி பக்தர்களுக்கு டோக்கன்கள் வழங்கப்படுகின்றன.

இந்த நிலையில் புதன்கிழமைகளில் காலை 10 மணிக்கு செல்லும் சிறப்பு தரிசனம் ரத்து செய்யப்படுவதாக தேவஸ்தான கூடுதல் நிர்வாக அதிகாரி ஸ்ரீநிவாச ராஜு இன்று அறிவித்தார்.

மாற்று நடவடிக்கையாக புதன்கிழமைகளில் மதியம் 3 மணிக்கு 700 பேருக்கு பதிலாக 1000 பக்தர்கள் சிறப்பு தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள் என அவர் கூறினார்.

மேலும் திருமலையில் பக்தர்களின் கூட்டம் குறைவாக இருக்கும் நாட்களில் முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளி பக்தர்கள் 4000 பேர் சிறப்பு தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுவார் என்றும் அவர் தெரிவித்தார்.

அதன்படி மாத்தின் 2 நாட்களில் காலை 10 மணிக்கு 1000 பேர், மதியம் 2 மணிக்கு 2 ஆயிரம் பேர் மற்றும் மதியம் 3 மணிக்கு 1000 பேர் என்கிற முறையில் இந்த சிறப்பு தரிசனம் நடைபெறும் என்றார்.

எனவே கூட்ட நெரிசலில் சிக்கி அவதிப்படாமல் இருக்க முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளி பக்தர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ள வேண்டுமென ஸ்ரீநிவாச ராஜு கேட்டுக்கொண்டார்.



Leave a Comment