வாமன அம்சமாக எழுந்தருளிய திருக்காட்கரை அப்பன்


கேரள மாநிலம் திருக்காட்கரை என்ற இடத்தில் அமைந்துள்ளது திருக்காட்கரை அப்பன் திருக்கோவில்.

இத்திருத்தலத்தில் வாமன அம்சமாக எழுந்தருளி இருக்கும் திருமால் தெற்கு நோக்கி நின்ற கோலத்தில் அருள் புரிகிறார். திருக்காட்கரை அப்பன் என்னும் திருநாமத்தால் அழைக்கப்படும் இந்த பெருமாள் தனது நான்கு கரங்களில் சங்கு, சக்கரம், கதை, தாமரை ஆகியவற்றை ஏந்தியபடி இருக்கிறார். தாயார் பெருஞ்செல்வ நாயகி, வாத்சல்வல்லி என்றும் திருப்பெயரில் விளங்குகிறாள்.

விருத்த விமானம் எனப்படும் விமானத்துடன் கூடிய இந்தக் கோவிலில் சாஸ்தாவிற்கும் மகாலட்சுமிக்கும் சன்னதிகள் உள்ளன. இங்குள்ள சிவலிங்கம் மகாபலி சக்கரவர்த்தி வழிபட்டதாகக் கூறப்படுகிறது.

முதன் முதலாக இந்த கோவிலில் தொடங்கப்பட்ட திருவிழா தான் ஓணம். காலப்போக்கில் கேரளா மாநிலம் முழுவதும் பரவியதாக கூறப்படுகிறது. கபில முனிவர் இந்த தலத்தில் உள்ள பெருமாளை வழிபட்டதால் இங்குள்ள தீர்த்தம் கபில தீர்த்தம் என்று அழைக்கப்படுகிறது. இந்த கபில தீர்த்தத்தில் உள்ள நீரைதான் மகாபலி கமண்டத்தில் எடுத்து வாமனருக்கு மூன்றடி நிலம் தருவதாக தாரை வார்த்துக் கொடுத்ததாகவும் கூறப்படுகிறது.

திருகாட்கரை அப்பனிடம் ஓர் அடியார் பொன் வாழைக்குலைகளைச் சமர்ப்பித்து நேர்ந்து கொள்ளும் வழக்கம் இருந்தது. ஒருநாள் நேர்ந்து கொண்டு வைக்கப்பட்ட பொன் வாழைக் குலைகளில் ஒன்றை
காணவில்லை. இதனால் அந்த நாட்டை சேர்ந்த மன்னன், கோவிலுக்கு தினந்தோறும் வந்து திருக்காட்கரை அப்பனை வழிபடும் யோகி ஒருவரின் மீது சந்தேகம் கொண்டான். அவர் மீது திருட்டுப் பழி சுமத்தி, தண்டனையும் வழங்கினான். ஆனால் காணாமல் போன பொன் வாழைக் குலை திருக்காட்கரை அப்பனின் கோவில் வளாகத்திலே கண்டெடுக்கப்பட்டது.

இதற்கிடையில் தன்னை சந்தேகப்பட்டதால், அனைவரையும் சபித்து அவர் உயிரை மாய்த்துக் கொண்டார். இதனால் அந்த யோகி, அந்த கோவிலை சுற்றி பிரம்ம ராட்சசனாக திரிந்து கொண்டிருந்தார். அதன்பின் பக்தர்கள் அனைவரும் தங்கள் சாபம் தீரவேண்டி யோகியை வழிபட்டு, அந்த கோவிலிலேயே யோகிக்கு கோவில் கட்டி தினமும் வழிபாடு செய்து வந்ததன் காரணமாக, யோகியின் ஆன்மா சாந்தியடைந்தது. திருகாட்கரை அப்பனை வழிபட்டுச் செல்லும் பக்தர்கள், யோகியின் சன்னதிக்கும் சென்று வழிபட்டு செல்கின்றனர்.

நம்மாழ்வார் பதினொரு பாசுரங்களால் இத்திவ்ய தேசத்தை மங்களாசாசனம் செய்துள்ளார். மாதந்தோறும் திருவோண நாளில் நாராயணனை வழிபட்டு விரதம் இருந்தால், சீர் குலைந்த மனநலம் சீராகும். உறவினர் கொண்ட பகை அகலும். பகைவர் நண்பராவர். பொதுவாக, துன்பங்கள் அனைத்தும் நீங்கும். குறிப்பாக வாமனன் அவதரித்த நாளான ஆவணி-வளர்பிறை-துவாதசி-திருவோண நாளன்று, வாமனனை வழிபட்டால், அனைத்து வித நலன்களும் பெறலாம்.

அமைவிடம்: எர்ணா குளத்திலிருந்து திருவனந்தபுரம் செல்லும் ரயில் பாதையில் உள்ள அங்கமாலி ரயில் நிலையத்திற்கு வடகிழக்கே சுமார் 14 கி.மீ தொலைவில் உள்ளது இத்திருக்கோவில்.



Leave a Comment