வெயிலுகந்த அம்மன்...இன்று திருத்தேரில் பவனி!


முருகனின் அறுபடை வீடுகளுள் ஒன்றான திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவிலுடன் இணைந்த அதன் உபகோவிலான வெயிலுகந்த அம்மன் கோவில் ஆவணித் திருவிழா கடந்த 18-ந்தேதி சனிக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கி 10 நாட்கள் நடைபெற்றது. இவ்விழாவின் ஒவ்வொரு நாளும் காலை 7 மணிக்கு பூஞ்சப்பரத்திலும், இரவு 7மணிக்கு அம்மன் பூத, சிம்ம, காளை, வேதாள, அன்னம் ஆகிய வாகனங்களில் எழுந்தருளி எட்டு வீதிகளிலும் பவனி வந்து சவுக்கையில் சேர்க்கை ஒளிவழிபாட்டுக்கு பின்பு கோவில் சேர்தல் நடைபெற்றது.

10-ம் திருவிழாவான இன்று காலை சிம்ம லக்கனத்தில் தேரோட்டம் நடைபெற்றது. தேரோட்டத்தில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர். இன்று மாலை 4மணிக்கு அம்மனுக்கு சுப்பிரமணியசுவாமி கோவில் நாழிக்கிணறு மண்டகப்படியில் தீர்த்தவாரி நடைபெறுகிறது. இரவு 8 மணிக்கு அம்மன் சண்முக விலாசத்தில் அலங்கார சப்பரத்தில் எழுந்தருளி சண்முகருக்கு எதிர் சேவை ஒளிவழிபாடு ஆகி,எட்டு வீதிகளிலும் பவனி வந்து சவுக்கையில் சேர்க்கை ஒளிவழிபாடு பின்பு கோவில் சேர்தல் தொடர்ந்து கொடியிறக்கம் நடைபெறுகிறது. இந்த புனித நிகழ்ச்சியில் எண்ணற்ற பக்தர்கள் கலந்து கொண்டு அம்மன் அருளைப் பெற்றனர்.



Leave a Comment