அன்னை பராசக்தியின் வித்தியாசமான கோலங்கள்


அன்னை பராசக்தி நமக்கு பல ரூபமாக காட்சி தருகிறாள். அவற்றில் சில தலங்களில் மட்டும் வித்தியாசமான கோலத்தில் அருள்பாலிக்கிறாள். அவற்றில் சில….

ஈரோடு, கோபிசெட்டிப்பாளையத்தில் உள்ள அருள்மிகு சாரதா மாரியம்மன் திருக்கோவிலில் அன்னை சுயம்புவாக தோன்றி குழந்தை வடிவில் காட்சி தருகிறாள்.

அன்னை கன்னியாகுமரி, கிழக்கு நோக்கி நின்ற கோலத்தில் காட்சி தருகிறாள். இலுப்பைப் பூமாலையை ஒரு திருக்கரத்தில் தரித்து மற்றொரு திருக்கரத்தைத் தொடை மீது வைத்து தவக்கோல நாயகியாக அன்னை நின்றபடி அருள்பாலிக்கிறாள்.

காரைக்குடி, கொப்புடையம்மன் திருக்கோயிலில் அம்மனுக்கு மூல விக்ரகம் இல்லாமல் உற்சவ விக்ரமே மூலவராக வழிபடுகின்றனர்.

வடக்கு நோக்கி சிவனை பூஜை செய்யும் அம்பிகை சன்னதி உள்ள தலம் தக்கோலம். அசாம் மாநிலம் கௌஹாத்திக்கு அருகில் உள்ள காமாக்யாதேவி கோயிலில் தேவியின் யோனிச்சின்னம் மட்டுமே உள்ளது.

அம்பாள் வில் வடிவில் சிவனை வழிபடும் உற்சவமூர்த்தம், திருமால் பேறில் உள்ளது.

திருநெல்வேலி கங்கை கொண்டான் அருகில் உள்ள பராஞ்சேரியில் சயன கோல துர்க்கை சன்னதி உள்ளது. இங்கே பள்ளிகொண்ட துர்க்கை தரிசனம் தருகிறாள்.

மயிலாடுதுறையை அடுத்துள்ள தருமபுரத்தில் துர்க்கையம்மனுக்கென்று தனிக் கோயில் உள்ளது.

திருவெண்காட்டில் பிரம்மனுக்கு ஞானம் அருளும் பிரம வித்யாம்பிகை தலம் உள்ளது. திருவானைக்கா, திருஆமாத்தூர், அறையணி நல்லூர் போன்ற தலங்களில் சுவாமி, அம்மன் சன்னதிகள் எதிர் எதிராக அமைந்துள்ளன.

கொல்லூரில் மூகாம்பிகையே அதிகாலை மூன்றரை மணி முதல் 7 மணி வரை சோட்டானிக்கரை பகவதியாகக் காட்சி தந்தருளுவதாக ஐதிகம்.

திருநாகேஸ்வரத்தில் உள்ள அம்பிகை திருமகளும், கலைமகளும் பணி செய்யும் அம்பிகையாகக் காட்சி தருகின்றனர்.

அமர்ந்த நிலையில் எட்டுத் திருக்கரங்களுடன் அமைந்த துர்க்கை அம்மனை காஞ்சிபுரம் ஏகாம்பரேசுவரர் கோயிலில் தரிசிக்கலாம்.



Leave a Comment