மாங்காடு காமாட்சியம்மன் கோவிலில் ஆடிப்பூர விழா!


மாங்காட்டில் அமைந்துள்ளது அருள்மிகு காமாட்சி அம்மன் திருக்கோயில் இக்கோவிலின் மூலவராக காமாட்சியம்மன் அருள்பாலிக்கிறாள். இத்திருக்கோவிலில் ஸ்ரீ சக்கரத்திற்கே முக்கிய பிரதானமாக வணங்கப்படுகிறது. இத்திருக்கோயிலில் குங்கும அர்ச்சனை மிகவும் விசேஷமானது. பஞ்சலோகத்தினால் ஆன ஆதி காமாட்சி அம்மனுக்கு அபிஷேக அலங்காரங்கள் சிறப்பாக செய்யப்படுகின்றன. தபஸ் காமாட்சி மோன நிலையில் இருப்பதால், மூலஸ்தானத்திலிருந்த தவக்கோலத்திற்கு பதிலாக, ஓர் கையில் கிளியோடும் மறு கையில் கரும்போடும் கூடிய சாந்தமே உருவான “ஆதி காமாட்சி” அம்மனை மூலஸ்தானத்தில் காஞ்சிப் பெரியவர்கள் பிரதிஷ்டை செய்ததாக ஐதீகம். கிழக்குப் பார்த்த நிலையில் அம்பாள் இருந்தால், அங்கு அம்பாளுக்குத் தனிச் சன்னதி இருக்கும் என்பது மரபு. அவ்வாறே இங்கும் காமாட்சி அம்மனுக்கு பிரதானமான தனி சன்னதி உள்ளது.

இத்தகைய சிறப்புமிக்க மாங்காடு காமாட்சி அம்மன் ஆலயத்தில் ஆடிப்பூரம் விழா மிகப்பிரதானமான விழாவாக கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டுக்கான விழா வருகிற 11-ந்தேதி (சனிக்கிழமை) காலை 10.30 மணிக்கு 1008 கலச ஸ்தாபனத்துடன் தொடங்குகிறது. அன்று மாலை 6 மணிக்கு முதல்கால பூஜை நடக்கிறது. மறுநாள் (12-ந்தேதி) இரண்டாம், மூன்றாம் கால பூஜைகள் நடத்தப்படுகின்றன. 13-ந்தேதி காலை 6.30 மணிக்கு கோ பூஜை, நான்காம் கால பூஜை, விசேஷ ஹோமம், மகா பூர்ணஹு நடத்தப்படுகிறது. காலை 7.00 மணிக்கு காமாட்சி அம்மனுக்கு 1008 கலச அபிஷேகம் நடைபெறும். அன்று மாலை 6.00 மணிக்கு காமதேனு வாகனத்தில் காமாட்சி அம்மன் மாட வீதிஉலா நடைபெறும். இத்தகைய அருள்மிக்க திருவிழாவில் பங்குகொள்ள எண்ணற்ற பக்தர்கள் இத்திருத்தலத்திற்கு வரவிருக்கின்றனர்.



Leave a Comment