ஊஞ்சலில் அமர்ந்து அருள்பாலிக்கும் முத்துமாரியம்மன்...


சென்னை அசாக்நகரில் அமைந்துள்ளது அன்னை, முத்துமாரியம்மன் திருக்கோயில் சுமார் 45 வருடங்களுக்கு முன்பு சிறிய கோவிலாக இருந்த இந்தக் கோயில் அன்னையின் அருளினால் பலனடைந்த பக்தர்களின் முயற்சியால், அன்னைக்கு ஒரு அழகான ஆலயம் அமைக்க வேண்டும் என்ற ஆவலினால், 2005 ஆம் ஆண்டு ஜுன் மாதம் அழகான முகப்புடன், மூலகிருகத்தின் மேல் கதைச் சிற்பங்கள் அடங்கிய விமானத்துடன் கோவில் புனருத்தாரணம் செய்யப்பட்டு விமரிசையாகக் கும்பாபிஷேகம் நடைபெற்றது.

அருள் சுரக்கும் அன்னை முத்துமாரியம்மனை, இவ்வழியாகச் செல்லும், பள்ளி, கல்லூரி மாணவ மாணவிகள். அலுவலகம் செல்லுவோர் என பலரும், அந்தக் கோயிலின் வாசலில் ஒரு நிமிடமாவது நின்று அன்னை முத்துமாரியம்மனை வணங்கிவிட்டே செல்கிறார்கள். கண்ணை ஈர்க்கும் கோயிலின் முகப்பில் கணபதி, மாரியம்மன், கயிலாயத்தில் சிவன், பாரிவதி, கணபதி, முருகன், இராமர், சீதை, அனுமன் லிங்க பூஜை செய்தல், முருகன், வள்ளி, தெய்வானை என்று கதைச் சிற்பங்கள் கண்களைக் கவருகின்றன.

வாசலில் இரண்டு துவார சக்திகள், சுதையுடன் காணப்படுகின்றனர். சுமார் ஐந்தடி உயரமுள்ள சுதைச் சிற்பம். அழகாக வண்ணம் தீட்டபட்டுள்ளது. கோவிலின் உள்ளே கர்பக்கிரக்தில் அழகிய பட்டாடை உடுத்தி, ஐந்து தலை நாகம் குடைபிடிக்க, அதன் கீழே அம்மன் அருள்பாலிக்கிறாள். நான்கு திருக்ககைகள், ஒரு வலது கையில் சர்ப்ப உடுக்கை இன்னொரு வலதுகையில் வாள். இடது கையில் திரிசூலம் இன்னொரு இடக்கையில் கபால கிண்ணத்துடன் அம்மன் காட்சியளிக்கிறாள்.

இத்திருக்கோயிலில் அர்ச்சகர் சிவந்த ஆடை உடுத்தி அம்பாளுக்கு அர்ச்சனை செய்கிறார். அன்னையை தரிசித்து விட்டு கோயிலைச் சுற்றிவந்தால், சிறிய சிறிய விமானத்துடன் கூடிய மண்டபங்களில் சரஸ்வதி, ஆஞ்சநேயர், துர்க்கை காணப்படுகிறார்கள். துர்க்கையின் எதிரில் ஏராளமான எலுமிச்சைபழ மூடி விளக்குள் ஏற்றப்படுகிறது.

இக்கோவிலில் பெரிய ஊஞ்சல் காணப்படுகின்றன. இந்த ஊஞ்சலில் ஒரு பக்கம் கருமாரியம்மனுக்கும், இன்னொரு பக்கம் நாகாத்தம்மனும் அமர்ந்து அருள்பாலிகின்றனர். இவர்கள் அமர்ந்திருக்கும் ஊஞ்சலை சிறிது ஆட்டிவிட்டுப் பிரார்த்தனை செய்தால், திருமணம் ஆகாத பெண்களுக்கு திருமணமும், குழந்தை பாக்கியம் அற்றோர்க்கு குழந்தைச் செல்வமும் வாய்க்கப்பெறும் என்பது நம்பிக்கை.



Leave a Comment