சனிபகவான் நான்கு திருக்கரங்களுடன் அருள்பாலிக்கும் வியாக்ரபாதீஸ்வரர் ஆலயம்....


விழுப்புரம் மாவட்டம் திருக்கோயிலூருக்குக் கிழக்கே 10 கி.மீ. தொலைவிலும், விழுப்புரத்திலிருந்து திருவெண்ணெய் நல்லூர் வழியாகச் சென்றால் சுமார் 35 கி.மீ. தொலைவிலும் அமைந்துள்ளது சித்தலிங்க மடம், வியாக்ரபாதீஸ்வரர் ஆலயம்.

இவ்வூர் ஈசனுக்கு, “திருப்புலிப் பகவானார்’ என்றும், “வியாக்ர பாதீஸ்வரர்’ என்றும் திருப்பெயர்கள் ஏற்பட்டன. மூலவரான சிவலிங்கத்தின் நெற்றியில் வேடனது கோடரியால் ஏற்பட்ட வடு இருப்பதைக் காணலாம். வலது திருக்கரத்தில் தாமரையும், இடது திருக்கரத்தில் தனுசும் திகழ அழகுறக் காட்சியளிக்கிறாள் அன்னை நீல விசாலாட்சி.

இவ்வாலயத்தில் தனிச்சந்நிதி கொண்டு அருள்புரியும் விநாயகப்பெருமானை “வாதாடிப் பிள்ளையார்’ என அழைப்பார்கள். இதற்கான காரணத்தையும் காண்போம். ஒருமுறை சமயக் குரவர்கள் நால்வரில் ஒருவரான சுந்தரர், திருவெண்ணெய் நல்லூரிலிருந்து திருக்கோயிலூர் ஈசனைத் தரிசிப்பதற்காக இத்தலத்தின் வழியாக வரும்போது, இங்கு கோயில் கொண்டுள்ள ஈசனைப் பாடாமல் கடந்து சென்றார்.

இதைக் கண்ட விநாயகப் பெருமான் ஓடிச் சென்று ஊர் எல்லையில் சுந்தரரைத் தடுத்து, “எந்தை சிவனை சிந்தை செய்யாமல் போவதென்ன?” என்று சுந்தரரிடம் வாதிட்டாராம். தன் தவறை உணர்ந்த சுந்தரர், சித்தலிங்க மடம் சிவாலயத்திற்கு வந்து ஈசனைப் போற்றிப் பாடினார். “சித்தீஸ்வரம்’ என்று இத்தலத்தின் பெயர் தேவாரத்தில் இடம் பெற்றுள்ளதால் இத்தலம் தேவார வைப்புத்தலமாகப் போற்றப்படுகிறது. சுந்தரமூர்த்திநாயனாருடன் வாதாடி பாடல் பெற்றதால் இத்தல விநாயகர் “வாதாடும் விநாயகர்’ என்ற பெயருடன் அழைக்கப்படுகிறார்.

இத்தலத்தில் சனிபகவான் நான்கு திருக்கரங்களுடன், இடது கரங்களில் தண்டமும், பாசமும், வலது கரங்களில் ஜபமாலையும், சூலமும் கொண்டு அபூர்வ கோலத்துடன் காட்சியளிக்கிறார். ராகு, கேது பகவான்கள் தனித்தனியாகக் காட்சியளிப்பது அற்புதத் தரிசனமாகும்.
 



Leave a Comment