ஓம் வடிவத்தில் திருக்கோயில்


தொண்ட மண்டலத்தின் மண் திருமுருகன் புகழ்பாடும் திருநீறு என்றெல்லாம் சிறப்புடன் அழைக்கப்படுகிறது. இத்தகைய மண்டலத்தில் எல்லாம்வல்ல திருப்போரூர் முருகன் என அழைக்கப்படுகிற கந்தசாமி பெருமான் ஞானக்கடவுளாக முத்தமிழ் வேந்தனாக பக்தர்களை காத்து அருள்புரிந்து வருகின்றார்.

சென்னை மாநகரிலிருந்து 76 கிமீ தொலைவிலும், மாமல்லபுரத்திலிருந்து 15 கிமீ தொலைவிலும், செங்கல்பட்டிலிருந்து 27 கிமீ தொலைவிலும், திருக்கழுக்குன்றத்திலிருந்து 22 கிமீ தொலைவிலும், அருள்மிகு கந்தசாமி கோயில் கொண்ட திருப்போரூர் நகரம் அமைந்துள்ளது.

தற்சமயம் திருமுருகன் புகழ்பாடும் திருப்போரூர் மண்ணை முந்தைய வரலாற்று காலத்தில் அப்போது சோழர் மன்னர்களாலும் பல்லவ மன்னர்களாலும் திருப்பணி தொண்டுகளால் முருகனை சிறப்புறச் செய்தனர். இரண்டாம் நரசிம்ம பல்லவன் (கி.பி.691) கால கல்வெட்டு இக்கோயிலின் மண்டபத்தூண்கள் இரண்டில் காணப்படுகிறது. முதலாம் குலோத்துங்கன் சோழ காலத்தில் வைக்கப்பட்ட கல்வெட்டு ஒன்றில் நாட்டு (கிபி 1076) இவ்வூர் ஜெயங்கொண்ட சோழ மண்டல ஆமூர் கோட்டம் குமிழி நாட்டு திருப்போரியூர் சுப்பிரமணிய தேவர் என்பதை அன்னை தெய்வயானை சன்னதிக்கு அருகில் உள்ள சுவரில் காணப்படுகிறது.

கந்தபுராணத்தில் சூரபத்மன் வம்சத்தை அழிக்க அன்னை பராசக்தி அருளிய வேலாயுதத்துடன் முருக பெருமான் போர் தொடுத்தார். முருகபெருமான் தனது படைவீடுகளில் ஒன்றான திருப்பரங்குன்றம் மண்ணில் நின்று அசுரர்களின் அகர எண்ணத்தையும் திருச்செந்தூர் கடல்நீரில் நின்று சூரபத்மனையும் அவனது மாயை உருவத்தையும் திருப்போரூரில் விண்ணில் பறந்தபடி தாரகா சூரனையும் அவனது ஆணவத்தையும் அழித்தார்.

முந்தைய தமிழகத்தின் ஆட்சி பீடத்தில் இருந்த நவாப் மன்னர்கள் கந்த கடவுளுக்கு சிறப்புமிகு கோயிலை அமைக்க வேண்டும் என எண்ணினார்கள். அச்சமயத்தில் நிலவிய அரசியல் சூழ்நிலைகள் கோயில் கட்டும் எண்ணத்துக்கு முட்டுக்கட்டை போட்டது.

இருந்த போதிலும் நவாப் மன்னர்களின் எண்ணத்தை செயல்படுத்த காரணகர்த்தாவாக இருந்தவர் ஆதிகுரு ஸ்ரீமத் சிதம்பரசுவாமி. ஸ்ரீமத் சிதம்பரசுவாமி இறைவழிபாட்டில் திளைத்து தியானம் செய்யும் போது அவரது கண்முன் முருக பெருமானின் வாகனமாகிய மயில் பறந்துச் செல்வது போலத் தெரிந்தது. திடீரென்று மயில்வாகனம் தோன்றி மறைந்ததால் சிதம்பரசுவாமி அதன் விவரத்தை குருபிரானிடம் சொல்லி தெரிந்துக்கொள்ள ஆசைப்பட்டார்.


முருகபெருமானின் சூட்சமத்தை தெரிந்துக் கொண்ட குருபிரான் நீ மதுரை சென்று மீனாட்சி அம்மனை வேண்டி தவம் செய். அப்போது உனக்கு தெளிவான பதில் கிடைக்கும். அதன்படி நீ தெய்வீக பணிகளை செய் என்றார்.

குருபிரானின் கட்டளையின்படி சிதம்பரசுவாமி மதுரைக்குச் சென்று அங்குள்ள மீனாட்சி அம்மனை நெஞ்சுருக வேண்டினார். 48 நாட்கள் ஊண் உறக்கம் இன்றி கடும் தவம் செய்தார். இருந்தபோதிலும் மீனாட்சிதேவியின்கருணை பார்வை விழவில்லை. பின்பு அவளது புகழை கசிந்துருகி நாவினிக்க பாடினார்.

சிதம்பரசுவாமியின் உண்மையான பக்தியைக் கண்டு வியந்த மீனாட்சி அம்மன் அவரின் கண்முன் தோன்றினார். உனது ஆழ்ந்த பக்தியை மெச்சினேன். வடக்கு திசையில் புராண வரலாற்றில் சிறப்பிடம் பெற்ற யுத்தபுரி என்றும் அங்கு வாழ்கின்ற மக்களால் திருப்போரூர் எனச் சொல்லப்படுகிற இடத்தில் எமது மைந்தன் முருகனுக்கு திருக்கோயில் அமைத்து வழிபடு எனச் சொல்லி மறைந்தார்.

அன்னை மீனாட்சியின் அருட்கட்டளையின் படி சிதம்ரபசுவாமி மதுரையில் இருந்து வடக்கு திசையில் உள்ள புத்தபுரி என்ற இடத்துக்கு வந்தார். யுத்தபுரி என்ற இடம் அடர்ந்த செடி, கொடிகளும் பனை மரங்களும் சூழ்ந்து இருந்தது. பல பகுதிகளில் முருகனுக்கு கோயில் அமைக்க உரிய இடம் கிடைக்காமல் தேடி அலைந்து சிதம்பரசுவாமி சோர்ந்து போனார் நிரந்தரமான இடத்தில் இருக்கவும் தம்மை தேடி அலைகின்ற தொண்டருக்கு அருள்பாலிக்க எண்ணிய முருகபெருமான் அடர்ந்த பனை மரங்களுக்கு இடையே ஒரு பனை மரத்தின் கீழ் சுயம்பு உருவில் புற்று மண்ணால் மூடிய நிலையில் காட்சி அளித்தார்.

சூரியனைக்கண்ட பனி போல தமது தேடலுக்கு வழி காட்டிய முருகபெருமானை சிதம்பரசுவாமி போற்றி வணங்கினார். அதன்பின்பு சுயம்பு வடிவில் தோன்றிய முருகபெருமானை எடுத்து வந்து வேம்படி விநாயகர் கோவிலில் வைத்து பூஜைகளை செய்து வழிப்பட்டார். தனக்கு கோயில் அமைக்காமல் வெறும் வழிபாடு மட்டும் செய்து வந்த சிதம்பர சுவாமிக்கு நினைவூட்ட திடீரென்று ஒரு நாள் சிதம்பர சுவாமியின் கனவில் வந்த முருகன் சுவாமியின் நெற்றியில் விபூதியை பூசி விட்டு மறைந்தார்.

அந்த நொடிப்பொழிதில் இருந்து தமக்கு எத்தகைய வடிவத்தில் திருக்கோயில் அமைக்கப்பட வேண்டும் என்பதை தத்ரூபமாக சிதம்பரசுவமிக்கு முருகன் எடுத்துக்காட்டினார். தன்னை நாடி வருகின்ற பக்தர்களின் குறைகளை தீர்த்த காரணத்தினால் சிதம்பர சுவாமி அவர்கள் நன்கொடையாக பணத்தை வாரி வழங்கினார்கள்.

பக்கத்து பகுதிகளில் கொள்ளை அடிக்க கொள்ளையர் கூட்டத்தினர் அவ்வழியே வந்தனர். சுவாமியிடம் கோயில் கட்டுவதற்கு நிறைய பணம் வைத்து இருப்பதை உணர்ந்த அவர்கள் சிதம்பர சுவாமியை மிரட்டி பணத்தை கொள்ளை அடித்துச் சென்றனர்.

கொள்ளையர்களால் திருப்பணிக்காக சேமித்து இருந்த பணம் கொள்ளை அடிக்கப்பட்டதை எண்ணி முருகபெருமானிடம் சிதம்பர சுவாமி அழுது புலம்பினார். அழுது புலம்பிய சிதம்பர சுவாமிக்காக முருகன் கொள்ளையர்களின் பார்வையை பறித்தார். தங்களது கண்பார்வை பறிபோனதற்கு சுவாமியின் பணத்தை கொள்ளை அடித்ததால் தான் இத்தகைய நிலை ஏற்பட்டுள்ளது என்பதை கொள்ளையர்களுக்கு முருகன் உணர வைத்தார். தங்களது செயலுக்கு மன்னிக்கும்படியும் எடுத்துச் சென்ற பணத்தை மீண்டும் ஒப்படைப்பதாக சொல்லி சிதம்பரசுவாமியின் காலில் விழுந்தனர்.

பின்பு அவர்கள் கொள்ளை அடித்த பணத்துடன் தமது சொந்த பணத்தையும் சேர்த்து வழங்கிவிட்டு சென்றனர். தமது செயலுக்கு வருந்தி மன்னிப்பு கேட்ட கொள்ளையர்களுக்கு கண் பார்வை கிடைக்க சிதம்பர சுவாமி அருளினார். அப்பகுதி மக்களுக்கு ஏற்பட்ட நோய்நொடிகளுக்கெல்லாம் முருகபெருமானின் திருநீற்றை வழங்கி அவர்களை சிதம்பர சுவாமி திருப்போரூர் மற்றும் சுற்றுப்புற பகுதிகளிலிருந்து ஆயிரக்கணக்கான மக்கள் பெரும்படையாக சூழ்ந்து இருந்தனர். தமது நன்றிக்கடனாக அம்மக்கள் சுவாமிக்கு நன்கொடையாக பணத்தையும் பொருள்களையும் வாரி வழங்கினார்கள். இதனால் அவர்களது நன்கொடை பொருள்கள் மலை போல குவிந்தன.

எல்லாம்வல்ல முருகபெருமானின் அருளால் சிதம்பரசுவாமி குருவருளால் தீராத வயிற்றுவலி நீரில் தோன்றி மறையும் நீர்குமிழி போல காணாமல் போனது. இதனால் மகிழ்ச்சி அடைந்த நவாப் மன்னர் முருகன் கோயிலின் வளர்ச்சிக்காக சுமார் 650 ஏக்கர் நிலங்களை தானமாக வழங்கினார். தானமாக பெற்ற அந்த நிலத்தில் சுவாமி திருக்கோயில் கட்டும் பணியை செய்து முடித்தார். சிதம்பர சுவாமி முழு முயற்சியால் சுமார் 17 ம் நூற்றாண்டுகளுக்கு பிற்பட்ட காலத்தில் கட்டப்பட்ட திருக்கோயில் என்றே சொல்லவேண்டும். சுவாமிகள் திருக்கோயில் மடத்திலேயே தங்கி முருகனுக்கு பூஜை செய்து அழகு பார்த்தார்.

திருப்போரூர் சந்நிதி முறை தலைப்பில் சிதம்பர சுவாமி 762 பாடல்களை முருகன் மீது பாடியுள்ளார். இதனை பிற்காலத்தில் பக்தர்களால் முருக கடவுளை வழிபடும் போது பாடி வருகின்றனர். அருட்பிரகாச வள்ளலார் பாம்மபன் சுவாமிகள் சந்தானலிங்க சுவாமிகள் அருணகிரிநாதர் போன்ற ஆன்மீக சான்றோர்களால் திருமுருகனை வழிபாடு செய்து பாடப்பட்ட திருத்தலம்.

முழுமுதற் கடவுளான விநாயக பெருமான் இங்கு கணநாதனாக திருக்கோயிலுக்கு நுழையும் முன்புற பகுதியிலேயே கிழக்கு நோக்கி அமர்ந்துள்ளார். அவரை வணங்கிய பின்பே கந்த கடவுளை வணங்க ராஜகோபுரம் வழியாக கருவறைக்கு செல்லவேண்டும். கணநாதர் சந்நிதியை சற்று தள்ளி ஆதிகுரு சிதம்பர சுவாமி சந்நிதி உள்ளது. ராஜகோபுரம் நுழைவதற்கு முன்பு பெரிய வட்ட வடிவிலான மண்டபம் உள்ளது. இங்கு கொடி மரம் மயில் வாகனம் பலிபீடம் போன்றவை உள்ளது.

தமிழகத்தில் உள்ள முருகன் சந்நிதிகளில் இல்லாத சிறப்பாக வட்ட வடிவ மண்டபம் அமைக்கப்பட்டு உள்ளது என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. பலிபீடத்தின் முன்புறம் தமது பிரார்த்தனையில் ஒன்றாக உப்பு மினகு ஆகியவற்றை பக்தர்கள் கந்த பெருமானுக்கு காணிக்கை செலுத்தி நிறைவேற்றிக் கொள்கின்றனர்.

வட்டவடிவ மண்டபத்தைக் கடந்து ராஜகோபுரம் 24 கால் மண்டபம் வழியாக உள்ளே சென்றால் வலதுபுறத்தில் முருகனின் மனைவியர்களில் ஒருவரான தெய்வயானை சந்நிதி உள்ளது. இச்சந்நிதிக்கு எதிர்பக்கம் உள்ள தூணில் முருகபெருமானின் கோயில் வளர்ச்சி பணிகளுக்காக 650 ஏக்கர் நிலத்தை வழங்கிய ஆற்காடு நவாப் திருவுருவ படம் வரையப்பட்டு உள்ளது. இடது புறத்தில் கருவறை மூலவரான முருகன் வள்ளி தெய்வயானை திருவுருவ சிலைகளுக்கு மட்டும் அணிவிக்கப்படுகிற வில்வமாலை இங்கு கட்டப்படுகிறது. கடைகளில் விற்கப்படுகிற மற்ற மாலைகள் இங்கு அணிவிக்கப்படவில்லை.

இதற்கு எதிர்பகுதியில் இத்திருக்கோயிலை உருவாக்கிய ஆதிகுரு சிதம்பரசுவாமி படம் அமைக்கப்பட்டு உள்ளது சுனை விநாயகரை வணங்கி வழிப்பட்டபின்பே கருவறை நோக்கி நடக்க ஆரம்பித்தால் நம்மை அறியாமல் கை கூப்பியபடி முருகா முருகா என அழைக்கத் தோன்றும். கருவறையில் உள்ள முருகர் மற்றும் தெய்வயானை ஆகியோர் பெண் பனை மரத்தின் அடியில் சுயம்பு திருவுருவில் காட்சி அளித்து கொண்டிருக்கிறார். தானாக தோன்றிய முருகர் வள்ளி தெய்வயானை ஆகிய திருவுருவ சிலைகளுக்கு எந்த காரணத்தைக் கொண்டும் அபிஷேக அலங்காரம் செய்யப்படுவதில்லை. அபிஷேகத்துக்கு பதிலாக புனுகு ஜவ்வாது போன்ற வாசனை திரவிய பொருட்களால் சாத்தப்படுகிறது. எதிர் திசையில் பலிபீடமும் யானை வாகனமும் அமைந்து உள்ளது. ஐராவதம் என அழைக்கப்படுகிற யானை வாகனத்தை தேவேந்திரன் தனது மகள் தெய்வ யானைக்காக சீதனமாக வழங்கப்பட்டுள்ளதை இங்கு குறிப்பிடத்தக்கது. கிழக்கு திசையை நோக்கியுள்ள மூலவர் சந்நிதியில் அபிஷேக ஆராதனைகளுக்காக முருகன் தெய்வயானை மற்றும் வள்ளி சிலைகள் சிறிய உருவத்தில் அமைக்கப்பட்டுள்ளது.

மூலவர் சந்நிதிக்கு மிக அருகிலேயே ஸ்ரீசக்கர ஸ்தானம் என அழைக்கப்படுகிற ஸ்ரீ சக்கர சந்நிதி உள்ளது. இங்கு சிதம்பர சுவாமி தவம் செய்த இடமாகும், ஸ்ரீசக்கர சந்நிதியில் வழிபாடு செய்து விட்டு வந்தால் மனக்கவலை எல்லாம் மாயமாய் பறந்தோடும் வேண்டுவதை நிறைவேற்றி தரும் பீடம் இச்சந்நிதி அமைந்து உள்ளது.

கருவறையிலிருந்து வெளியே தெற்கு புறமாக உற்சவர் மண்டபம் உள்ளது. இங்கு தான் உற்சவர் சிலைகளுக்கு பக்தர்களால் செய்யப்படுகிற அபிஷேக ஆராதனைகள் சுவாமி திருவீதி உலா போன்றவை நடைபெறுகிறது. ராஜகோபுரத்தின் உட்புற பகுதியின் பின் புறத்தில் வன்னியநாதர் விசாலட்சி நாகதேவதைகள் போன்ற சந்நிதிகள் உள்ளது. இங்கு நவகிரங்களுக்கு தனியாக சந்நிதி இல்லை. அதே சமயம் சூரியன் சனி இரு கிரங்களுக்கு மட்டும் தனித் தனியாக சந்நிதிகள் உள்ளது.Leave a Comment