திருப்பதியில் அன்னதானம் செய்ய தயாரா? இதோ அறிமுகமாகிறது புதிய திட்டம்!


திருப்பதியில் அன்னதான செலவை பக்தர்கள் ஏற்கும் புதிய திட்டத்தை திருமலை திருப்பதி தேவஸ்தானம் அறிவித்து இருக்கிறது.
திருமலையில் உள்ள அன்னமைய்யா பவனில் நடைபெற்ற தேவஸ்தான அதிகாரிகள் ஆலோசனை கூட்டத்தில் இதற்கான முடிவு எடுக்கப்பட்டு உள்ளது. இதன்படி திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு வழங்கும் அன்னதான திட்டத்தில், ஒரு நாள் அல்லது ஒரு வேளை அன்னதானம் வழங்கலாம்.


திருமலை திருப்பதி தேவஸ்தானத்தினர் 1983 முதல் பக்தர்களுக்கு இலவச அன்னதான திட்டத்தை செயல்படுத்தி வருகின்றனர். பக்தர்கள் உண்டியலில் காணிக்கை செலுத்தும் பணத்தில் கிடைக்கும் வங்கி வட்டியில் அன்னதான திட்டம் செயல்பட தொடங்கியது. முதலில் 2,000 பக்தர்களுக்கு மட்டுமே அன்னதானம் செய்யப்பட்டது.

இத்திட்டத்திற்கு பக்தர்களிடையே நல்ல வரவேற்பு இருந்ததால், தற்போது இரு வேளையும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது. திருமலை மட்டுமல்லாது, திருப்பதி ரயில் நிலையம், பஸ் நிலையம், சத்திரங்கள், திருச்சானூர் போன்ற அனைத்து இடங்களிலும் இரு வேளைகளிலும் தேவஸ்தானத்தினர் இலவச அன்னதான திட்டத்தை விஸ்தரித்துள்ளனர்.


திருமலையில் மட்டும் ஒரு நாளைக்கு சுமார் 85 ஆயிரம் பக்தர்கள் வரை இலவசமாக உணவு உண்டு வருகின்றனர். திருமலையில் மாத்ரு ஸ்ரீ தரிகொண்டா வேங்கமாம்பாள் அன்ன பிரசாத சத்திரத்தில் இத்திட்டம் வெற்றிகரமாக நடத்தப்பட்டு வருகிறது. காலை 11 மணி முதல் மதிய உணவும், மாலை 5 மணி முதல் இரவு உணவும் பரிமாறப்பட்டு வருகிறது.


அன்னதான திட்டத்திற்காக திருப்பதி தேவஸ்தானத்திற்கு ஒரு நாளைக்கு ரூ. 26 லட்சம் செலவாகிறது. இத்திட்டத்திற்கு பல பக்தர்கள் தாங்களாகவே முன் வந்து நன்கொடை வழங்கி வருகின்றனர்.


இந்நிலையில், ஸ்ரீவாரி அன்னபிரசாத திட்டத்திற்கு நன்கொடை வழங்கும் பக்தர்கள் இனி ஒரு நாளுக்கு உண்டான செலவை ஏற்றுக்கொள்ளும் புதிய திட்டத்தை திருப்பதி தேவஸ்தானம் அறிமுகப்படுத்தி இருக்கிறது. ஒரு நாளைக்கு ரூ. 26 லட்சம் நன்கொடையாக அளித்தால், அவர்களது பெயரில் அன்றைய தினம் பக்தர்களுக்கு இலவச அன்னதானம் செய்யப்படும். அவர்களது பெயரும் டிஜிட்டல் போர்டில் வைக்கப்படும்.


காலை சிற்றுண்டிக்கு ரூ. 6 லட்சம், மதிய உணவிற்கு ரூ. 10 லட்சம், இரவு உணவிற்கு ரூ. 10 லட்சம் என தனித்தனியாக கூட இத்திட்டத்திற்கு நன்கொடை வழங்கலாம். இதற்கு வரி விலக்கும் உண்டு என்று திருப்பதி திருமலை தேவஸ்தானம் அறிவித்து இருக்கிறது.Leave a Comment