திருமணம் வரம் கைகூட வைக்கும் கோயில்...


விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் பேருந்து நிலையம் அருகில் அமைந்துள்ளது ஸ்ரீவரதராஜ பெருமாள் கோயில். இந்த கோயில் கருங்கற்களைக் கொண்டு கற்றளி முறையில் சுமார் 500 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டுள்ளது. கோயில்கள் கட்டி முடித்தவுடன் கும்பாபிஷேகம் நடத்துவது வழக்கம். அப்போது கோயிலின் மேல் பகுதியில் கலசங்கள் அமைப்பார்கள்.
இந்த கலசங்கள் செப்பு, தங்கம், வெண்கலம் போன்ற உலோகங்களால் செய்யப்பட்டதாக இருக்கும். ஆனால் இந்த கோயிலில் அமைக்கப்பட்டுள்ள மூன்று கலசங்களும் மண் பானைகளால் உருவாக்கப்பட்டுள்ளது. இது போன்ற மண் கலசங்கள் இப்பகுதியில் உள்ள எந்த கோயிலிலும் இல்லை என்பது ஆச்சரியமாக உள்ளது. இங்குள்ள மூல சன்னிதானத்தில் வரதராஜ பெருமாள், ஸ்ரீதேவி தாயார், ஆண்டாள் அம்மாள் சமேதராக காட்சியளிக்கிறார்.

குழந்தை பாக்கியம்:

இந்த கோயிலில் விநாயகர், ஆண்டாள், கிருஷ்ணர், சச்சிதானந்தாழ்வார், ஆஞ்சநேயர், கருடாழ்வார் மற்றும் லட்சுமி சிலைகளும் மிக அழகிய வேலைப்பாடுகளுடன் அமைந்துள்ளன. இந்த கோயிலில் உள்ள கிருஷ்ணர் சிலைக்கு ரோகிணி நட்சத்திரத்தில், குழந்தையில்லா தம்பதிகள் பால் அபிஷேகம் செய்தால் அவர்களுக்கு ஆண் குழந்தை பிறக்கும் என்பது ஐதீகம். இங்கு சனிக்கிழமை தோறும் பகவானுக்கு சிறப்பு அபிஷேகங்கள் மற்றும் பூஜைகள் செய்கின்றனர். இதுபோல் ஒவ்வொரு மாதமும் உபயதாரர்களால் திருவோணம் நிகழ்ச்சி மிகச்சிறப்பாக நடத்தப்படுகிறது. சனிக்கிழமை தோறும் சிறப்பு பூஜை நடைபெறும். தினமும் காலை, மாலையில் பூஜைகள் நடத்தப்படுகிறது.

சொர்க்கவாசல் திறப்பு:

மேலும் ஆண்டு தோறும் மார்கழி மாதத்தில் பூடாவள்ளி நிகழ்ச்சியும், சித்திரை மாதம் திருக்கல்யாண உற்சவமும் மிகச்சிறப்பாக நடத்தப்படுகிறது. மார்கழி மாதம் வைகுண்ட ஏகாதசி விழாவின்போது சொர்க்கவாசல் திறப்பும் விமரிசையாக நடத்தப்படுகிறது. இந்த நிகழ்ச்சிகளில் மரக்காணம் மட்டுமின்றி சென்னை, புதுவை, காஞ்சிபுரம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொள்கின்றனர். இந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டின் கீழ் இந்த கோயில் பராமரிக்கப்பட்டு வருகிறது.

திருமண யோகம்:

பழமை வாய்ந்த கோயில்கள் என்றால் ஒவ்வொரு கோயிலுக்கும் ஒரு தனி சிறப்பு இருக்கும் அந்த வகையில் திருமணம் ஆகாதவர்கள் இந்த கோயிலுக்கு வந்து பெருமாளை பயபக்தியுடன் வேண்டி வணங்கினால் அவர்களுக்கு உடனடியாக திருமணம் நடைபெறும் என்று கூறுகின்றனர். இதுபோல் திருமணம் நடந்த பின்னர் கணவன்மனைவிக்கு இடையே பிரச்னை ஏற்பட்டு பிரிந்து இருந்தாலும் அவர்கள் இங்கு வந்து பூஜை செய்து வணங்கினால் பிரச்னைகள் அனைத்தும் உடனடியாக தீர்ந்து மீண்டும் சமாதானம் அடைவார்கள்.

செல்வது எப்படி?

சென்னையில் இருந்து வரும் பக்தர்கள் கிழக்கு கடற்கரை சாலை வழியாக வந்தால் பூமீஸ்வரர் கோயில் நிறுத்தத்தில் இறங்கி மரக்காணம் செல்லும் பேருந்தில் வந்தால் பஸ் நிலையம் அருகில் உள்ள ஸ்ரீவரதராஜபெருமாள் கோயிலை அடையலாம். திண்டிவனம், புதுச்சேரியில் இருந்தும் நேரடியாக மரக்காணத்திற்கு பேருந்து வசதி உள்ளது.



Leave a Comment