ஹோரை சாஸ்திரம்


பலரும் அன்றாட செயல்களைக்கூட பஞ்சாங்கம், ஜோதிடத்தை அனுசரித்து நடந்து கொண்டு நன்மைகளை அனுபவித்து வருகின்றர். அந்த வகையில் ஹோரை சாஸ்திரத்தை தற்போது நம்மில் பலரும் பின்பற்றி பயன்படுத்தி வருகின்றர்.
ஹோரை சாஸ்திரம்: ஹோரை சாஸ்திரம் ஒரு வாரத்திற்கு வரும் ஏழு கோள்களை கொண்டே கணிக்கப்பட்டிருகிறது. அன்றைக்கு நடைமுறைக்கு வரக்கூடிய நாட்களுக்கு அதிபதியாக உள்ள கோளின் ஹோரை , சூரிய உதயம் முதல் சுமார் ஒரு மணி நேரத்திற்கு நடைமுறைக்கு வரும்.
ஹோரையில் வாரத்தில் வருவதுபோல் ‍‌ஞாயிறு (சூரியன்), திங்கள் (சந்திரன்), செவ்வாய், புதன், வியாழன் (குரு), வெள்ளி (சுக்கிரன்), சனி என தொடர்ந்து வருவது போல நடைமுறைக்கு வராமல் சூரியன், சுக்கிரன், புதன், சந்திரன், சனி, குரு, செவ்வாய் என்ற தொடர் சுழற்சி முறையில் நடைமுறைக்கு வரும்.
அன்றைய தின அதிபதிக்குரிய கோளின் ஹோரை ஆரம்பத்தில் நடைபெற்று, அடுத்தடுத்தக் கோள்களின் ஹோரை நடைமுறைக்கு வரும். நாட்கள் மாறி மாறி வந்தாலும், கோள்களின் ஹோரைகள் ஹோரைக்குரிய கோள்களின்படி தொடர் சுழற்சி முறையிலேயே நடைமுறைக்கு வரும். நாட்களில் சுப நாள், அசுப நாள் என்றும், கோள்களில் சுப கோள், அசுப கோள் என்றும் இருப்பதுபோல் ஹோரைகளிலும் சுப ஹோரை, அசுப ஹோரை இருக்கும் என்று பலரும் நினைத்து ஹோரையைத் தவறாகப் பின்பற்றி வருகின்றனர்.
வார நாட்களில் திங்கள், புதன் ,வியாழன் , வெள்ளி, ‍‌ஞாயிறு ஆகியன சுப நாட்கள் என்றும், சனி, செவ்வாய், அசுப நாட்கள் என்றும் சிலர் கடைபிடிபதுபோல் ஹோரையையும் அவ்வாறே பிரித்து சுப ஹோரை, அசுப ஹோரை என்றும் பின்பற்றி வருகின்றனர்.
ஆனால், ஹோரை சாஸ்திர விதிமுறையில் சுப ஹோரை, அசுப ஹோரை என்றில்லை என்பதை அனைவரும் அறிந்துகொள்ள வேண்டும். ஒவ்வொரு குறிப்பிட்ட ஹோரையிலும், வெவ்வேறு குறிப்பிட்ட பணிகளைச் செய்யலாம் என்று ஹோரை சாஸ்திர விதிமுறை கூறுகிறது.



Leave a Comment