குழந்தை பாக்கியம் அருளும் ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி...


புதுச்சேரியில் எண்ணற்ற சித்தர்கள் வாழ்ந்து ஜீவசமாதி அடைந்துள்ளனர். இத்தகைய சிறப்புமிக்க புதுவைக்கு மேலும் சிறப்பு சேர்க்கும் வகையில், வம்பாகீரப்பாளையம் ஸ்ரீஅங்காள பரமேஸ்வரி அம்மன் கோயில் அமைந்துள்ளது.

மீனவ கிராமமான இப்பகுதி ஆரம்ப காலங்களில் வெண்பா என்று அழைக்கப்பட்டுள்ளது. பின்னர் அது வம்பா என்று திரிந்து காலப்போக்கில் வம்பாகீரப்பாளையம் என்று பெயர் மாறியதாக கூறப்படுகிறது. இவ்வூரில் வடக்கு நோக்கி வீற்றிருக்கும் அங்காள பரமேஸ்வரி அம்மன் தன்னை வழிபடுவோர்க்கு பேரருள் புரிந்து காத்து வருகிறார். இக்கோயில் பிரெஞ்சுக்காரர்கள் ஆட்சியில் கட்டப்பட்ட பழமை வாய்ந்த கோயிலாகும். பொதுவாக சிவன் கோயில்களில்தான் நந்தி சிலை இடம் பெற்றிருக்கும். ஆனால், இங்கு அம்மனுக்கு எதிரே நந்தி சிலை அமர்ந்திருப்பது இக்கோயிலின் தொன்மையை உணர்த்துகிறது.

அதேபோல் பெயர் தெரியாத ஒரு சித்தர் சிலையும், அம்மன் பீடத்திற்கு கீழே சித்தர் உருவமும் இடம் பெற்றுள்ளது கூடுதல் சிறப்பாகும். இக்கோயிலில் ஆண்டுதோறும் மாசி மாதம் 9 நாட்கள் திருவிழா நடைபெறுகிறது. பல்வேறு காரணங்களால் 1962 முதல் 1996 வரை கோயில் மூடப்பட்டது. பின்னர், இப்பிரச்னைகள் சரி செய்யப்பட்டு 1997ம் ஆண்டு முதல் திருவிழா நடத்தப்பட்டு வருகிறது. குறிப்பாக, மாசி மாதம் சிவராத்திரி அன்று கொடி ஏற்றத்துடன் தேரோட்டமும், தொடர்ந்து, யாளி, அன்னம், யானை, ரிஷபம், குதிரை ஆகிய வாகனங்களில் தினந்தோறும் அம்மன் வீதியுலா நடைபெறுகிறது. கர்மவினை, ஊழ்வினை நீங்கும்: முக்கிய நிகழ்வாக, 7ம் நாள் மதியம் சிம்ம வாகனத்தில் வீற்றிருக்கும் அம்மனுக்கு சன்னியாசித்தோப்பில் வல்லாள மகாராஜா கதையை வர்ணித்து மயானக் கொள்ளை நடைபெறுகிறது. இதனை காண ஆயிரக்கணக்கான பக்தர்கள் அங்கு திரண்டு சாமி தரிசனம் செய்வார்கள்.

ஒவ்வொரு அமாவாசை அன்றும் அம்மனுக்கு தீச்சட்டி எடுத்து வழிபட்டால் கர்ம வினை மற்றும் ஊழ்வினையிலிருந்து விடுபடலாம். இதன் காரணமாக, ஒவ்வொரு மாதம் அமாவாசையன்று ஏராளமான பக்தர்கள் தீச்சட்டி எடுத்து அம்மனை வழிபடுகின்றனர். இது தவிர திருமண தடை, குழந்தையின்மை, தொழில்முடக்கம், குடும்ப பிரச்னை, மன சஞ்சலம் உள்ளிட்ட அனைத்து பிரச்னைகளுக்கும் இங்கு தீர்வு உண்டு. அம்மனை தரிசிக்க தினமும் காலை 7 மணி முதல் 11 மணி வரையும், மாலை 5.30 மணி முதல் 9 மணி வரையும் கோயில் நடை திறக்கப்படுகிறது. இக்கோயிலை சுற்றி முருகர், விநாயகர், பாவாடைராயன், துலுக்கானத்தம்மன் சன்னதிகள் அமைந்துள்ளது. மேலும் ஆண்டுதோறும் வைத்திக்குப்பத்தில் நடைபெறும் மாசி மக தீர்த்தவாரியில் சிறப்பு அலங்காரத்தில் அங்காள பரமேஸ்வரி அம்மன் (உற்சவர்) பங்கேற்று பக்தர்களுக்கு அருள் பாலிக்கின்றார். இக்கோயிலில் அக்கா சுவாமிகள் தரிசனம் செய்துள்ளதாகவும் வாய்வழி தகவல் தெரிவிக்கின்றன. புதுச்சேரி புதிய பஸ் நிலையத்தில் இருந்து 2 கிலோ மீட்டர் தூரத்திலும், ரயில் நிலையத்தில் ஒரு கிலோ மீட்டர் தூரத்திலும் வம்பாகீரப்பாளையம் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயில் அமைந்துள்ளது.

துலுக்கானத்தம்மன் சிறப்புகள்

கோயில் வளாகத்திலேயே கிழக்கு திசையை நோக்கி துலுக்கானத்தம்மன் கோயில் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் புரட்டாசி மாதம் 10 நாள் கொலு வைத்து நவராத்திரி உற்சவம் கொண்டாடப்படுகிறது. இதன் ஒரு பகுதியாக, விஜயதசமி அன்று மட்டும் சாமி வீதியுலா நடைபெறுகிறது.



Leave a Comment